ஆசிரியர்களும் கடவுள்தான்

23முட்டாளையும் , முரடனையும் முக்கியவனாகவும் , சிறந்தவனாகவும் மாற்ற இருவருக்கே திறமை உண்டு.ஒன்று ஆசிரியர் , மற்றொருவர் மனைவி.ஒரு தன்னலமற்ற ஆசிரியர் நினைத்தால் எப்படிப்பட்ட மாணவனையும் மாற்றிவிடலாம் அர்பணிப்பு உணர்வு இருந்தால்.நேற்று முன்தினம்  வீட்டிற்கு அண்ணன் செல்வக்கண்ணன் வந்திருந்தார்.ஊரில் அரசாங்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார்.ஆங்கில பயிற்சி வகுப்பிற்காக ஒரு மாதம் பெங்களூர் வந்திருக்கிறார்.இவரும் எங்கள் குடியிருப்பில் வசிக்கும் எழுத்தாளர் அண்ணன் க.சீ.சிவகுமார் அவர்களும் பள்ளித் தோழர்கள்.அவரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதால் இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது அண்ணனுக்கு.இதே நாளில் முகநூல் மூலம் எனக்கு நண்பரான தம்பி மகாலிங்கமும் வீட்டிற்கு வந்திருந்தார்.நான் தேடிக்கொண்டிருந்த சில புத்தகங்களோடு வந்துவிட்டார்.

நாம் சிந்திக்கும் பல விசயங்களை பகிர்ந்துகொள்வதற்கோ , கருத்துப் பரிமாற்றங்களுக்கோ நம்மைப் போன்ற ஒத்த கருத்துள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்.கிரிக்கெட்-ன் மீது ஆர்வம் உள்ளவரிடம் போய் நீங்கள் இலக்கியத்தைப் பற்றியோ , விவசாயத்தைப் பற்றியோ பேசுவது அபத்தம்.என்னதான் உங்கள் பேச்சை காது கொடுத்துக் கேட்டாலும் , நீங்கள் அவரை உற்றுப்பார்த்தால் புரிந்துவிடும் அவர் ஆர்வத்துடன் கேட்கிறாரா இல்லையா என்று.இங்கே நான் குறிப்பிட்ட நபர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒத்த கருத்துடையவர்கள். நாங்கள்  நால்வரும் சிவகுமார் அண்ணன் வீட்டில் பல விசயங்களைப் பற்றி அலசிக்கொண்டிருந்தோம்.அப்பொழுது கல்வியைப் பற்றிய சில அலசல்கள் வந்தன.அண்ணன் செல்வக்கண்ணன் ஆசிரியராக இருப்பதால் நிறைய தகவல்களைக் கொடுத்தார்.

நாமெல்லாம் அரசாங்க ஆசிரியர் என்றால் நேரத்திற்கு சென்று நேரத்திற்கு வருபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அதிலும் பல தன்னலமற்ற ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இவரைப்போன்று.நூற்றியைம்பது மாணவர்கள் இருக்கிறார்கள் இவர் பணி புரியும் பள்ளியில்.இங்கே ஆசிரியர்கள் வெறும் புத்தகத்தில் இருக்கும் பாடங்களை மட்டும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி , ஹிந்தி பயிற்சி , ஆங்கில பயிற்சி இன்ன பிற பயிற்சி வகுப்புகளை மாணவர்களுக்காக விடுமுறை நாட்களில் ஏற்பாடு  செய்து அதை தொடர்ந்து நடத்தியும் வருகிறார்கள்.

அரசாங்க வேலை , அதிலும் விடுமுறை நாள் என்றால் பெரும்பாலானோர் சொந்த வேலைகளைத்தான் செய்வார்கள்.ஆனால் இவர்கள் அரசாங்கப் பள்ளியாக இருப்பினும் நம்மால் முடிந்த வரை மாணவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வெளியில் அனுப்புவோம் என்ற நோக்கில் இது போன்ற வேலைகளை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். நானும் அண்ணனும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இப்படி ஒரு கேள்வியும் எழுந்தது.பத்தாவது படித்து முடித்த மாணவனை ஒரு வங்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும்படி கொடுத்தால் அவனால் இன்றைக்கு முடியுமா என்பதுதான்.சற்று யோசிக்க வேண்டிய ஒன்று .பூர்த்தி செய்ய ஆரம்பிக்கும் முன்னரே அதை எப்படி பூர்த்தி செய்வது என்ற குழப்பமும், கொஞ்சம் பயமும் அந்த மாணவனுக்கு நிச்சயம் இருக்கும்.காரணம் அதை எல்லாம் பள்ளிக்கூடங்கள் கற்றுக்கொடுப்பதில்லை.பாடத் திட்டத்தில் இருப்பது என்னவோ , அதை அப்படியே கரைத்துக் குடித்து விடவேண்டும்.அப்பொழுதுதான் அண்ணா யுனிவெர்சிடியில் நல்ல பிரிவில் பொறியியல் இடம் கிடைக்கும்.நான் யாரையும் இங்கே குறை சொல்லவில்லை.இன்றைய கல்வி முறை அப்படி இருக்கையில் நாமோ , இல்லை மாணவர்களோ என்ன செய்ய முடியும்.அண்ணன் பணிபுரியும் அரசாங்கப் பள்ளியில் இது போன்ற விண்ணப்பங்களை வாங்கி வந்து மாணவர்களை பூர்த்தி செய்யப் பழக்குகிறார்கள்.மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறார்கள் , அவர்களுக்குள் ஒருவித தன்னம்பிக்கையையும் இதன் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள்.பாராட்ட வேண்டிய ஒன்றுதான்.

இதைப் போன்று மாணவர்கள் நலனுக்காக எத்துனை  அரசாங்கப் பள்ளிகள் இயங்குகின்றன என்று தெரியவில்லை.ஆனால் , இப்படி மாணவர்களைப் பயிற்றுவித்தால் நிச்சயம் அவர்களிடம் படிக்கும் ஆர்வம் இன்னும் அதிகரிக்கும்.குறிப்பாக அரசாங்கப் பள்ளிகளில்.பத்து மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள அரசாங்கப் பள்ளிகள் நிறைய இருப்பதாக அண்ணன் கூறினார்.இந்தப் பள்ளிகள் எல்லாம் மூடு விழா நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.அதை நாம் தடுக்க முடியாது என்றாலும்கூட , ஓரளவு எண்ணிக்கை உள்ள அரசாங்கப் பள்ளிகளில் மேலே குறிப்பிட்டதைப் போல் கல்வி முறையை அரசாங்கம் மாற்றி அமைத்தால் நிச்சயம் வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் இன்னும்கூட அதிக அளவில் முன்னேறுவர். இன்னும்கூட மாணவர்கள் அதிக அளவில் அரசாங்கப் பள்ளிகளை நாடி வருவர். அதற்கு அண்ணனைப் போன்று மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பணி புரியும் தன்னலமற்ற ஆசிரியர்கள் நிச்சயம் தேவை.நிறையப் பேர் இருக்கிறார்கள் , அவர்களை அடையாளம் கண்டு கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை.தினக்கூலி வேலை செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளை கல்வியில் உயரத்தை அடையச் செய்வதே எங்களுக்கு பெருமை என்றார் அண்ணன்.அதுதான் நிதர்சனம். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

பி.கு. : இங்கே குறிப்பிட்ட செல்வக்கண்ணன் அண்ணன் அவர்கள் புதல்வி அரசாங்கப் பள்ளியில் படித்து இன்று மருத்துவப் படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s