ஏமாறாதே ஏமாற்றாதே

1இரவு 2:30 மணி.திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கின்றேன் .அங்கிருந்து பெங்களூர் வருவதற்கு பேருந்திற்காக காத்திருக்கின்றேன் .ஆட்டோக்காரர் ஒருவர் என்னிடம் வருகிறார்.சார் எங்கே போக வேண்டும் சொல்லுங்க என்கிறார்.நான் அவரிடம் எனக்கு ஆட்டோ வேண்டாம் என்கின்றேன்.இருந்தாலும் அவர் என்னை விடவில்லை.மீண்டும் மீண்டும் என்னிடம் பரவாய் இல்ல சார் மீட்டர் போட்டுக்கொள்ளலாம் வாங்க சார் என்கிறார்.பிறகு , எங்கே போக வேண்டும் என்று கேட்கிறார்.பல முறை எனக்கு ஆட்டோ தேவை இல்லை என்று சொல்லியும் அவர் கேட்காததால் நம்ம லொள்ளுப் பேச்சை அவரிடம் காட்டிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்து , “அண்ணா பெங்களூர் போவோணும் வரீங்களா” என்றேன்.என்னிடம் இந்த பதிலை நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார் ஆட்டோ அண்ணன்.ஒரு நிமிடம் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார்.நான் அடுத்த ஐந்து நிமிடத்தில் பெங்களூர் பேருந்தில்.இதை ஏன் சொல்கின்றேன் என்றால் , ஆட்டோ ஓட்டுபவர்களை விமர்சிப்பதற்காக அல்ல.அவர்கள் செய்யும் தொழிலை மதிக்கவும் தவறவில்லை நான்.இங்கே குறிப்பிட்ட இந்த ஆட்டோ நாயகனைப்போல் கடந்த பத்து ஆண்டுகளில் நிறையப் பேர்களை நான் பார்த்துவிட்டேன்.நாமாக தேடிப்போய் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கே வருகிறீர்களா என்று கேட்டால் வரமாட்டார்கள்.நமக்குத் ஆட்டோ தேவை இல்லாத நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும்.

வார இறுதி நாட்களில் ஊருக்குச் சென்று விட்டு திங்கட்கிழமை காலை பெங்களூர் “சில்க் போர்டு” வந்து இறங்குவது வழக்கம்.நீங்களும் அங்கே எப்பொழுதாவது வந்து இறங்கி இருந்தால் தெரியும்.நீங்கள் ஒன்றும் செய்யத் தேவை இல்லை.பேருந்தில் இருந்து கீழே இறங்கி விட்டால் போதும்.ஒரு இருபது ஆட்டோக்காரர்கள் வந்துவிடுவார்கள்.அப்படியே உங்களை அலாக்காகத் தூக்கிக் கொண்டுபோய் அவர்கள் ஆட்டோவில் உட்காரவைத்துவிடுவார்கள்.அவ்வளவு தொந்தரவு.நீங்கள் நடக்கக்கூட முடியாது.உங்களுக்கு ஆட்டோ தேவை இல்லை என்றாலும்கூட எங்கே போக வேண்டும் என்று கேட்டுக்கொண்டே பின்தொடர்வார்கள்.சரி , இந்த இடத்திற்கு செல்லவேண்டும் வாங்க போகலாம் என்றால் , ஐம்பது ரூபாய் கொடுத்து செல்லவேண்டிய இடத்திற்கு இருநூறு வரை வாயில் வசனம் பேசுவார்கள்.காலை நேரங்களில்தான் இப்படி.பகல் நேரங்களில் ஓரளவு மீட்டர் போட்டே ஓட்டுகின்றனர்.பகல் நேரங்களில் ஆட்டோவை நிறுத்தி நீங்கள் ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்று கேட்கும்பொழுது அவர்களுக்கு அந்த இடத்திற்கு சென்றால் அதிக லாபம் கிடைக்காது என்கிறபொழுது உங்களிடம் மனிதத் தன்மைக்காக ஒரு பதிலைக் கூட சொல்லாமல் மூஞ்சியை அந்தப் பக்கமாகத் திருப்பிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.அதே காலை நேரங்களில் ஊரில் இருந்து வந்து இறங்கினால் தாரை தப்பட்டையோடு மரியாதைதான்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் , பெங்களூரில் IT துறையில் பணிபுரிபவர்கள்தான் அதிகம் என்பதால் , சில ஆட்டோக்காரர்கள் வெளிப்படையாகவே நாம் பேரம் பேசும்பொழுது அவர்கள் மனதில் இருப்பதை சொல்லிவிடுவார்கள்.என்ன சார் , உங்களுக்குத்தான் வெளிநாட்டுக்காரன் கொட்டிக்கொடுக்கிறான் அல்லவா , அப்புறம் என்ன சார் இது கூடவா உங்களால் கொடுக்க இயலாது என்பார்கள். என்னமோ இவர்களைப் போன்றவர்கள் எங்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து வேலை வாங்கித்தந்ததைப் போல். அந்தப் பணத்தை சம்பாதிக்க எத்துனை கஷ்டங்களை நாங்கள் அனுபவிக்கின்றோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். சென்னையிலும் பத்து வருடங்களுக்கு முன் ஆட்டோ அனுபவங்கள் உண்டு.ஐந்து கிலோமீட்டர் செல்வதற்கு 180 ரூபாய் கொடுத்த நாட்கள் அவை.இப்படிப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் இருந்தாலும் , ஒரு சில நல்லவர்களையும் அவ்வப்பொழுது பார்க்கத் தவறவில்லை.இரண்டு வாரங்களுக்கு முன் காலையில் ஹோண்டா நிறுவனம் செல்ல வேண்டியிருந்தது. அங்கே சென்று பைக் எடுத்துவரவேண்டும்.ஆகையால் , செல்லும் பொழுது ஆட்டோவில் சென்று விட்டு வரும் பொழுது பைக்கில் வந்துவிடலாம் என்று நினைத்து வீட்டிலிருந்து கிளம்பி வந்து பல ஆட்டோக்களை நிறுத்திவிட்டேன்.ம்ம்ஹூம் , ஒருவரும் வரவில்லை.கடைசியில் , ஒரு ஆட்டோவை நிறுத்திக் கேட்டேன்.அந்த ஆட்டோ ஓட்டுனர் ஒரு இசுலாமியர்.வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.அறுபது ரூபாய் என்று பேசி ஆட்டோவில் ஏறிவிட்டேன் . அங்கே சென்று திரும்பி வருகையில் அவருக்கு சவாரி கிடைக்காது என்பதால் மீட்டர் போடவில்லை , எனக்கும் அது சரியாகப் பட்டதால் அறுபது ரூபாய் டீலிங்.இருப்பினும் அது சற்றே அதிகம் என்றே தோணியது. வேறு வழி இல்லை.

