நாளைய விஞ்ஞானிகள்

13படிப்பைப் பற்றி பேசினாலோ, எழுதினாலோ மணிக்கணக்கில் பேசலாம் , பக்கம் பக்கமாக எழுதலாம்.பெரிய அளவில் செயல் முறைக் கல்வி இல்லாத ஒரு கல்வி முறையில்தான் நமது கண்மணிகள் தற்பொழுது படித்து வருகிறார்கள்.இருப்பினும் , நிறைய மாணவச் செல்வங்கள் இன்றைக்கு தங்களுடைய திறமைகளை பல சிறிய கண்டுபிடிப்புகள் வாயிலாக நமக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள்.பள்ளிக்கூடங்களும் , கல்லூரிகளும் அவர்களுக்கு துணைபுரிந்தாலும் கிராமப்புற மாணவர்கள் நிறையப் பேர் தங்களின் அதீத திறமைகளை இன்னும் பெரிதளவில் வெளிக்கொணரவில்லை என்றே நினைக்கிறேன்.கடந்த சனிக்கிழமை “கேம்பஸ் இன்டர்வ்யூ” – விற்காக பெங்களூரில் ஒரு கல்லூரிக்குச் செல்ல அலுவலகத்தில் அழைத்திருந்தார்கள்.இன்னும் மூன்று வருடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடவிருக்கிறது அந்தக் கல்லூரி.அவ்வளவு பழமை வாய்ந்த கல்லூரி.பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் என்றால் கேள்வி நேரத்தின்போது சற்றே அதிக நேரம் எடுத்துக்கொள்வதுண்டு.நாமும் அதே பின்னணியில் இருந்து வந்திருக்கிறோம் அல்லவா , அதனாலேயே இந்த மாணவர்கள் கேள்விக்கு அளிக்கும் பதில்களை உன்னித்துக் கவனிப்பதுண்டு. தாங்கள் கற்கும் கல்வியினால் நாட்டிற்கு தங்களால் ஏதேனும் செய்ய முடியுமா என்று நினைக்கும் மாணவர்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள்.

இந்த முறை நான் சந்தித்த மாணவர்களில் ஒருவன் கிராமப்புறத்தில் இருந்து தன் கல்வியைத் தொடங்கி B.E படிப்பும் முடித்துவிட்டு தற்பொழுது M.E படித்துக்கொண்டிருக்கிறார் அந்தக் கல்லூரியில். பள்ளிக்கல்வி கன்னட மீடியம்தான்.ஆங்கிலம் எல்லாம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை இந்த மாணவனுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை. குடும்பத்தின் கஷ்டத்தையும் தாண்டி கல்லூரி வாழ்க்கையை பெங்களூரில் ஆரம்பித்திருக்கிறார்.ஆரம்பத்தில் சக மாணவர்களுடன் பழக சற்று கூச்சம்.பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்த மாணவர்களுடன் இந்தப் பையனால் சகஜமாகப் பழக முடியவில்லை.இங்கேயே பிறந்து வளர்ந்த பசங்க ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்புவார்கள். ஆரம்பத்தில் நான் பெங்களூர் வந்தபொழுது அந்தப் பயபுள்ளைகளிடம் சிக்கிக்கொண்டால் நம்ம ரஜினி சார் படிக்காதவன் படத்தில் சொல்வதுபோல் “யெஸ் , யெஸ்” என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன நாட்கள் எல்லாம் உண்டு .சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள்.இந்தப் பையனால் அவர்களுடன் பல நாட்கள் கழித்தே சகஜமாகப் பழக முடிந்திருக்கிறது.சீக்கிரம் ஆங்கிலம் கற்றுக்கொண்டான்.

