செய்யும் தொழிலே தெய்வம்

1“செய்யும் தொழிலே தெய்வம்” என்பார்கள்.உண்மைதான்.தொழில் செய்பவராக இருந்தாலும் , தினக்கூலிக்கோ , மாதச் சம்பளத்திற்கோ வேலை செய்பவராக இருந்தாலும் ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.அதே சமயம் நமக்கு படி அளக்கும் முதலாளிக்கும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும்.விசுவாசம் என்றால் அவர் சொல்வதற்கெல்லாம் “ஆமாம் சாமி” போட வேண்டும் என்பதில்லை.நமக்கு சோறு போடும் அவருக்கு நம்மால் முடிந்த வரை இழப்பையாவது கொடுக்காமல் இருந்தாலே அதுவும் விசுவாசம்தான். சம்பளக்குறைவு , அதிக நேரம் வேலை வாங்குதல் என்றெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.அதை முதலாளிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்றாலும் , அதை மட்டுமே காரணம் காட்டி அவருடைய தொழிலிற்கு நஷ்டம் ஏற்படுத்துவது மனசாட்சியை அடகு வைத்து விட்டு வேலை செய்வதற்கு சமம்.நமக்குப் பிடிக்கவில்லை என்றால் உடனே அங்கிருந்து வந்து விட வேண்டியதுதான்.வேறு இடத்தில் வேலை பார்த்துக்கொள்ளலாம்.அவரும் வேறு ஆளைப் பார்த்துக்கொள்ளட்டும்.அவ்வளவுதான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கரூருக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்கச் சென்றிருந்தேன்.கரூர்காரர்களுக்கு பரிச்சயப்பட்ட வீதிதான் அது.முதல் கடையில் தேடிய “டிசைன்” கிடைக்காததால் அடுத்த கடைக்குச் சென்றேன்.வரவேற்பு பலமாக இருந்தது.குறையில்லை.உள்ளே சென்றவுடன் அந்தக் கடையின் மேலாளர் ஒருவர் , விற்பனையாளர் ஒருவரை அழைத்து எனக்கு “டிசைன்களை’ காட்டச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.இந்த விற்பனையாளருக்கு ஏதோ பிரச்சனை போல் தெரிந்தது.அவர் மனம் எங்கேயோ இருந்ததை என்னால் ஓரளவு கணிக்க முடிந்தது.மூன்று நான்கு ரகங்களை எடுத்துப் போட்டார் அவர்.எனக்குப் பிடிக்கவில்லை.குழந்தைகளுக்கு துணி எடுப்பது என்பது நமக்கு எடுப்பதை விட கஷ்டமான விஷயம்.வேறு “டிசைன்கள்” இருந்தால் காட்டுங்கள் என்றேன்.ஏதோ காட்டவேண்டுமே என்று நினைத்து இன்னுமிரு “டிசைன்களை” காட்டினார்.அதுவும் பிடிக்கவில்லை.அவர் காட்டியதெல்லாம் பழைய “டிசைன்கள்”. சரி இங்கேயும் நமக்குக் கிடைக்காது என்று நினைத்துவிட்டு , “சரி நான் வேறு கடையில் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறியவுடன் “சரிங்க சார்” என்றார்.நான் அங்கிருந்து நடக்கத் தொடங்கியவுடன் அங்கிருந்த இன்னொரு விற்பனையாளர் என்னிடம் வந்து “சார் , வாங்க நான் உங்களுக்கு வேறு சில டிசைன்களைக் காட்டுகின்றேன்” என்றார்.

மீண்டுமொருமுறை பார்க்கத் தொடங்கினேன்.பல புது “டிசைன்கள்” வெளியில் வந்தது.அவை எதுவும் முதலில் வந்த விற்பனையாளர் என்னிடம் காட்டவில்லை.இவர் வந்ததும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் எனக்குத் தேவையான துணியை தேர்வு செய்துவிட்டேன்.வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பேச வேண்டும் , அவர்களிடம் எப்படி அணுகுமுறை இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் இரண்டாவதாக வந்த விற்பனையாளர்.அதில் , ஒரு பத்து சதவீகிதமாவது முதல் நபரிடம் இல்லை. அவருக்கும் அங்கே சம்பளம்.இதுதான் , துரோகம் என்பது.கிட்டத்தட்ட வெளியில் வர இருந்த என்னை அங்கே துணி வாங்க வைத்தவர்தான் விசுவாசம் என்பதற்கு உதாரணம்.இவரைப் போல் நிறையப் பேர் அவ்வப்பொழுது நம் கண்ணில் படுவர்.இங்கே வந்த முதல் விற்பனையாளரைப் போல் நான் பணி புரியும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பல நபர்களைப் பார்த்திருக்கின்றேன்.இங்கே பெரும்பாலும் வருட கடைசியில்தான் அனைவருக்கும் தாங்கள் அந்த வருடத்தில் எப்படி வேலை செய்தார்கள் என்று தங்கள் மேலாளரிடம் இருந்து தெரியவரும்.சிலர் மிகவும் அருமை , சிலர் அருமை , சிலர் பரவாய் இல்லை என்று அவரவர்கள் அந்த வருடத்தில் எப்படி வேலை செய்தார்களோ அதற்குத் தகுந்தாற்போல் “ரேட்டிங்” வழங்கப்படும்.

இந்த “ரேட்டிங்” வந்ததற்குப் பின் பல மாற்றங்களை பலரிடம் பார்க்கலாம் ஒரு சில வாரங்களுக்கு.அவர்கள் எதிர்பார்த்த “ரேட்டிங்” வரவில்லை என்றால் அவர்களுடைய மேலாளரை கிட்டத்தட்ட எதிரி போல்தான் நடத்துவார்கள்.கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துத் தர மாட்டார்கள் , அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார்கள் மற்றும் இன்னபிற செயல்களால் தங்கள் எதிர்ப்பை மேலாளருக்கு உணர்த்துவர்.அது சரியா , தவறா என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது என்றாலும் அவர்களுக்கு அங்கே வேலை செய்யப் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வேறு நிறுவனத்திற்குச் சென்றுவிடவேண்டியதுதானே என்பதுதான் என் வாதம்.அதற்காக , வயிற்ரை நிரப்புபவனுக்கு இவ்வாறெல்லாம் இம்சைகள் கொடுத்து பழி வாங்குவது என்பது ஏற்புடையதல்ல.இதைப் போன்ற பல துறைகளிலும் , பல நிறுவனங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அடிப்படை விஷயம் ஒன்றுதான் , நம்மால் முடிந்தால் முதலாளிக்கும் அவரின் தொழிலிற்கும் உறுதுணையாக இருக்கலாம் , இல்லையேல் வெளியேறலாம்.அவ்வளவுதான்.அங்கேயே இருந்துகொண்டு சதி வேலைகள் செய்து அவரின் தொழிலிற்கு நஷ்டம் ஏற்படுத்துவதென்பது “மனசாட்சி என்றால் என்ன” என்று கேட்பதைப் போலத்தான்.

————— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to செய்யும் தொழிலே தெய்வம்

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s