என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் ?

2சில நேரங்களில் “என்னடா வாழ்க்கை வாழ்கிறோம்” என்பதைப் போல் ஆகிவிடுகிறது நாம் வாழும் வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால். இங்கே மனிதனின் ஓட்டத்துக்கு முதல் முக்கியக் காரணம் பணம்தான்.பணத்துக்காக ஓடுகின்றான் ஓடுகின்றான் ஓய்வின்றி ஓடுகின்றான். “இப்படி வாழுங்கள் அப்படி வாழுங்கள் , மனிதனுக்கு பணம் முக்கியமில்லை , மனம்தான் முக்கியம் ” என்று வேண்டுமானால் மேடையேறி வாய் கிழியப் பேசிவிட்டு நான் கைதட்டல் வேண்டுமானால் வாங்கலாம். ஆனால் , நாம் ப்ராக்டிகலாகப் பேச வேண்டும்.ப்ராக்டிகலாக இந்த விஷயத்தை நீங்கள் பார்த்தால் நீங்கள் எதை நோக்கி உங்கள் வாழ்க்கையை எடுத்துச் செல்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரியும்.அப்படிப் புரிந்துகொள்பவர்கள் சிலர் ஆம் பணத்துக்காகத்தான் நான் ஓடுகின்றேன் என்று ஒப்புக்கொள்வார்கள் , சிலர் அப்படி எல்லாம் இல்லப்பா என்று நடிக்க வேண்டியிருக்கிறது.நமக்கு நாமே நடித்துக்கொள்வதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.மாதச் சம்பளம் வருவதற்கு முன்பே பல திட்டங்கள் தீட்டப்பட்டு விடுகின்றன வீட்டில்.சம்பளம் வருவதும் போவதும் நிமிடங்களில் நிகழ்ந்துவிடுகின்றது.

வேலைக்குப் போனவுடன் ஒரு சில மாதங்களிலேயே வீடு கட்ட வேண்டும் , நிலம் வாங்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் வரத்தான் செய்கிறது.அந்தக் கனவை நனவாக்க நமக்கு கடன் தருவதற்குத்தான் இன்றைக்கு மூளைமுடுக்கெல்லாம் பல தனியார் வங்கிகள் வந்துவிட்டன.ஒரே ஒரு போனைப் போட்டால் நீங்கள் போனை வைக்கும் முன்பு வங்கியில் இருந்து ஒரு ஆள் வந்துவிடுவார்.எவ்வளவு லோன் வேண்டும் , எவ்வளவு வட்டி என்பதில் இருந்து அனைத்தையும் விரிவாகச் சொல்லி விட்டு உங்களிடமும் தேவையான ஆவணங்களை வாங்கிவிட்டுச் சென்றுவிடுவார்.அடுத்த சில நாட்களிலேயே நீங்கள் கேட்ட லோன் வந்துவிடும்.பிறகென்ன , வீடு வாங்கிவிடலாம் , குடியேறிவிடலாம்.அதற்குப் பின்புதான் நமது ஓட்டம் என்பது “தடங்கலுக்கு வருந்துகின்றோம்” என்ற இடைவெளி இல்லாமல் ஓடுகிறது.இது தவறென்று சொல்வதற்கில்லை.இதில் நடுத்தர வர்க்கத்தினர் படும் கஷ்டங்கள்தான் ஏராளம்.அவர்களைப் பொருத்தவரை குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டால் அதுவே வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான சான்று.இதைச் சாதித்துக் காட்டினாலே அவர்கள் வாழ்ந்த வாழ்விற்கான அர்த்தம் முழுமை பெற்றுவிடும்.அவ்வளவு சவால்களைச் சந்தித்துத்தான் வாழ்க்கையில் மேலே வர முடிகிறது அவர்களால்.

காலையில் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் நேரம் மட்டும் நமக்குத் தெரியும்.ஆனால் , அங்கிருந்து எப்பொழுது வீடு கிளம்புவோம் என்பது தெரிய வேண்டுமானால் நாம் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் சாத்தியம்.இன்றைக்கு அரசாங்க உத்தியோகம் எல்லாம் குதிரைக் கொம்பாகிவிட்டது.சத்துணவு ஆயா வேலைக்குக் கூட லட்சத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைதான் இன்று நமது நாட்டில்.தனியார் துறைதான் இன்று நிறைய குடும்பங்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருக்கிறது.அதில் தகவல் தொழில் நுட்பத்துறையும் ஒன்று.பல கோடி மக்களும் அவர்கள் குடும்பமும் இந்தத் துறையால் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான்.நிறையப் பணம் வருகிறது , ஆனால் பெரிய அளவில் திருப்தி கிடைப்பதில்லை என்று நிறையப்பேர் புலம்பிக்கேட்டிருக்கின்றேன்.ஏன் , அதில் நானும் கூட ஒருவன்தான்.அதற்காக ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம் என்று ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை.காரணம் , வெறும் பேச்சுக்காக அப்படிச் சொல்ல மனம்வரவில்லை.சோறு போடும் தெய்வமாயிற்றே.நம்மை நம்பி குடும்பம் இருக்கிறது.குழந்தைகளின் எதிர்காலம் நம் கையில் இருக்கிறது.பணம் கிடைக்கிறது என்பது உண்மைதான்.ஆனால் , அதற்காக பல தியாகங்களை நாம் செய்ய வேண்டி இருக்கிறது. அதுதான் சற்று வேதனையாக இருக்கிறது.

காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே அலுவலகம் கிளம்பி இரவில் குழந்தை தூங்கிய பின் வருபவர்கள் நிறையப் பேர்.குழந்தைகளிடம் கூட நம்மால் நேரம் செலவிட முடியாத நிலை.பணமும் அதை நோக்கிய ஓட்டமும்தான் காரணம்.அதுபோக , இன்றைக்கு இங்கிலீஷ் மருந்து மாத்திரைகள் இல்லை என்றால் நமது வாழ்க்கைச் சக்கரம் சுத்தாது என்ற நிலை வந்துவிட்டது.இன்றைக்கு நகரங்களில் பல மடங்கு மாசு பெருகிவிட்டது.பதினோரு வருடத்திற்கு முன்பு நான் பெங்களூர் வந்தபொழுது இருந்த பெங்களூர் வேறு இன்று நான் காணும் பெங்களூர் வேறு.எங்கும் மாசுதான்.எதிலும் மாசுதான்.இதே நிலைமைதான் மற்ற நகரங்களிலும்.அதனால்தான் , இன்றைக்கு பல நோய்கள் எளிதாக நம்மைத் தாக்கி விடுகின்றன.அதற்கு தீர்வாக இங்கிலீஷ் மருந்துதான் நமக்கு தெரிகிறது.காலையில் மாத்திரையைப் போட்டுக்கொண்டே ஓடுகிறான் , இரவு தூங்கும் முன்பும் மாத்திரையைப் போட்டபின்பே தூங்குகின்றான்.இதுதான் இன்றைக்கு நகர வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நிறைய குடும்பங்களின் நிலை.

இதில் இன்னுமொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் பெங்களூர் , சென்னை போன்ற பெரு நகரங்களில்தான் இந்த நிலை என்றால் ஈரோடு போன்ற சிறு நகரங்களிலும் இதே நிலைமைதான் என்பதை மருத்துவர் ஒருவர் ஒரு வருடத்திற்கு முன்பு என்னிடம் சொன்னபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.அந்த மருத்துவரை நான் சந்திக்கச் சென்றபொழுது இப்படிச் சொல்கிறார் – “உங்களுக்கு சளி , இருமல் என்றால் பரவாய் இல்லை , தினமும் வாகனத்தில் செல்வதால் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் வருகிறது என்று எடுத்துக்கொள்ளலாம் , ஆனால் இன்றைக்கு சிறு நகரங்களில் வாழும் 90 சதவீகித குழந்தைகளுக்குக் கூட வீசிங் , ஆஸ்மா போன்ற பிரச்சனைகள் வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம்” என்றார்.இதை விடப் பெரிய பிரச்சனை நமக்கு என்னவாக இருக்கப் போகிறது சொல்லுங்கள்.

நாளைய இந்தியாவின் தூண்கள் என்கின்றோம் இன்றைய குழந்தைகளை.ஆனால் அந்தத் தூண்கள் நாளைக்கு நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாம் அவர்களுக்கு பலமான அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்க முடியவில்லை. எங்கேயும், எதிலும் மாசுபடுத்தி வருகின்றோம்.மாசுபட்ட காற்றை சுவாசித்துக்கொண்டே மாசுக்கட்டுப்பாடு பற்றி பேசுகிறோம் நாம்.அதற்கான பலன்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.அதற்கு இன்றைய குழந்தைகளைப் பற்றி மருத்துவர் குறிப்பிட்ட தகவலே சான்று.வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்.

