இவனும் அவளும்

234

இவன் கல்லூரியில் காலெடுத்து வைப்பதற்கு முதல் நாள் தாய் அழைக்கிறார். “தம்பி , இந்த லவ்வு கிவ்வு பண்ணிடாத , நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராது , உம்மேல நம்பிக்க இருக்கு , இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமையும் கொஞ்சம் பயமும் எனக்கிருக்கிறது” என்கிறார்.

“அம்மா , நான் உங்க பிள்ளை , அப்படியெல்லாம் நீங்க பயப்பட வேண்டாம் , இருநூறு கிலோமீட்டர் தாண்டிப் படிக்கப் போனாலும் , உங்க பேரையும் , அப்பா பேரையும் காப்பாற்றுவேன்” என்று நம்பிக்கை கொடுத்துவிட்டுச் செல்கின்றான்.

இவனுடைய குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு கல்லூரியில் காலெடுத்து வைக்கின்றான். முதல் நாள் இவனிடம் நிறையவே பயம் இருந்தது. இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்கள் முறைத்துப் பார்த்துக்கொண்டே கெத்துக்காட்டிக்கொண்டு செல்கிறார்கள். இப்படி உர் என்று முறைத்துக்கொண்டு சென்றால் சீனியர் என்று புரிந்துகொண்டு சலாம் போட வேண்டும். இவனுக்கு முதல் நாள் அது புரியவில்லை என்றாலும் போகப்போக நண்பர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.

அதுவரை பெற்றோர்களின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தவனுக்கு கல்லூரி வாழ்க்கையில் சுதந்திரம் நிறையவே கிடைத்தது. கல்லூரி விடுதியில் இவன் தங்கவில்லை. வெளியில் நண்பர்களோடு தங்கிக்கொண்டான். அங்கும் இரண்டு சீனியர்கள் இருந்தார்கள். ரேக்கிங் என்ற பெயரில் இவனை அவர்கள் பாடிக்கொண்டே ஆடச் சொல்லியிருக்கிறார்கள். இவனுடைய ஆட்டத்தைப் பார்த்த அவர்கள் இவனை ரேக்கிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்கள். காரணம் இவன் ஆடும் ஆட்டம் அவர்களை ரேக்கிங் செய்வதைப் போல் பிரமாதமாக இருந்திருக்கிறது.

தினமும் ஐந்து கிலோமீட்டர் கல்லூரிக்குப் பேருந்துப் பயணம். பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது வீட்டிற்குத் தெரியாமல் நண்பர்களோடு சேர்ந்து “டைட்டானிக்” படம் பார்த்தது மட்டுமே அதுவரை இவனுக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. இப்பொழுது முழு சுதந்திரம் இவனுக்குக் கிடைத்துவிட்டது. அதை அனுபவிக்க ஆரம்பித்தான்.

எந்நேரமும் பாக்கெட்டில் ஒரு சீப்பு வைத்துக்கொள்வது வழக்கம்.அவ்வப்போது தலை வாரிக்கொண்டும் , முகத்தைப் பளிச்சென்று வைத்துக்கொண்டும் தன் அழகிற்கு குறை வராமல் பார்த்துக்கொண்டான். முதலாம் வருடத்திலேயே வகுப்பில் நிறைய தோழிகள் கிடைத்தார்கள். ஆண் நண்பர்களும் நிறையவே கிடைத்தார்கள். இருந்தாலும் இவனுக்கு கிடைத்த பெண் நட்புகளை பார்த்து நிறைய ஆண் நண்பர்கள் பொறாமைப்பட்டார்கள். அதைக் கண்ட இவன் காலரைத் தூக்கிக்கொண்டு “தான் ஒரு ஹீரோ” என்று கெத்தாக நினைத்துக்கொண்டான். காலப்போக்கில் நண்பர்கள் இவனை “மச்சி , நீ கலக்குடா , நீ மாஸ் – டா” என்று உசுப்பி விட்டு உசுப்பி விட்டு ஹீரோ அந்தஸ்த்தைக் கொடுத்திருந்தபோதுதான் இவன் அவளை பார்க்கின்றான்.

