காதலைக் கொச்சைப்படுத்தாதீர்கள் , குழந்தைகளின் எதிர்காலத்தை வீணாக்கிவிடாதீர்கள்

13எங்கள் குடியிருப்பில் கீழ்வீட்டில் வசிக்கும்  உறவினர் ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார்.கணவன் , மனைவிக்குள் நடக்கும் இந்தப் பிரச்சனையைப் பார்த்தவுடன் , காவல்துறை ஆய்வாளருக்கு உடனே தொலைபேசியில் தகவல் கொடுத்து விட்டார்.அவரும் உடனே ஜீப்பில் வந்துவிட்டார்.விசாரணை நடைபெற்றது. கணவனை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் எச்சரித்து விட்டு சென்றுவிட்டனர். அடுத்த முறை இது போல் நடந்தால் நிச்சயம் காவல் துறை வாகனத்தில் இவர் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்துவிடும். என்னங்க , ஒன்னும் புரியலையா , ஸாரி ஸாரி , விசயத்துக்கு வர்றேங்க.

ஒவ்வொரு முறை ஊருக்குச் சென்று திரும்பி வரும் பொழுதும் பல நிகழ்வுகளைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன்.ஆனால் அவை அனைத்தும் வாழ்க்கைக்கு முக்கியமானவைகள்.சென்ற வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன்.ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு சனிக்கிழமையே சென்றுவிட்டு வந்துவிட்டேன்.ஞாயிறு முழுவதும் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே என் மாஸ்டர் ப்ளான். ப்ளான் படியே நடந்தது. அன்றிரவு வீட்டில் இருந்து பெங்களூர் கிளம்பும் இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் இந்தச் சம்பவம் நடந்தது எங்கள் குடியிருப்பில்.

அதே குடியிருப்பில் வசிக்கும் கணவன் , மனைவிக்கு பெரிய சண்டை.பிறகுதான் தெரிந்தது அது நான்காவது முறையாக நடைபெறும் சண்டை என்று.இவர்கள் குடிபுகுந்து வெறும் இரண்டு மாதங்கள்தான் ஆகிறது.அதற்குள்ளேயே நான்கு முறை.இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் , கணவனின் முதல் காதல் தோல்வியில் முடிந்ததால் மனைவி இவரைக் காதலித்துள்ளார்.முதல் காதல் தோல்வியில் முடிந்த பொழுது கணவன் தற்கொலை முயற்சி செய்திருப்பார் போல் தெரிகிறது.ஆஹா, காதலுக்காக தன் உயிரையே கொடுக்கும்பொழுது நம்மை நிச்சயம் நல்ல முறையில் வைத்துக்கொள்வார் என்று நினைத்து மனைவிக்கு வந்த காதலால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.இவர்களின் காதலுக்கு பரிசாக திருமணம் , திருமணத்திற்கு பரிசாக ஒரு பெண் குழந்தை.இப்பொழுது வயது ஏழு.

கணவன் திருப்பூரில் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.அவ்வப்பொழுது ஈரோட்டிற்கு வருவார்.மனைவி ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில்  வேலை செய்து கொண்டிருக்கிறார்.கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு.கணவன் போதைக்கு அடிமையாகி விட்டார்.மனைவி மீது சந்தேகப் பார்வை.இதுதாங்க பிரச்சனையே.இது ஒன்றே போதுமல்லவா.இது சாதாரண விசயமும் அல்ல.அன்றும் குடித்துவிட்டு வந்தவர் வீட்டில் சாமான்கள் சிலவற்றை  உடைத்துவிட்டு , மனைவியையும் , மாமியாரையும் அடித்து விட்டார்.வீட்டிற்குள் நடந்து கொண்டிருந்த சண்டை வெளியில் வந்துவிட அனைவரும் பார்க்கும்படி ஆகிவிட்டது(இத்தனை வருடங்களில் குடியிருப்பில் இது போன்ற சண்டை நடப்பது இதுவே முதன் முறை , உரிமையாளர் சீக்கிரம் அவர்களைக் காலி செய்யச் சொல்லிவிடுவார் என்றே தோன்றுகிறது).

யார் மேல் தவறு என்றெல்லாம் இங்கே தெரிந்துகொள்ளத் தேவை இல்லை.எனக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது இவர்களோ , இவர்களின் சண்டையோ அல்ல.அவர்கள் பெற்றெடுத்த அந்த ஏழு வயது  பிஞ்சுக் குழந்தைதான்.அந்தக் குழந்தையைப் பார்த்த நொடி ஒரு சொட்டுக் கண்ணீரே வந்துவிட்டது.அவ்வளவு பரிதாபமாக இருந்தது அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்க்க.இவர்கள் இருவரும் சண்டையிட்டுக்கொள்ளும் பொழுது குழந்தை அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே அழுகையில் செய்வதறியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததுதான் வேதனையாக இருந்தது.இவ்வளவு சின்ன வயதில் இந்தச் சம்பவம் அந்தக் குழந்தைக்கு எத்தகைய மனநிலையை உண்டாக்கி இருக்கும்  என்று சற்றும் கூட அவர்கள் இருவரும் யோசிக்கவில்லை.அந்தக் குழந்தைக்கு நேர்ந்ததைப் போல் நம் எதிரியின் குழந்தைக்குக் கூட அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது. இதே போன்ற இன்னும் பல நிகழ்வுகளை அந்தக் குழந்தை பார்க்க நேரிடும் , நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

