பெண்கள் வீட்டின் கண்கள்

1அம்மாவுடனும் , அம்மணியுடனும் (அட மனைவிதாங்க) ஒரு நாள் ஷாப்பிங் சென்று திரும்பி வந்துவிட்டால் அன்றைய தினத்தை உங்கள் டைரியில் பொன்னாளாக எழுதி வைத்துக்கொள்ளலாம்.அவ்வளவு பொறுமை அவசியம்.ஷாப்பிங் செய்து முடித்துவிட்டு வரும்பொழுதுதான் அவர்களின் அருமை தெரியும்.ஆனால் அந்த அருமை பெருமைகளை எல்லாம் தெரிந்து கொள்ள ஷாப்பிங் முடியும் வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும். வசமாக வந்து மாட்டிக்கொண்டோமே என்று கூட நினைக்கத் தோன்றும்.ஆனால் , வேறு வழி இல்லை.சென்றுதானே தீர வேண்டும்.ஆண்கள் பெரும்பாலும் அதிக பேரம் பேசுவதில்லை.பேசத் தெரிந்தால்தானே.பேச நினைத்தாலும் கடைக்காரன் ரொம்ப கேவலமா நினைத்து விட்டால் என்ன செய்வது என்று ஏதோ பேரம் பேச வேண்டுமே என்பதற்காக ஒரு சில ரூபாய்கள் குறைத்துக் கொடுக்கச் சொல்லுவோம்.அது கடைக்காரன் குறைத்துக் கொடுக்கக்கூடியதாகத்தான் இருக்கும்.வீட்டில் வந்து தம்பட்டம் அடித்துக் கொள்வோம் குறைத்து வாங்கிவந்து விட்டோம் என்று.ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க ஒரு பொருளை 975 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து விட்டு நம்மை நாமே பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்[நான் அந்த ரகம் தான் , நீங்கள் அப்படி இல்லை என்றால் சந்தோசம்தான் :-)].இதே அம்மாவோ , அம்மணியோ சென்றிருந்தால் 500 ரூபாயில் இருந்து பேரம் ஆரம்பிக்கப்படும்.பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்கு கொஞ்சம் சங்கோஜமாகத்தான் இருக்கும்.இருந்தாலும் நீண்ட நேரம் நீடிக்கும் அவர்கள் பேரத்தின் க்ளைமாக்ஸ்- ல் ஒரு 700/800 ரூபாய்க்கு அந்தப் பொருளை வாங்கி விடுவார்கள்.நாம் வாங்கினால் அதன் மதிப்பு 975.இதுதான் நாம் சென்று வாங்குவதற்கும் அவர்கள் சென்று வாங்குவதற்கும் உள்ள வித்யாசம்.

எப்பொழுதும் போல சென்ற வாரமும் மாட்டிக்கொண்டேன் அம்மாவிடம்.ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இரண்டாவது மகனுக்கு வாக்கர் வாங்க வேண்டும் என்று சென்றோம்.எங்கள் பிரயாணம் ஆரம்பிக்கும் முன்பே பெங்களூரில் இருந்து மனைவி அம்மாவுக்கு போன் செய்கிறார்.இப்படிச் செல்கிறது அவர்கள் உரையாடல் – “அத்தை , நீங்க போய் பாத்து வாங்கிட்டு வாங்க , அவர் சென்றால் நிச்சயம் அதிகமாக விலை கொடுத்து வாங்கி விடுவார் , இது வெறும் இரண்டு மாதத்திற்குத்தான் தேவைப்படும் , அதற்கு எதற்கு தேவை இல்லாமல் அதிக பணம் செலவழிக்க வேண்டும்” என்பது அம்மணியின் வசனம்.அதற்கு அம்மாவின் பதில் – “ஆமாம் , ஆமாம் , இவனை நம்பி விடமுடியாது , நானே செல்கிறேன்” என்பதே.ஜாடிக்கேத்த மூடி என்பார்களே அதே அதே.நாம் இளிச்சவாயன் என்பது ஊருக்கே தெரியும் , இவர்கள் என்ன செய்வார்கள் பாவம் 🙂

ஷாப்பிங் சென்டருக்கும் சென்றுவிட்டோம்.உள்ளே காலடி எடுத்து வைக்கும் முன் அம்மாவிடம் சொன்னேன் இப்படி “அம்மா , எதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு ஒரு டீ சாப்பிட்டு விட்டு போகலாம்” என்று.எனக்குத் தெரியும் உள்ளே சென்றால் இரண்டு மணி நேரம் ஆகும் என்று , அதற்காகத்தான் வயிற்றை நிரப்பி விட்டு சென்று விடலாமே என்று இப்படிக் கூறினேன்.அம்மாவும் சம்மதித்துவிட வயிற்றுக்குள் சென்றது ஒரு பப்சும் , ஒரு டீயும்.பிறகு உள்ளே சென்றோம்.இரண்டு விதமான மாடல்களைக் காட்டினான் பையன்.அம்மா வேறு ஏதாவது மாடல் இருக்கிறதா என்றார்.பையன் இல்லை என்றான்.பிறகு விலை பற்றிய உரையாடல்.அம்மாவுக்கு விலை அதிகமாகப்பட்டது. எனக்கும்தான்.ஆனால் அதற்கும் குறைவாக வாங்க முடியுமா , இங்கேயே வாங்கி விடலாம் என்று அம்மாவிடம் கூறினேன்.கோபப்பட்ட அம்மா , “நீ கொஞ்சம் சும்மா உட்கார்ந்திரு , நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.சற்று கோபம் அடைந்தாலும் சமாதானம் அடைந்தேன்.அது பெரிய ஷாப்பிங் சென்டர் என்பதால் அங்கே பேரம் பேச முடியாது.கடைப் பையன் இவ்வாறு கூறினான் – “அக்கா , நீங்க எங்கே சென்றாலும் , இதை விட வேறு மாடலோ , குறைவான விலைக்கோ வாங்க முடியாது” என்று.அம்மா பரவாய் இல்லை என்று கூறி விட்டு இடத்தை காலி செய்யலாம் வா என்றார்.பின் தொடர்ந்தேன்.