இன்றைக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அந்த பசுமையான நாட்களை நினைத்தால் ஒரு கணம் மனம் இதமாகிறது.இன்றைக்கு கிடைப்பதைப் போல் அன்று காசு பணமெல்லாம் அவ்வளவு இல்லை.ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்றாலும் கூட ஒரு வாரத்திற்கு முன்பே அம்மாவிடம் சொல்லித் தூதனுப்பி அப்பாவிடம்  ஒரு பத்து ரூபாய் பணம் கேட்க வேண்டும்.இருந்தாலும் இன்றைக்கு வாழும் வாழ்க்கையை விட அன்று கிராமத்தில் வாழ்ந்த அந்த வாழ்க்கைதான் பசுமையாக இன்னும் மனதில் இருக்கிறது , அதுதான் பிடித்த வாழ்க்கையாகவும் இருக்கிறது.இன்று பணம் வந்துவிட்டது.வாழ்க்கை ரசிக்கவில்லை.ருசிக்கவில்லை.”இயந்திரத்தனம்” என்ற வார்த்தைக்கு நாம் உதாரணமாக இருக்கிறோம் , அவ்வளவுதான்.மற்றபடி இந்த வாழ்க்கையில் கிராமத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில் கால்வாசிகூட கிடைப்பதில்லை.சரி , இப்படிச் சொல்கிறீர்களே மீண்டும் கிராமத்திற்கே வந்து விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்பீர்கள்.நியாயமான கேள்விதான்.வரலாம் , அங்கே வந்தாலும் பிழைத்துக்கொள்ள முடியும்.ஆனால் , இன்றைய விவசாயத்தின் நிலைமை நாம் அறிந்ததே.வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பாடுபடும் விவசாயி நிம்மதியாகவா தூங்கப்போகிறான்.இல்லை.தண்ணீர் பிரச்சனை , விளைச்சல் பிரச்சனை , நன்றாக விளைந்தாலும் அதை நல்ல விலைக்கு விற்கமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று அவர்கள் பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது.அவர்கள் நிலைமையை வைத்து இன்று அரசியல் நடத்தும்  நாட்டில்தானே நாமெல்லாம் வாழ்ந்து வருகின்றோம்.

நமது அப்பாக்கள் செய்யாத விவசாயமா என்ன ? நாமெல்லாம் எம்மாத்திரம்.அவர்களே இன்றைக்கு “அட போப்பா” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.இருந்தாலும் , இன்றைக்கும் விடா முயற்சியுடன் விவசாயத்தை தொழிலாக நினைக்காமல் ஆர்வமுடன் செய்து வருபவர்களை நான் பார்க்கத் தவறவில்லை.என் நண்பர்களும்கூட இதில் பலர் அடக்கம்.நிச்சயம் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.அப்படிப் பட்டவர்கள் இருப்பதால்தான் நாம் கண்மூடுவதற்குள் நிச்சயம் விவசாயம் கண்மூடாது என்ற சிறு நம்பிக்கை ஏற்படுகிறது.அரசாங்கம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நம்மால் எழுதத்தான் முடியுமே தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.சரி , இது ஒரு புறம் இருக்க , இன்று ஊரில் விவசாயம் செய்பவர்களுக்கு பெண் தேடுவது அவ்வளவு சிரமமாகிவிட்டது. “அட போப்பா இன்னும் எத்துனை நாளைக்குத்தான் இந்த விவசாயத்தைப் போட்டு அழுதுக்கிட்டு இருக்கிறது , ஏதாவது வேலைல இருக்குற மாப்பிள்ளையா இருந்தாச் சொல்லு பாக்கலாம்” என்றுதான் இன்றைக்கு பெரும்பாலான பெண் வீட்டார்களிடத்தில் இருந்து பதில் வருகிறது.ஏன் , விவசாயம் செய்பவனுக்கெல்லாம் மரியாதை கிடையாதா என்ன ? அப்படி ஆகிவிட்டது இன்றைய விவசாயமும் ,அதைச் செய்யும்  விவசாயியின் நிலைமையும் .அவர்களுக்கெல்லாம் ஒன்றை  மட்டும் சொல்ல விரும்புகிறேன்.”தூரத்துப் பச்சை கண்ணிற்கு குளிர்ச்சியாகத் தான் தெரியும் , அருகில் வந்து பார்த்தால் தெரியும் உண்மை நிலை”. ஆதலால் விவசாயம் செய்பவனாக இருந்தாலும் நல்ல குடும்பமா , பையன் திறமைசாலியா என்பதைப் பாருங்கள்.இங்கே இருப்பவர்கள் அங்கே வர நினைக்கிறோம் , அங்கே இருப்பவர்கள் இங்கே வர நினைக்கிறீர்கள். என்ன சொல்வது.

