இது கயவர்கள் நிறைந்த உலகம்

31இந்தப் பையன் “சூது  வாது தெரியாத சாது” என்று யாரேனும் நம்மைப் பார்த்துச் சொன்னால் வேண்டுமானால் நாம் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.ஆனால் அதை வைத்துக்கொண்டு இந்த உலகில் வாழமுடியுமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.எங்கு பார்த்தாலும் கயவர்கள் , தீயவர்கள் என்று நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறார்கள்.நல்லவனாக நாம் இருந்தாலும் சமூகம் நம்மை வெகுளியாகத்தான் பார்க்கிறதோ என்றொரு சந்தேகம்.கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமே நம்மிடம் தங்குவதில்லை.இதில் அயோக்கியத்தனம் செய்து சம்பாதிக்கும் பணத்தில் எப்படி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு வாழ்க்கை நடத்துகிறார்களோ தெரியவில்லை.பெங்களூர் போன்ற நகரத்தில் எல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாக கொலை , கொள்ளை , சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது.இதுவரை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

நேற்றும் கூட காலையில் வாகனத்தில் செல்லும்பொழுது ஒரு சம்பவம்.பைக்கில் வந்த ஒரு நபர் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது தெரியாமல்  இடித்து விட்டார்.தவறு இவருடையதுதான்.காரை ஓட்டி வந்தவர் ஒரு பெண்.இவர்கள் இருவருமே பார்க்க அப்பாவியைப் போல்தான் இருந்தார்கள்.இவர்களே பேசியிருந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் சமாதானமாகப் போயிருப்பார்கள்.அதுதான் நடக்கவில்லை.இதுபோன்ற சம்பவங்கள் எப்படா நடக்கும் , நாம் எப்படா இடையில் நுழைந்து காசு பார்க்கலாம் என்று ஒரு கும்பல் இங்கே நிறைய இருக்கிறது.வந்தது ஒரு கும்பல்.பைக் ஓட்டி வந்த நபரிடம் , ஒரு சைகை காட்டினர்.நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம் , நாங்கள் பார்த்துகொள்கிறோம் என்பதே அதற்கு அர்த்தமாக இருக்க முடியும்.பாவம் அந்தப் பெண்மணி.மாட்டிக்கொண்டார்.நீங்கள்தான் பிரேக் போட்டு சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டீர்கள் , அதனால்தான் இவர் பைக் உங்கள் காரின் மேல் மோதிவிட்டது என்று நாட்டமைத்தனம் செய்துகொண்டிருந்தார்கள்.அந்தப் பையனை பேசவே விடவில்லை.நிச்சயமாக ஒரு பெரிய தொகையை அந்தப் பெண்மணியிடம் பிடுங்கி இருப்பார்கள் இந்தக் கயவர்கள்.நான் கிளைமாக்ஸ் வரை இருக்கவில்லை , சென்று விட்டேன்.நாள்தோறும் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணம் இங்கே.

இது இப்படின்னா , இன்னொரு சம்பவம் நண்பர் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்  கூறினார்.அவர்களுடைய நண்பர்கள் தங்கி இருக்கும் ஒரு வீட்டில் , நண்பர்கள் இரவு வெகுநேரம் பேசி இருந்துவிட்டு 1:30 மணிக்குத்தான் தூங்கி இருக்கிறார்கள்.இவர்கள் குடியிருப்பது கீழ்தளத்தில் .காலையில் எழுந்து பார்த்தால் வீட்டின் கதவு களவு போயிருந்திருக்கிறது.பசங்களுக்கு ஒரே அதிர்ச்சி.இதை அவர் சொல்லும்பொழுது எனக்கும்தான் அதிர்ச்சியாக இருந்தது.நான் பேச்சுலராக  இருந்தபொழுது ஒரு சம்பவம்.வெளியில் நாங்கள்  போட்டிருந்த எங்கள் காலணிகளை காலை நான்கு மணிக்கு வந்து களவாடி விட்டார்கள்.இதெல்லாம் கூட பரவாய் இல்லை.ஒரு ஆயிரம் ரூபாய் செல் போனிற்காக  ஒரு பெண்ணைக் கொலை செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது இங்கே.

எந்த மாதிரியான நாட்டில்/சமூகத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பாருங்கள்.இவர்கள் எல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.சட்ட திட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கண்டிப்பாக இல்லை.எங்கே ஓட்டை இருக்கிறது என்பதை தெள்ளத்தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் இந்த எமகாதகர்கள்.எங்கு சென்றாலும் இப்பொழுதெல்லாம் புள்ள குட்டிங்களையும் குடும்பத்தையும் ரொம்ப பத்திரமா அழைத்துச் சென்று திரும்பி வரவேண்டிய கடமை நம்முடையது.மக்கள் தொகை அதிகமாக அதிகமாக இது போன்ற செயல்கள் இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.இவர்களைத் திருத்திவிட முடியும் என்று நினைக்கிறீர்களா ?.ம்ம்ஹூம்.இப்பொழுது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் இந்தப்  பாடல் தான் ஞாபகம் வருகிறது  “திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”.இது அனைத்துக் கயவர்களுக்கும்  பொருந்தும்.பார்த்து இருங்க.எவன் எப்படி இருந்தாலும் பரவாய் இல்லை.நாம் நல்லவர்களாகவே இருப்போமுங்க.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s