அவள் இவன் தங்கியிருந்த பகுதியில் இருக்கும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவந்தாள். சிகப்பு நிறம் கொண்ட அவள் இவனுக்கு தேவதையாகத் தெரிந்தாள்.இவனுக்கும் அவளுக்கும் சுமார் மூன்று நான்கு வயது வித்தியாசம் இருக்கும். மாலை ஐந்து மணிக்குப் பள்ளியை விட்டு இவன் வசிக்கும் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.இருவரும் பார்த்துக்கொண்டார்கள். வெறும் பார்த்துக்கொள்வது மட்டும் இரண்டு மாதங்கள் தொடர்ந்திருக்கும்.  நல்ல குணம் கொண்ட அமைதியானவள் என்று இவனுடைய நட்பு வட்டாரம் விசாரித்துச் சொன்னது.

கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே ஹீரோவாக மாறிவிட்ட இவன் பல திரைப்படப்பாடல்களைப் பாடியும் , நினைத்துக்கொண்டும் “ஒரு ஹீரோ இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நினைத்துக்கொண்டு அலைந்து திரிந்து கொண்டு இருந்தான். அதன் உச்சம் மீசையே முளைக்காத வயதிலும் சேவிங் செய்துகொண்டு டிப் டாப்பாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வைத்து பித்துப் பிடித்து அலைந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு அவள் இவனுடைய வீட்டைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் இவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றாள். இவன் துள்ளிக்குதித்தான். அவளைப் பார்ப்பதற்காகவே கல்லூரி முடிந்ததும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டாவது வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதைக் கொள்கையாகவே மாற்றிக்கொண்டான். தன்னுடைய வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு ஐந்து நிமிடங்கள் அவளுக்குப் பின்னால் நடந்து சென்று அவள் பத்திரமாக பேருந்தில் ஏறிய பிறகே வீடு திரும்புவான். பின்னால் செல்வதோடு சரி , அதுவரை அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. டீக்கடையில் ஒரு டீ வாங்கி , அவள் பேருந்தில் ஏறிச் செல்ல பத்து நிமிடங்கள் காத்திருந்தாலும் இவன் பத்து நிமிடங்கள் அந்த டீயைக் குடித்துக்கொண்டிருப்பதைக் கடமையாக்கிக்கொண்டான். காலப்போக்கில் டீ மாஸ்டர் நண்பரானார். இவன் வந்தாலே “என்னப்பா , சூடா ஒரு டீதானே” என்று கிண்டல் செய்யும் அளவிற்கு நண்பர்கள் ஆனார்கள்.

இப்படியே சென்ற காலம் இவனைக் கல்லூரி முதலாம் வருடத்தையும் , அவளைப் பதினொன்றாம் வகுப்பையும் முடிக்க வைத்தது.அவள் காமர்ஸ் குரூப் எடுத்துக் படிப்பதாக இவனுடைய துப்பறிவாளர்கள் சொன்னார்கள். அதுவரை வெறும் புன்னகையை மட்டுமே பகிர்ந்துகொண்ட இருவரும் “போயிட்டு வரேன்” என்று கை அசைத்து “டாட்டா பாய் பாய்” சொல்லும் அளவிற்கு முன்னேறி இருந்தார்கள். இவனுக்கோ அவ்வப்போது அம்மா நினைவில் வந்து போனார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாலும் அந்தப் பருவம் அந்த வாக்குறுதியை மீறுவதற்கு வாய்ப்புக்  கொடுத்தது.