B.E படிப்பு முடியும் தருவாயில் தான் பெற்ற கல்வி அவனை ஆராய்ச்சித் துறையில் அழைத்துச் சென்றிருக்கிறது.தொடர்ந்திருக்கின்றான்.நான்கு வருட படிப்பு முடிந்துவிட்டது.M.E படிக்க வேண்டும் என்று ஆசை.தன் ஆராய்ச்சி சம்பத்தப்பட்ட துறையையே படிப்பில் எடுக்க வேண்டும் என்று ஆசையும்கூட.அப்பா விவசாய வேலை , அம்மா சில வீடுகளில் வேலை செய்து கொஞ்சம் பணம் ஈட்டுகிறார்.இந்தப் பையனால் பெற்றோர்களை மீண்டும் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை.இருப்பினும் பெற்றோர்கள் தங்களின் கஷ்டத்தையும் தாண்டி அவன் விருப்பப்படியே M.E படிக்க வைத்திருக்கிறார்கள்.தற்பொழுது M.E இரண்டாம் ஆண்டில்.பேச்சில் அவ்வளவு தெளிவு , முன்னேற வேண்டும் என்ற வெறி , தன்னால் நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஏக்கமும் அவனுள்.தனது ஆராய்ச்சியின் மூலம் “பயோ கேஸ்” சம்பத்தப்பட்ட கண்டுபிடிப்பொன்றை உருவாக்கிவிட்டான்.”ஆராய்ச்சியில் இவ்வளவு ஆர்வமுள்ள நீ பிறகெதற்கு IT வேலைக்கு வர வேண்டும் , நீ செல்ல வேண்டிய இடம் வேறு என்று நினைக்கின்றேன்” என்று அவனிடன் என் கேள்வியை முன்வைத்தேன்.

“நீங்கள் சொல்வது சரிதான் சார் , என் கண்டுபிடிப்பின் மூலம் இந்த நாட்டிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன். ஆனால் அதற்கான உதவியோ ,அங்கீகாரமோ இதுவரை கிடைக்கவில்லை , கல்லூரி எனக்கு உறுதுணையாக இருந்தாலும் அரசாங்கம் நினைத்தால்தான் என் கண்டுபிடிப்புகள் எல்லாம் பயனடையும் , வெளியில் கொண்டு வரமுடியும். நான் முயற்சித்துப் பார்த்து விட்டேன்.இதுவரை எனக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை.மீண்டும் மீண்டும் பெற்றோர்களை சிரமப்படுத்த எனக்கு மனம் வரவில்லை.அதனாலேயே , IT துறையில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டு அங்கு என்னால் முடிந்த கண்டுபிடிப்புகளை நிச்சயம் கொண்டுவருவேன் என்ற நம்பிக்கையில் இந்த இன்டர்வியூ வந்திருக்கிறேன்” என்றான்.அவனுடைய தன்னம்பிக்கை , கிராமப் புறத்தில் இருந்து வந்து சரளமாகப் பேசிய ஆங்கிலம் , எங்கு சென்றாலும் தன் ஆராய்ச்சியை அந்தந்தத் துறையில் தொடருவேன் என்ற அவனுடைய விடாமுயற்சி சற்றே ஈர்த்தது.எடுத்துவிட்டேன் எங்களில் ஒருவனாக ஆக்கிக்கொள்ள.

இதை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் , நிறைய மாணவர்களிடம் இது போன்ற திறமைகளும் , நாட்டிற்கு வலுசேர்க்கும் கண்டுபிடிப்புகளும் ஏராளம் இருக்கின்றன.ஆனால் இவர்களை எல்லாம் ஊக்கப்படுத்த அரசாங்கம் முயற்சிகள் எடுக்கிறதா என்று தெரியவில்லை.தட்டிக் கொடுத்தால் மட்டும் போதாதே , இவர்களின் கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வது வசதியற்ற இவர்களால் மட்டுமே முடியாத காரியம்.அரசாங்கத்தின் பங்கு அளப்பரியது.எது எப்படியோ , நாளைய இந்தியாவிற்கான விஞ்ஞானிகள் இன்று உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருதுகின்றேன்.

————- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to நாளைய விஞ்ஞானிகள்

 1. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  Liked by 1 person

 2. Shan says:

  IT வேலை என்பது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் இல்லை எனவே அந்த தம்பி அதனை தனக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கு ஒரு இடமாக மட்டும் கருதி, அதில் கிடைக்கும் பணத்திற்கு அடிமை ஆகாமல், தனது ஆராட்சி களையும் அதன்முலம் கண்டுபிடிப்புகளையும் காணவேண்டும். அவருக்கு தங்களின் சந்திப்பு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும்.
  அன்புடன்,
  சாந்தமூர்த்தி

  Liked by 1 person

  • நிச்சயமாக. உங்கள் கருத்துகள் ஏற்புடையது.நான் பார்த்த வரையில் பணம் சம்பாத்திக்கும் துறையாக மட்டும் அவன் IT துறையை நினைக்கவில்லை என்றே கருதுகின்றேன்.நிச்சயம் அந்த மாணவனுக்கு இங்கே பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவே நினைக்கிறேன்.நன்றி.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s