பிஞ்சு உள்ளங்களைக் காப்பாற்றுங்கள்

1ஒரு அமைச்சர் வந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இன்று இருந்தது நான் தினந்தோறும் பயன்படுத்தும் பெங்களூர்  சாலை.அனைத்து சிக்னல்களிலும் பச்சை விளக்குகள்தான்.எங்கும்  நான் நிற்கவில்லை.மற்ற நாட்களை விட இன்று முப்பது நிமிடம் பயண  நேரம் குறைவாகவே எடுத்துக்கொண்டது.ஏன் , காரணம் என்ன ? VIBGYOR – இதுவே  இன்றைய  என் பயண  நேர சேமிப்பிற்கு காரணம்.இவர்களால்தான் இன்று பெங்களூரில் பந்த்(அலுவலகங்களுக்கு  விடுமுறை இல்லை).

கடந்த சில வாரங்களாக பெங்களூர் வாசிகளுக்கு மனதில் நீங்காமல் இருந்து கொண்டிருக்கும் பெயர் VIBGYOR.உலகத்தரத்தில் பள்ளி நடத்துகிறார்கள் இவர்கள் இங்கே.இங்கு மட்டுமில்லை.பிற மாநிலங்களிலும்தான். ஏழு நகரங்களில் இவர்கள் பள்ளி நடத்துகிறார்கள்.பெங்களூரில் எட்டு இடத்தில் VIBGYOR பள்ளி உள்ளது.இத்தனை  இடத்தில் பள்ளி ஆரம்பித்து நடத்த வேண்டுமானால் , இன்றைய சூழ்நிலையில் ஒரு சாமானியனால் முடியாது . எப்படியாவது சட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளையும் தெரிந்து கொண்டு இன்ன  பிற வழிகளில் சம்பாதித்தால்  மட்டுமே அது சாத்தியம்.” Rustom Kerawalla” இப்படிப்பட்ட திறமைசாலியாகத்தான் இருந்திருக்க முடியும்.ஆம் , இவர்தான் இப்பள்ளிகளின் நிறுவனர்.மும்பையில் ஹோட்டல் தொழில் செய்து பணம் சம்பாதித்து பிறகு கல்வி என்னும் புனிதத் தொழிலை வியாபாரமாக்கி இருக்கிறார்.நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான கட்டிட அமைப்பு , வகுப்பறைகளில் குளிர் சாதன  வசதி , இன்னும் பிற வசதிகள் , இவை அனைத்தையும் தாங்கி நிற்கிறது இந்தப் பள்ளி.ஏற்கனவே VIBGYOR  பள்ளியின் ஒழுங்கீனத்தை காரணம் காட்டி, அதன் உரிமத்தை ரத்து செய்யும்படி டெல்லியில் உள்ள ஐ.சி.எஸ்.இ. (கல்வித் துறை) தலைமையகத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.உங்களுக்குத் தெரிந்ததுதான்.ஜூலை 2-ஆம் தேதி இந்தப் பள்ளியில் படித்த ஒரு ஆறு வயது பிஞ்சுக் குழந்தையை காம வெறி பிடித்த ஒருவன் பள்ளியிலேயே பலாத்காரம் செய்து விட்டு , யாரிடமும் சொல்லக்கூடாது என்று அந்தப் பிஞ்சை மிரட்டியும் இருக்கிறான்  .சில நாட்கள் கழித்து பெற்றோர்களுக்கு தெரிந்துவிட  வெடித்தது பிரச்சனை.இவன் அங்கேயே வேலை செய்யும் ஸ்கேட்டிங் மாஸ்டர் (ஜிம் மாஸ்டரும்) என்பதுதான் இன்னும் வேதனை. பொது மக்கள் போராட்டங்களில் இறங்கி விட முழித்துக்கொண்டது காவல் தெய்வம்.இல்லை என்றிருந்தால் இந்தப் பிரச்சனையை அப்படியே தன் பண பலத்தால் மறைத்திருப்பார் இந்த நவீனகால கல்வியாளர்.பிரச்சனை தீவிரமடையவே காவல் துறை பள்ளி நிருவனரையும் , அந்தக் காமக் கொடூரனையும் கைது செய்து உள்ளது(ஜாமீனிலும் வெளியே வந்துவிட்டார்கள் , பின்னர் ஜிம் மாஸ்டரை கைது செய்திருக்கிறது காவல்துறை).இதில்  கொடுமையான விஷயம் என்னவென்றால் முதலில் கைதான ஸ்கேட்டிங் மாஸ்டர்  ஏற்கனவே இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன்  என்று தற்போது தெரிய வந்துள்ளது.அப்படியென்றால் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது?அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.கண்டுகொள்ளவும் இல்லை.அவர்கள் கல்லாப்பெட்டி நிரம்பிக்கொண்டிருக்கையில் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு சாதாரணம்.