விவசாயம் செய்யும் நண்பர் வீட்டிற்கு ஒருமுறை சென்றிருந்தபொழுது அவருடைய தாத்தாவைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.அவருக்கு சுமார் எழுபத்தைந்து வயதிருக்கும் என்று நண்பர் என்னிடம் கூறினார் .அவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.உடம்பை அப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் அந்தப் பெரியவர்.தினமும் வயலிலும் , ஆடு மாடுகளோடும் அலைகிறார்.வியர்வை சிந்துகிறார்.நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள்.கடின உழைப்பு இருந்தாலும் உடம்பை அப்படி ‘பிட்’ டாக வைத்திருக்கிறார்.’தொப்பை’ என்றால் என்ன என்று அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை . அப்படி ஒன்றை அவரிடம் நான் பார்க்கவுமில்லை . எனக்கு அவரைப் பார்த்தவுடன் பொறாமையாக இருந்தது.இங்கே நாம் தினமும் ஏ.சி-யில் அமர்ந்து கொண்டு, வியர்வை சிந்த ஜிம்முக்குச் செல்கிறோம்.பொறாமை வராமல் என்ன செய்யும் சொல்லுங்கள்.அவரைப் போல் எழுபது வயதை எல்லாம் தாண்டி விட்டால் நாமெல்லாம் பாக்கியசாலிகள் இன்றைய காலகட்டத்தில்.

வாழ்க்கைக்கு பணம் தேவைதான்.அதைச் சம்பாதிக்க நாம் ஓடவேண்டும்தான் , மறுக்கவில்லை.ஆனால் , மனதிற்கும் உடம்பிற்கும் ஓய்வு தேவை , நல்ல உணவுப் பழக்கம் தேவை , குடும்பத்துடன்  சந்தோசமாக இருக்கும் தருணங்களும் தேவை என்று பணத்திற்கும் அப்பாற்பட்டு நிறையத் தேவைகள் இருக்கின்றன.ஓடுங்கள் , ஆனால் எதுவரை ஓடவேண்டும் என்பதை மனதளவில்  தீர்மானித்துவிட்டு ஓடுங்கள் என்றுதான்  சொல்ல வருகின்றேனே தவிர , வீட்டில் உட்கார்ந்துகொண்டு ஜாலியாக இருங்கள் என்று சொல்லவில்லை.அதே நேரம் சொகுசான வாழ்க்கையை வாழப் பழகிக்கொண்ட நாம் , ஏதாவது சந்தர்ப்பம் வந்து ஊருக்குச் சென்று விவசாயம் செய்யும் நிலைமை வந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.விவசாயம் ஒன்றும் கேவலமான தொழிலல்ல.காலத்தின் கட்டாயத்தால் அப்படி ஒரு நிலைமை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இருக்கிறது.விவசாயியின் மகனான எனக்கு அதைக் கற்றுக்கொண்டு செய்வதொன்றும் பெரிய விசயமாக இருக்காது என்று நம்புகின்றேன்.பிறக்கும் போதே அனைத்தும் தெரிந்து கொண்டு பிறப்பதில்லையே மனிதன்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் , பணத்தை நோக்கி ஓடுங்கள் ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது , அதைத் தாண்ட வேண்டாம் என்று மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெறுகின்றேன்.மீண்டும் சந்திப்போம்.

————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

9 Responses to என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் ?

 1. maragatha kandhasamy says:

  mannin maindhan kathir.. anaivarukkum varavendiya sindhanai.

  Liked by 1 person

  • உண்மைங்க அம்மா.நிச்சயம் அந்த நினைப்பு வர வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட .நன்றி.

   Like

 2. Ganesan says:

  நல்ல பதிவு . வாழ்த்துக்கள் .

  Liked by 1 person

 3. என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் ? = Kathirvel Subramaniam = ஏதாவது சந்தர்ப்பம் வந்து ஊருக்குச் சென்று விவசாயம் செய்யும் நிலைமை வந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.விவசாயம் ஒன்றும் கேவலமான தொழிலல்ல.காலத்தின் கட்டாயத்தால் அப்படி ஒரு நிலைமை வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இருக்கிறது = அருமையான, விரிவான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam.

  Liked by 2 people

 4. என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் ? = Kathirvel Subramaniam = ஏதாவது சந்தர்ப்பம்
  வந்து ஊருக்குச் சென்று விவசாயம் செய்யும் நிலைமை வந்தாலும் கூட அதை
  ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.விவசாயம் ஒன்றும்
  கேவலமான தொழிலல்ல.காலத்தின் கட்டாயத்தால் அப்படி ஒரு நிலைமை வந்தால் அதை
  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் என்னிடம் இருக்கிறது = அருமையான, விரிவான பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் Kathirvel Subramaniam.

  2014-10-30 18:05 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “சில நேரங்களில் “என்னடா வாழ்க்கை
  > வாழ்கிறோம்” என்பதைப் போல் ஆகிவிடுகிறது நாம் வாழும் வாழ்க்கையை கொஞ்சம்
  > நினைத்துப் பார்த்தால். இங்கே மனிதனின் ஓட்டத்துக்கு முதல் முக்கியக் காரணம்
  > பணம்தான்.பணத்துக்காக ஓடுகின்றான் ஓடுகின்றான் ஓய்வின்றி ஓடுகின்றான். “இப்படி
  > வாழ”

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s