நாட்கள் செல்லச் செல்லச் இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்காக ஒரு இடத்தை அவளுடைய தோழி ஒருத்தி தேர்வு செய்து கொடுத்தாள். அதுவரை பேருந்து நிருத்தத்தோடு இருந்த இவன் பேருந்தில் ஏறி அவள் இறங்கும் இடம் வரை சென்று பத்திரமாக விட்டு வருவதைத் தன் கடமையாக நினைத்துக்கொண்டு அதை சரிவரச் செய்தான். இருவரும் நேரடியாகச் சொல்லிக்கொள்ள வில்லை என்றாலும் காதலிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று நண்பர்கள் நினைக்கும்படி நடந்துகொண்டார்கள். ஆடி போய் ஆவணி மாதம் அம்மாவாசைக்குப் பிறகான ஒரு நாளில் அதுவும் நடந்தது. முதலில் சொன்னது அவள்தான். படத்தில் வருவதைப் போல் “ஐ லவ் யூ” என்றெல்லாம் இல்லாமல் , அவள் நிதானமாக “எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு” என்றாள்.

இவனுக்குப் பதில் சொல்ல முடியாததற்கு காரணம் மீண்டும் அம்மா நினைவில் வந்து சென்றார். “சரி” என்று மட்டும் பதில் சொல்லி ஆம் என்று சொல்லாமலும் இல்லை என்று சொல்லாமலும் அவளின் யூகத்திற்கே விட்டுவிட்டான். அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த இவர்களுடைய உறவானது அவ்வப்போது தொலைபேசியிலும் பேசவைத்தது. முழு சுதந்திரத்தோடு இருந்த இவன் அப்பொழுது வளர்ந்துகொண்டிருந்த அரும்பு மீசையை முறுக்கிக்கொண்டு பக்கா ஹீரோவாக மாறியிருந்தபோதுதான் அந்த வில்லன் கதாபாத்திரம் வந்தது.

அதுவரையும் கூட இவன் அவளிடம் காதலிப்பதாக வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் , காதலிக்கவில்லை என்றும் சொல்ல மனம் வரவில்லை.

வில்லன் கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டவன் அவளின் ஊர்க்காரனாம். மாமன் முறை ஆகிறதாம். கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் என்று ஊரைச் சுற்றி வெட்டி வேலை செய்து கொண்டிருந்தவனாம். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அவனுடைய உளவுத்துறை அவனிடம் சொல்ல ஒரு சுபயோக சுபதினத்தில் அவனைப் போலவே வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டிருந்த சுமார் இருபது மைனர் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு நம் ஹீரோவைத் தாக்க வந்துவிட்டான். நம்முடைய ஹீரோவோடு நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். வீட்டு முதலாளி இல்லை ; ஆனால் வாட்ச்மேன் இருந்திருக்கிறார்.

நம் ஹீரோவை அடிக்க வந்தவர்கள் ஹீரோவை வெளியில் வரும்படி சத்தமிடுகிறார்கள். சில பல கெட்ட வார்த்தைகளும் வந்துபோயின. ஹீரோ வீட்டை விட்டு வெளியில் வருகிறார். ஹீரோ என்றால் கோபம் வந்தே தீர வேண்டும் என்பதால் ஆவேசப்பட்டார் ஹீரோ. ஆத்திரம் அடைந்தனர் கூட்டத்தினர். “நீ வாடா வெளியில உன்ன ஒரு கை பார்க்கிறோம்” என்றது கூட்டம். ஹீரோவுக்கு சற்று பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளக்கூடாது என்பதால் காட்டிக்கொள்ளவில்லையாம். சமாதானத்திற்கு வந்த வாட்ச்மேன் “மொதலாளி இப்போ இல்ல , நீங்க போயிட்டு காலைல வாங்க , எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் , இங்க வந்து இப்போ பிரச்சனை பண்றது சரியில்ல” என்று சொல்லி ஒரு வழியாக அனுப்பிவிட்டார்.

