மேடம் உங்களுக்கு ‘கார்’ பரிசு விழுந்திருக்கிறது

2“மேடம் , நீங்க கடந்த வாரம் டோட்டல் மால் சென்று ஏதேனும் பர்ச்சேஸ் செய்தீர்களா” என்று கேள்வி கேட்கிறார் அலைபேசியில் அழைத்த அந்தப் பெண்மணி.அன்று வியாழக்கிழமை.எங்கூட்டுக்காரம்மாவும் “ஆமாம் , நானும் எனது உட்பீயும் கடந்த சனிக்கிழமை சென்று ஷாப்பிங் செய்தோம்” என்று பதிலளிக்கிறார் அந்தக் கேள்விக்கு.நீங்கள் இங்கே ஒன்றைக் கவனிக்கவும்.அப்பொழுது அவர் எனக்கு மனைவியாகாத நாட்கள்.எங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது.இருவரும் பெங்களூரில் வேலை பார்த்ததால் வார இறுதி நாட்களில் ஒருநாள் ஷாப்பிங் சென்றிருந்தோம்.அதனால்தான் “உட்பீ” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் அவரது பதிலில்.அதற்கு அந்தப் பெண்மணி வாழ்த்துக்கள் மேடம் , உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. டோட்டல் மாலில் பூர்த்தி செய்துகொடுத்த விண்ணப்பத்தில் இருந்து நாங்கள் மூன்று நபரை தேர்வு செய்திருக்கிறோம் , அதில் நீங்களும் ஒருவர் , காரணம் நீங்களும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்திருந்தீர்கள். மொத்தம் மூன்று பரிசுகள்.ஹுண்டாய் கார் , ஹோண்டா ஆக்டிவா மற்றும் ரேவா கார் ஆகிய மூன்று பரிசுகள்.இதில் நீங்கள் எதையேனும் ஒன்றைப் பெறப்போகிறீர்கள் , இன்று மாலை ஆறு மணிக்கு உங்கள் உட்பீயுடன் சிவாஜி நகர் வந்துவிடுங்கள்” என்றிருக்கிறார்.என் மனைவியால் அந்தப் பெண்மணி கூறியதை நம்பாமலும் இருக்க முடியவில்லை , எப்படி இவர்களை நம்புவது என்ற சந்தேகமும் வராமல் இல்லை.உடனே , அப்பொழுது அவரின் கனவுக் கண்ணனுக்கு போன் செய்கிறார்.அட , என்னைத்தான் சொல்கிறேன்.திருமணம் நிச்சயமானதிலிருந்து திருமணம் நடக்கும் வரை நாம் அவர்களுக்கு கனவுக் கண்ணன்களே.அவர்களும் நமக்கு கனவுக் கன்னிகளே.மூன்று முடிச்சு போட்டு ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு நமக்கு கனவே வராது என்பது வேறுகதை.அப்படியே வந்தாலும் அதில் மனைவி மட்டும்தான் வருவார்.கனவிலும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி சமாளிக்க முடியாது.சரி , அதை விடுங்கள் , இப்போ மேட்டருக்கு வருவோம்.