மனிதர் வயதானாலும் , அவர் பேச்சில் நியாயமாகவும் , சாந்தமானவராகவும் தெரிந்தார்.அடுத்த பத்தாவது நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்தது.இங்கேதான் நிறுத்துங்கள் என்று கூறியவுடன் என்னிடம் அவர் “சார் நான் இன்னும் செல்லவேண்டும் என்று நினைத்தேன் , இந்த இடம்தானா” என்றார்.நான் ஆம் என்றேன்.இடம் வந்தது , நானும் இறங்கினேன்.உடனே எனக்கொரு அதிர்ச்சியைக் கொடுத்தார் அந்த இசுலாமியப் பெரியவர்.”சார் , இந்த இடம் என்று எனக்கு தெரிந்திருந்தால் நான் உங்களிடம் அறுபது சொல்லி இருக்க மாட்டேன்.நீங்கள் ஐம்பது ரூபாய் மட்டும் கொடுங்கள் , போதும்” என்றார்.கடந்த பதினோரு வருடங்களில் இப்படி ஒரு ஆட்டோ ஓட்டுனரை சத்தியமாக நான் இங்கே பார்த்ததே இல்லை.”ஐம்பது போதுமா” என்றேன் அவரிடம்.அதற்கு அவர் , சார் நியாயமாக சம்பாதிப்பதே நிற்பதில்லை , இதில் உங்களிடம் இந்த குறைந்த தொலைவிற்கு ஏமாற்றி அறுபது ரூபாய் வாங்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.அப்படியே வாங்கினாலும் அந்தப் பணம் நிற்காது.நீங்கள் ஐம்பது மட்டும் கொடுங்கள் என்றார்.என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.அவரிடம் ஐம்பதைக் கொடுத்துவிட்டு இவ்வாறு கூறினேன் , “அய்யா , நேர்மையான ஆட்டோக்காரர் ஒருவரையும் இத்துனை வருடங்களாக இந்த பெங்களூரில் நான் பார்த்ததில்லை.நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள் என்று கூறிவிட்டு அவரை வணங்கிவிட்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்.ஜாதி , மதம் , மொழி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்த தேசத்தில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.

————————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s