வேறொரு கடைக்குச் சென்றோம் , அங்கே வாக்கர் இல்லை.பிறகு வேறொரு கடை.”துபாய் பஜார்” என்று இருந்தது அந்தக் கடைப் பெயர்.பெரிய கடைதான்.நான் பேசாமல் அங்கேயே வாங்கி இருக்கலாமே என்று கோபத்துடன் நினைத்துக் கொண்டே அம்மாவைப் பின் தொடர்ந்தேன்.வாக்கார் இருந்தது.முதல் கடையில் பார்த்த அதே மாடல்கள் இருந்தன.அம்மாவுக்கு சந்தோஷம்.பேரம் , அது இதுன்னு ஒரு அரை மணி நேரம் கழித்து அம்மாவின் வழிக்கு வந்தார் கடைக்காரர்.விலை படிந்துவிட்டது.அம்மாவுக்கு மகிழ்ச்சி.காரணம் முதல் கடையில் பார்த்த அதே வாக்கரை இங்கே நானூறு ரூபாய் குறைத்து வாங்கிவிட்டார்.என்னைத் திரும்பிப் பார்த்த அம்மாவை நான் பார்க்கவில்லை.நிச்சயம் என்னைப் பார்த்து “இப்பொழுது தெரிந்துகொள் ” என்பதை அவர்களின் கண் ஜாடையில் தெரிவித்து விடுவார்கள் என்பதை உணர்ந்ததால் நான் பார்க்கவில்லை.இருப்பினும் சந்தோஷம் அம்மாவின் திறமையைப் பார்த்து.வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டேன்.அன்றைய என் சேமிப்பு நானூறு ரூபாய்.நன்றி அம்மாவுக்குரியது .

இந்த சம்பவத்தை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் , வெளியே சென்றால் பணம் கொடுக்கும் வேலையை மட்டும் நாம் பார்த்தால் போதும்.மற்ற எல்லாவற்றையும் அம்மாவோ , மனைவியோ நம்மை விட நன்றாகவே பார்த்து வடிகட்டி , தகுந்த விலைக்கு வாங்கி விடுவார்கள்.ஆனால் நமக்குக் கொஞ்சம் பொறுமை அவசியம்.அவசரம் கூடாது.பொறுமையாக இருந்தால் வீட்டிற்கு வரும்பொழுது பணத்தை மிச்சப் படுத்தி விட்டு வரலாம்.இல்லை என்றால் , வீண் விரையம்தான்.அம்மாவிடமும் , அம்மணியிடமும் இருந்து இந்த விஷயத்தை இப்பொழுது கற்றுக் கொண்டேன்.பெண்கள் வீட்டின்/நாட்டின் கண்கள் 🙂

——- அன்புடன் கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to பெண்கள் வீட்டின் கண்கள்

  1. Sasi kumar says:

    நல்லா எழுதீருக்குறீங்க… ரண்டு பேரு பேசற மாதர இருக்கற எடங்கள்ல அவங்க யதார்த்தத்துல எப்புடி பேசுவாங்களோ அத அப்படியே வட்டார சொற்களோட-மொழிநடையோட போட்டா ரொம்பவும் நல்லா இருக்கும்.. படிக்கறவங்களுக்கு அந்த சூழலுக்கே போன மாதர இருக்கும்.. அப்படியே அம்மா வெலைய கொறைக்க எப்பிடிலாம் சாத்திரிக்கமா பேசுவாங்க னு ஒன்னு எழுதுங்க.. எனக்கும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு..அது இதுல வந்திருந்தா இன்னும் நல்லா இருக்திருக்கும்.. கொங்கு பகுதியோட வட்டார சொற்களுக்கு-பழமொழிகளுக்கு நெறைய புஸ்தகங்கள் இருக்குது.. வா.மணிகண்டன் அவர்களோட பிளாக் ல கூட மூணு பதிவுகள் அதுக்குன்னு இருக்குது…

    Liked by 1 person

    • நல்ல கருத்து சசி குமார்.எனக்கும் ஆசைதான்.ஆனால் எல்லா வார்த்தைகளும் நமது வட்டார வழக்கில் எழுதிவிடுவேனா என்று தெரியவில்லை. இதற்கு முன்பு ஒரு முறை முயற்சி செய்தேன். இது போன்ற அடுத்த பதிவொன்றில் நிச்சயம் உங்கள் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு வட்டாரச் சொற்களை கொண்டு வர முயற்சிக்கிறேன் .நன்றி சசி.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s