மனைவி எனக்கு போன் செய்தவுடன் எனக்கும் ஒரே ஆச்சரியம்.ஏன்டா கதிர்வேலா , உனக்கு லக்கா ? அதுவும் கார் கிடைக்குமாமே ? என்று ஒரே குஷிதான் போங்க.இருந்தாலும் அது எனக்கு முதல் அனுபவம் என்பதால் நானும் கூட அவர்கள் சொல்வதை நம்பும்படி ஆகிவிட்டது.பிறகென்ன , மனைவியிடம் மாலை ஐந்து மணிக்கே அலுவலகத்தில் இருந்து கிளம்பிவிடும் படி சொல்லிவிட்டு நானும் எனது மேனேஜரிடம் சொல்லிவிட்டேன்.”பிரதீப், எனக்கு கார் பரிசு விழுந்திருக்குங்க , நான் சென்று பெற்றுக்கொண்டு வந்துவிடுகின்றேன் ” என்று செம பில்டப் கொடுத்துவிட்டு அவரிடம் ஐந்து மணிக்குக் கிளம்ப அனுமதியும் வாங்கிவிட்டேன்.ஐந்து மணிக்கு கிளம்பிச் சென்று மனைவியையும் அழைத்துக்கொண்டு சிவாஜி நகர் சென்றடைந்தோம்.பொதுவாகவே , சிவாஜி நகர் செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே ஐந்து “Saridon” மாத்திரைகளை எடுத்துக்கொண்டு செல்வது வழக்கம். சிவாஜி நகருக்கும் , கமர்சியல் ஸ்ட்ரீட்டிற்கும் சென்று வந்தவர்களுக்கு நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று நன்கு தெரியும்.என் கெட்ட நேரம் அன்றைக்குப் பார்த்து “Saridon” னும் என்னை ஏமாற்றிவிட்டது.என்னிடம் ஸ்டாக்கும் இல்லை.அவர்கள் கொடுத்த முகவரியை தேடிக் கண்டுபிடிக்க முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது.அதற்குள் எனக்கு முதல் கட்ட பேச்சுவார்த்தையைப் போல் முதல் கட்ட தலைவலி ஆரம்பமாகிவிட்டது.ஒன்றும் செய்வதற்கில்லை.அப்பொழுது என் “உட்பீ” ஆகிய என் மனைவி சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை.நாம்தான் திருமணத்திற்கு முன்பு ‘எம்.ஜி.ஆர்’ போல நல்லவனாகவே நடிக்க வேண்டி இருக்கிறதே.அதற்குப் பின்புதானே நாம் ‘நம்பியார்’ என்பதை மனைவிமார்கள் புரிந்து கொள்கிறார்கள்.அப்பொழுது திருமணம் ஆகாததால் , அவரிடம் சண்டையும் போட வழியில்லை.அப்படிப் போட்டால் நமது ‘நம்பியார்’ வேஷம் கலைந்துவிடும்.கோபம்னாலும் கோபம் அப்படி ஒரு கோபம் மனைவி மீது.ஆனால் , வாய் திறக்கவே இல்லை.முக்கால் மணி நேரம் அலைந்து திரிந்து அந்த நிறுவனத்தை அடைந்தோம்.

அங்கே செல்வதற்கு படி ஏறும்போதே எனக்கொரு சந்தேகம்.இந்த இடத்தில் இயங்கும் நிறுவனமா நமக்கு காரோ அல்லது பைக்கோ தரப்போகிறார்கள் என்று.உள்ளே சென்றோம்.அனைத்துப் பற்களும் தெரிய என் மனைவிக்கு போன் செய்த அந்தப் பெண் வரவேற்றார். அந்தத் தலைவலியிலும் அந்தப் பெண்ணை நான் கவனிக்கத் தவறவில்லை.அழகானவள்தான்.”சார்/மேடம் ஒரு இரண்டு நிமிடம் இங்கே உட்காருங்கள் , எங்கள் மேலதிகாரி வந்துவிடுவார் , இந்தாங்க ஜூஸ் குடீங்க” என்று பலமாக இருந்தது உபசரிப்பு.அப்பொழுதும் நான் கார் மயக்கத்திலே இருந்தேன்.தலைவலி அப்படியேதான் இருந்தது.அப்பொழுது புரிந்தது “Saridon” னின் மகிமை.இரண்டு நிமிடம் கழித்து அந்த மேலதிகாரி வந்தார்.கழுத்தில் “டை” , கோட் சூட் என்று அமர்க்களமாக வந்தார்.நான் எனது சட்டையையும் , பேன்ட்டையும் ஒரு முறை பார்த்துக்கொண்டு மனதுக்குள் ஒரு சுமைல் செய்துகொண்டேன்.வந்தவர் நாங்கள் இருவரும் எங்கே வேலை செய்கின்றோம் , எங்கள் சொந்த ஊர் எது என்று புன்னகை பூத்த முகத்துடன் விசாரித்தார்.அப்படி அக்கறையாக எங்கள் சொந்தக்காரர்கள் கூட என்னை அதுவரை விசாரித்ததில்லை.அவரின் விசாரிப்பில் நானும் மயங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் ஆரம்பித்தார் அவருடைய மார்க்கெட்டிங் வேலையை.நான் இடைமறித்து , “ஸார் , எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது , நீங்கள் தருவதாகச் சொன்ன அந்த பரிசை தந்துவிட்டால் நாங்கள் சீக்கிரம் கிளம்பிவிடுவோம்” என்றேன்.அப்பொழுது அவருடன் அரை மணி நேரம் முடிவுற்றிருந்தது.அவர் எங்களை விடுவதாக இல்லை.”ஸார் , இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் போய்விடலாம்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.”ஸார்/மேடம் , நாங்கள் சர்வதேச லெவலில் பிசினஸ் செய்கிறோம் , எங்களுக்கு அனைத்து நாடுகளிலும் , இந்தியாவிலும் கிளைகள் உள்ளது.இங்கே நாங்கள் கன்ட்ரி கிளப்புடன் இணைந்து பிசினஸ் செய்துவருகின்றோம்” என்று அந்தப் பயல் சொன்னவுடனேயே எனக்குப் புரிந்துவிட்டது அவர்களின் திட்டம்.அப்பொழுது என்னுடைய தலைவலி பல கட்டத்தைத் தாண்டி இருந்தது.