காலையில் வீட்டின் உரிமையாளரைப் பார்க்க வந்த கூட்டம் இவனை அங்கிருந்து கிளப்பச் சொல்லிக்கேட்டிருக்கிறார்கள். இவன் மேல் நன்மதிப்பு வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் “நல்ல பையனாச்சே’ என்று சர்டிபிகேட் கொடுத்தாராம். அதனை ஏற்க முடியாத முறை மாமன் முறைத்திருக்கின்றான். லோக்கல் ஆட்களோடு எதற்குப் பிரச்சனை என்று நினைத்தவர் இவனை அழைத்து விஷயத்தைச் சொல்ல இவனும் சில நாட்களில் அங்கிருந்து வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டான்.

அதற்குப் பிறகு அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை பேருந்து நிறுத்தம் வரை மட்டும் சென்று வந்தவன் அவளிடம் பேச முடியவில்லை. காரணம் முறை மாமன் ஆங்காங்கு தன்னுடைய ஒற்றர் படையை வைத்திருந்தான். அவளுக்கு அவன் மேல் துளியும் நல்ல எண்ணம் இல்லை என்றாலும் நம்முடைய திரைப்படங்கள் வில்லன் முறை மாமன் என்றால் அவளைக் கட்டியே தீர வேண்டும் என்ற கலாச்சாரத்தை விதைத்திருந்ததால் அவன் மட்டும் அதற்கு விதிவிலக்காகவில்லை. அவள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு இருவரின் தெய்வீக லவ்வும் ஒரு முடிவுக்கு வந்தது. சிறிது காலம் அவளின் நினைப்பு இவனுக்கு இருந்தாலும் தான் அம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியைப் பெற்றிருந்தான்.

இந்தக் கூத்தையெல்லாம் தனக்கு திருமணம் ஆன பின்பு ஒரு நாள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதுவும் ஒருநாள் நடந்தது. இந்தக் கதையைக் கேட்டவள் “நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க” என்று சொல்வதைப் போல் நக்கல் செய்து விட்டுப் போயிருக்கிறாள்.

கல்லூரி முடித்து பதினைந்து வருடங்கள் கழித்து தான் படித்த அதே மாவட்டத்திற்குச் செல்கின்றான் இவன். காலம் மனிதனுக்குப் பல மாற்றங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது போன்ற மாற்றம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. இந்த பூமிக்கும்தான். ஆம் , இவன் அன்றைக்கு ஹீரோவாகத் திரிந்த அந்த பூமி பல மாற்றங்களைக் கண்டிருந்தது. நெற்களஞ்சியங்கள் குறைந்த பூமியாக காட்சியளித்தது. இவன் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்திற்குச் சோறு போடும் மண்ணாக இருந்தது அந்த மண். இப்பொழுது நிறைய மாற்றங்கள்.

பழைய நினைவுகளோடு பேருந்தில் பயணித்த இவன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது பதினைந்து வருடங்களுக்கு முன்பு விட்டுப் பிரிந்த அன்றைய தன் கதாநாயகியைப் பார்க்கின்றான். அவள் அவளுடைய கணவருடன் கடையில் நின்றுகொண்டிருக்கிறாள். இரண்டு குழந்தைகள். ஆனால் கணவனாக நின்றுகொண்டிருந்தவர் அன்றைக்கு வில்லனாக வந்த முறை மாமன் இல்லை. அவள் அவரைத் தட்டி தட்டி ஏதோ ஒன்றை வாங்கித் தரச் சொல்லி செல்லமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.நல்ல ஜோடியாகத்தான் தெரிந்தார்கள் இவனுக்கு. எப்படியாவது பேருந்தை விட்டு இறங்கி அவளிடம் பேசிவிட்டால் என்ன என்று நினைத்தவன் அவளுக்குத் தேவையற்ற பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று நினைத்து பேருந்து எடுத்ததும் கடந்து சென்றான். “இவ்வளவுதான்யா காதல்” என்று சிரித்துக்கொண்டே கடந்து சென்றான்.

இன்றைக்கு இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகிவிட்டபோதும் இவன் காதலிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. ஆம் , இவனுடைய இன்றைய கதாநாயகியாகிய மனைவியை மட்டும் .

—– கதிர்

Advertisements
Posted in நிகழ்வுகள் | Leave a comment