இப்பொழுதும் கூட இந்த விவகாரமும் விசாரணையும் வேறு திசையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக செய்தி.பெற்றோர்கள் ஏன் அத்துனை நாட்கள் கழித்து புகார் கொடுத்தார்கள் என்று அவர்களையே சந்தேகிக்கிறார்கள்.பாவம் , அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன செய்யும் , பெற்றோர்களிடம் சொல்லவில்லை , சில நாட்கள் கழித்துத்தான் பெற்றோர்கள் குழந்தையின் உடல்நிலையைப் பார்த்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.பிறகே புகாரும் கொடுத்திருக்கிறார்கள்.அதில் கூடவா காவல்துறைக்கு சந்தேகம்? பணம் பாதாளம் வரைக்கும் பாயும் , பணத்தைப் பார்த்தால் பிணம் கூட எழுந்துவிடும் என்று சும்மாவா சொன்னார்கள். இப்பொழுது இந்த VIBGYOR பள்ளியில் CCTV பொருத்தப்பட்டுள்ளதாகத் தகவல்.என்ன கொடுமை பாருங்கள் , குழந்தைகளை எவனாவது சீன்டுகின்றானா என்று கவனிக்க இந்த நடவடிக்கை.அதுவும் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களில்.இது குழந்தைகள் மனதில் என்ன விதமான மனநிலையை உண்டாக்கும் என்று நினைத்துப்பாருங்கள். பெண்ணைப் பெற்றவனெல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறான்.அவ்வளவு பாதுகாப்பற்ற சமூகத்தில் நம் குழந்தைகளை வளர்க்க வேண்டி உள்ளது. இந்தச் சம்பவம் இப்படி என்றால் இதே போன்றதொரு சம்பவம் நேற்றும் பெங்களூரில் நடந்துள்ளது.கேட்கவே கூச்சமாக இருக்கிறது

சில கன்னட அமைப்புகள் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்கொடுமைகளுக்கு  தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பந்த் நடத்துகிறார்கள்.முதலமைச்சரையும் சந்தித்து மனுவும் கொடுக்க உள்ளார்கள்.நல்லது நடக்குமா என்று தெரியவில்லை.எது எப்படியோ , பிஞ்சுக்  குழந்தைகளுக்கு நடைபெறும் இது போன்ற வன்முறைகளுக்கு எல்லாம் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்க வேண்டும்.இஸ்லாமிய நாடுகளில் பாருங்கள் , ஒரு பயலும் வாலாட்ட முடியாது.அப்படி உள்ளது அவர்கள் சட்ட திட்டங்கள்.ஒரு தவறைச் செய்வதற்கு முன் இது போன்ற வக்கிர புத்தி உள்ளவனுக்கெல்லாம் பயம் வர வேண்டும்.அது கடுமையான சட்டங்களால் மட்டுமே சாத்தியம்.இல்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் இன்னும் நிறைய இன்னல்களைச் சந்திக்கக் கூடும்.

முன்பெல்லாம் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிப்பவர் கல்வித்துறையை நன்கு அறிந்திருப்பவராக இருப்பார்.அவர்கள் தான் “கல்வித் தந்தை” என்று அழைக்கப்பட்டனர்.இன்றோ நிலைமை வேறு.சாராயம் காய்ச்சும் தொழிலை ஆரம்பித்து , பின்னர்  தாதாவாக மாறி , பெரும்புள்ளிகளின் நிழலாக வளம் வந்து , பின் அரசியலிலும் நுழைந்து , கடைசியில் இவர்களின் சமூக சேவை என்னும் பெயரில் இப்படி கல்வி கூடங்கள் ஆரம்பித்து அதை வியாபாரமாக மாற்றிவிடுகிறார்கள். இவர்கள்தான் நவீனகால கல்வித்தந்தையர்கள்.

இந்தத் தருணத்தில் இன்னுமொரு கேள்வி என் மனதில் எழுகிறது.குழந்தைகள் படிப்பதற்கு குளிர் சாதன வசதி எல்லாமா  தேவை ? இதை பள்ளிக்கூடங்கள் மீது தவறு என்று சொல்லமுடியாது.நம்மவர்கள் தேடிப்போகிறார்கள்.அவர்களும் இவர்களை அவர்கள் வழியில் இழுத்துவிடுகிறார்கள்.அவ்வளவுதான்.காலை எட்டு மணிக்கு தரவிருக்கும் L.K.G விண்ணப்பத்திற்கு முதல் நாள் இரவே வந்து இடம் போட்டுக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நம் மக்கள்.இரண்டு கிலோமீட்டர்  தூரத்திற்கு விண்ணப்பம் வாங்க வரிசை.நம் மக்களே தேடிப்போகிறார்கள்.இதில் என் மகன் இந்தப் பள்ளியில் படிக்கிறான் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம் வேறு.

அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ஒரு மாணவி 499 மதிப்பெண் எடுத்திருக்கிறார்  .அந்த அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும் தரமும் அப்படி இருக்கிறது.மற்ற அரசுப் பள்ளிகள்? இன்றைய நிலைமை முற்றிலும் வேறு.ஒரு சில அரசுப் பள்ளிகளைத் தவிர மற்றவை  எல்லாம் நாளுக்கு நாள் தரம் குறைந்து வருவதாகவே கருதுகிறேன்.அரசாங்கம் நினைத்தால் அரசாங்கப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தி மாணவர்களை அங்கே ஈர்க்கும் வழிவகைகளைச் செய்யலாம்.இல்லை என்றால் கல்வித் துறையை அரசுடமை ஆக்கலாம்.இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது சாத்தியமா என்று தெரியவில்லை.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கல்வி சார்ந்த எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அரசாங்கம் நினைத்தால் தீர்த்து வைக்க முடியும்.தீர்த்து வைப்பார்களா அவர்கள் , இல்லை அவர்களை தீர்த்து வைக்க விட்டு விடுவார்களா இந்தப் பண முதலைகள் ? இவை எல்லாம் வெறும் மாயையாகத்தான் இருக்கிறது இன்றைய சூழலில்.அரசாங்கமே – சட்ட திட்டங்களை கடுமை ஆக்குங்கள்.எங்கள் பிஞ்சு உள்ளங்களைக் காப்பாற்றுங்கள்.

——- அன்புடன் கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s