நான் இடையிடையே அவரிடத்தில் “எங்களுக்கு நேரமாகிவிட்டது உங்கள் பரிசு கூட வேண்டாம் நாங்கள் செல்கிறோம்” என்று சொன்னாலும் எங்களை விடுவதாக இல்லை அந்தப் பயல். “கன்ட்ரி கிளப்” பற்றி ஒரு மணி நேரத்திற்கும் மேல் விளக்கி விட்டு “நீங்கள் எங்களுடைய பிளானில் சேர்ந்தால் வருடம் முழுவதும் இந்தியாவிலோ , வெளிநாட்டிலோ எந்த ஹோட்டலில் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கலாம்.இப்பொழுது ஆப்பர் கொடுக்கின்றோம் , வெறும் ஒன்றரை லட்சம் மட்டும் நீங்கள் கட்டினால் போதும் உங்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும்” என்றான் அந்தப் பயல்.அடுத்த மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு பணத்திற்கு நான் படும் பாடே பெரியது , இதுல எங்கய்யா உனக்கு ஒன்றரை லட்சம் பணம் கொடுப்பது என்று நினைத்தது மட்டுமல்லாமல் பக்கத்தில் இருக்கும் ஊட்டிக்குச் செல்லவேண்டும் என்றால் கூட மூன்று வருடம் பிளான் செய்துவிட்டுப் போகும் என்னை இவன் எப்படி “உலகம் சுற்றும் வாலிபன்’ என்று நினைத்துக்கொண்டான் என்று சிறு அற்ப சந்தோசமும் வரத் தவறவில்லை.”குறைந்தது பத்தாயிரம் ரூபாய் இப்பொழுது கட்டிவிட்டால் நீங்கள் எங்களது உறுப்பினர் ஆகி விடுவீர்கள்” என்று எப்படியாவது எங்களிடம் பணம் பிடுங்கி விடலாம் என்ற அவர்கள் திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தப்பித்து வெளியேறினோம்.நாங்கள் வேண்டாம் என்று சொல்லியும் எங்களுக்கு அவர்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா மக்களே ? காரோ , பைக்கோ இல்லை. ஆறு கண்ணாடி டம்ளர்கள்.எனக்கு அப்படியே கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் அந்தத் தலைவலியிலும் “உட்பீ” யைப் பார்த்து போலியான புன்னகை ஒன்றை கொடுத்துவிட்டு , கல்யாணமாகட்டும் பழிக்குப் பழி வாங்கி விடுகின்றேன் என்று மனதிற்குள்ளேயே புலம்பி விட்டு வந்து வண்டியை எடுத்துக்கொண்டு “உட்பீ” யை அவரது ஹாஸ்டலில் விட்டுவிட்டு நான் வீடு வந்தவுடன் எனக்காக மூன்று “Saridon” கள் காத்திருந்தது.

———– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

1 Response to மேடம் உங்களுக்கு ‘கார்’ பரிசு விழுந்திருக்கிறது

  1. திருடர்கள்.

    Liked by 1 person

Leave a comment