இவர்கள் இருவரும் உண்மையாகத்தான் காதலித்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது.அப்படி உண்மையாகக் காதலித்திருந்தால் , கணவன் மனைவி மேல் சந்தேகப்பட மாட்டான் , மனைவியும் கணவனுக்குத் துரோகம் செய்ய மாட்டாள்.யார் மேல் தவறு என்று தெரியவில்லை.மனைவி தவறு செய்யவில்லை என்றால் சந்தேகப்படும் கணவன் மேல்தான் தவறு , மனைவி தவறு செய்திருந்தால் மனைவி மேல்தான் தவறு.மொத்தத்தில் இவர்கள் இருவரும் உண்மையாகக் காதலிக்கவில்லை என்பதை மட்டும் என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.எது எப்படி இருந்தாலும் , இவர்கள் இருவரின் முட்டாள்தனத்தால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாகவே தோன்றுகிறது.நல்ல எதிர்காலத்தை இறைவன் அக்குழந்தைக்குக் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்.

காதலர்களே , நீங்கள் காதலிக்கும் பொழுது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு , விருப்பு வெறுப்பு அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இருவரும் நல்ல புரிதலோடு இருந்தால்தான் அதற்குப் பெயர் காதலாக இருக்க முடியும் , பிறகே திருமணம்.இல்லையேல் , வெறும் கவர்ச்சியால் வந்த காமத்தினால் ஏற்பட்ட ஒரு பெரிய விபத்தாகத்தான் என்னால் காதலைப் பார்க்க முடிகின்றது.

—– இதில் பாதிக்கப்பட்ட அந்தக்  குழந்தையுடன் நான் 30-08-2015 அன்று. முகநூல் பதிவை இங்கு பகிர்கின்றேன்  —–

ஆதிராவிற்கு வயது 9.மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.பெற்றோர்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்துவிட அடிக்கடி வீட்டில் சண்டை.கடந்த வருடம் அவர்கள் சண்டை விவாகரத்து வரை சென்றுவிட்டது.தற்பொழுது அது சம்பந்தமான சட்ட ரீதியான நடவடிக்கையில் இருவரும் இறங்கியுள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே அவர்களின் காதலுக்குப் பரிசாக இந்த விவாகரத்து கிடைக்கப் போகிறது.ஆதிராவின் நிலைதான் பரிதாபமாக உள்ளது.வீட்டில் எந்நேரமும் பெற்றோர்களின் சண்டையைப் பார்த்து வளர்ந்தவள் தற்பொழுது அன்பிற்காக ஏங்குகின்றாள்.எங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவள்தான் இந்த ஆதிரா.

நேற்றைக்கு என் மகன்களோடு நான் விளையாடிக் கொண்டிருக்கையில் வீட்டிற்கு வந்தாள் ஆதிரா.அவள் உள்ளே நுழைந்த போதுதான் “நீங்க யார் செல்லம்டா தங்கம் , அப்பா செல்லமா இல்ல அம்மா செல்லமா” என்ற கேள்வியை மகன்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்.”அப்பா செல்லம்” என்றுதான் சொல்வார்கள் என்று தெரிந்ததால் அதை வைத்து மனைவியை கிண்டல் செய்வதற்காக எப்பொழுதும் கேட்பதைப் போல் நேற்றைக்கு வழக்கமான அதே கேள்வியைக் கேட்க அவர்களும் சிரித்துக்கொண்டே மனைவிக்கு முன்னால் என்னைக் கட்டிப்பிடித்தவாறே “அப்பா செல்லம்” என்று சத்தமாகச் சொல்ல அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தாள் ஆதிரா.

எங்களைப் பார்த்தவளின் கண்களில் அப்படியொரு ஏக்கம்.சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவளின் கண்கள் அந்த ஏக்கத்தை நன்றாகவே காட்டிக்கொடுத்தது.அம்மாவோடு இருக்கும் தனக்கும் அப்பாவின் அன்பு தேவை என்பதை அழுத்தமாக உணர்த்தின அவள் கண்கள்.சில நொடிகள் அவள் எதுவும் பேசாமல் இருந்தாள்.அவள் வந்த நேரமாகப் பார்த்து இப்படிக் கேட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு எனக்கு.சோகமாகவே இருந்தவளுக்கு பெற்றோர்களிடம் இருந்து நிறைய அன்பு தேவைப்படுகிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

சரியான புரிதல் இல்லாமல் வயதுக் கோளாறால் ஏற்படும் காமத்திற்கு காதல் என்று பெயரிட்டு கொச்சைப் படுத்துகிறார்கள் இப்படி சிலர். அந்தக் காமம் திருமணமாக மாறிய பின் தங்களுக்குள் சரியான புரிதல் இல்லை என்று சொல்லி எளிதாகப் பிரிந்துவிடுகிறார்கள் இவர்கள்.இவர்கள் பிரியும் அந்த சமயத்தில்தான் அவர்களின் காமத்திற்குப் பரிசாகக் கிடைத்த ஆதிராவைப் போன்ற அப்பாவிக் குழந்தைகள் பலிகடா ஆகிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை ஆதிரா மனரீதியாக எப்படிப் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பதை அடித்துச் சொல்வேன்.

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச அன்புகூட அவளுக்குக் கிடைக்கவில்லை என்பது அவளுடைய ஏக்கம்.இதே ஏக்கத்துடன் அவள் வளர வளர அவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே

———- அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s