இயந்திர வாழ்க்கை முறையும் அன்புப் போராட்டங்களும்

12இன்று பையன் சிரித்தான்,இன்று பையன் உட்காரக் கற்றுக்கொண்டான்,இன்று நடக்க ஆரம்பித்துவிட்டான்,இன்று கோவிலில் பையனுக்கு மொட்டை போட்டோம்,இன்று பேச ஆரம்பித்து விட்டான் எனப் பல விசயங்களை என் டைரியில் ஏற்றிக்கொண்டே இருந்தேன் என் முதல் மகன் பிறந்தது முதல் இரண்டு வயது வரை.காரணம் வேறொன்றுமில்லை , இந்த நிகழ்வுகளை எல்லாம் அவன் பெரியவன் ஆன பிறகு படித்துப் பார்த்தால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்ற நோக்கில் டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன் அவனுக்காக.பெரியவன் ஆன பிறகு இந்த டைரியை அவனுக்கு பரிசாகக் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகவும் இருந்தது அப்பொழுது. இதற்காக சிறிது நேரமும் ஒதுக்கி இருந்தேன்.பிறகு பணிச்சுமை காரணமாக இதற்காக நான் ஒதுக்கியிருந்த நேரமும் பயனற்றுப்போனது.கடந்த மூன்று வருடங்களாக என்னால் இந்த டைரியை தொடர்ந்து எழுத முடியவில்லை. மிகப்பெரிய வருத்தம் இன்றுவரை உள்ளது.ஒரு காலகட்டத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டிய கட்டாயம்.என்ன செய்வது , ஆங்கிலேயன் நமக்கு சோறு போடுகிறான் அல்லவா.அதற்கு நம்மால் முடிந்த விசுவாசத்தைக் காட்டியாக வேண்டிய சூழ்நிலை.இந்த வகையில் “என்னைப் போல் ஒருவன் ” என்று இங்கு நிறையப் பேரைச் சொல்லலாம். இது விதி என்றெல்லாம் சொல்லமுடியாது.”செய்யும் தொழிலே தெய்வம்” என்று இது போன்ற சூழ்நிலைகளில் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இப்பொழுது கொஞ்சம் நேரம் கிடைக்கிறது.ஆனாலும் பாதியில் விட்ட டைரியை இனிமேல் தொடர்ந்து எழுதினால் கட்டாயத்தின் பேரில் எழுதுவதாக அமைந்துவிடும் என்ற எண்ணம் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்பொழுது இரண்டாவது சிங்கக்குட்டியும் பிறந்து விட்டான்.சரி , இனிமேல் இவனுக்காவது தொடர்ந்து எழுதலாம் என்றாலும் கூட மனதில் ஒரு உறுத்தல்.முதல் பையனுக்கு செய்ய முடியாததை இரண்டாவது பையனுக்கு செய்துவிட்டால் நாமே அவர்களுக்குள் ஒரு வேற்றுமையை ஏற்படுத்தி விடுவோம் என்பதால் இந்த முயற்சியையும் கைவிட்டாகிவிட்டது.அப்பா நமக்கு மட்டும் பாரபட்சம் காட்டிவிட்டார் என்ற உணர்வு நிச்சயம் முதல் மகனிடம் வந்துவிடும். ஆதலால்தான்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் நம்மால் இது போன்ற சிறு சிறு விஷயங்களைக் கூட குழந்தைகளுக்காக செய்ய முடிவதில்லை.அப்பொழுதெல்லாம் அப்பா , அம்மா வயலில் மாலை வரை வேலை செய்துவிட்டு வந்து நம்மைக் கவனித்த பொழுது கூட எப்பொழுதும் அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.அதுவே நாம் எதிர்பார்த்ததை விட அதிகம் தான்.குழந்தைப் பருவத்தில் அவர்களிடம் இருந்து எதையும் நாம் இழக்கவில்லை என்ற எண்ணம் இப்பொழுதும் உண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் இயந்திரத்தனமான வாழ்க்கை முறையையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.குழந்தைகளுக்குக் கூட நம்மால் ஒரு கணிசமான நேரம் ஒதுக்க முடிவதில்லை.சில நேரங்களில் முயற்சி செய்தாலும் அது வெற்றிபெறுவதில்லை.அதற்காக வேலையை விட்டுவிட்டு வீட்ல சந்தோசமாவா இருக்க முடியும்.பிறகு என்ன சம்பாதித்தாய் என்று பிள்ளைகள் வளர்ந்தவுடன் கேட்பார்கள்தானே. நிச்சயம் கேட்பார்கள்.

இதற்கு தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லை.இன்றைய வாழ்க்கை முறையில் முடிந்தவரை நமக்குக் கிடைத்த அந்த சிறு நேரத்தைக் கூட குழைந்தைகளுக்கு பிடித்தவாறு அவர்களுடன் செலவிட்டு நம் அன்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதுதான்.பணம் என்னும் தேடல் இருக்கும் வரை இது போன்ற உளவியல் பிரச்னைகளுக்கு என்றுமே தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை. நம் குழந்தைகளும் நிச்சயம் நாளை நம்மைப் புரிந்துகொள்வார்கள்.ஏனெனில் அவர்கள் காலத்தில் இது போன்ற அன்புப் போராட்டங்கள் இன்னும் கூட அதிகமாகலாம்.இயந்திரத்தின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகத்தானே செய்யும்.அதற்கு நாளைய தலைமுறை ஒன்றும் விதிவிலக்கல்ல.

——— அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s