இன்றைய எழுத்தாளர்கள்

5முன்பெல்லாம் “ராணி” வார இதழுக்கோ , “விகடன்” னுக்கோ வேறு எந்த நாள்/வார/மாத இதழ்களில் உங்கள் படைப்பு வரவேண்டும் என்றால் உங்களுடைய படைப்புகளை அவர்களுக்கு எழுதி அனுப்பி வைத்துவிட்டு நாள் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும்.இன்றைக்கு அப்படி இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறையில் பல வியக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.இவை எல்லாம் சேர்த்து இன்று முகநூல் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் நம்மை பெரிதளவில் ஆக்கிரமித்துக்கொண்டன.உங்கள் மனதில் ஒரு கவிதை தோன்றும் பட்சத்தில் நீங்கள் காகிதத்தில் அதை எழுதி வைத்து சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு அது பிரசுரம் ஆகுமா ஆகாதா என்றெல்லாம் காத்திருக்கத்தேவை இல்லை.உடனே முகநூலில் பதிவு செய்யலாம்.உடனுக்குடன் அதற்கான ரிசல்ட்டும் நண்பர்களிடம் இருந்து கிடைத்துவிடும்.நீங்களும் உங்களுடைய கவிதைத் திறனை , எழுத்துத் திறனை தினந்தோறும் செதுக்கிக்கொள்ளலாம்.அந்த வகையில் இன்றைக்கு முகநூல் துணையால் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் தினந்தோறும் உருவாகி வருகிறார்கள்.ஏதோ ஒரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு முகநூலில் தன்னுடைய கட்டுரையை/கவிதையை பதிவு செய்யும் ஒருவர் அடுத்த நொடியில் தன் படைப்பை அமெரிக்காவில் ‘நாசா’-வில் வேலை செய்யும் நண்பருக்கும் , திருநெல்வேலியில் பேருந்தில் பயணம் செய்யும் நண்பருக்கும் உடனடியாக முகநூல் போன்ற சமூக வலைதளங்களின் வாயிலாக கொண்டு சென்றுவிடுகிறார்.இது “டெக்னாலஜியின்” பரிணாம வளர்ச்சியினால்தான் சாத்தியப்படுகிறது.

பொதுவாகவே தீவிர “எழுத்தாளர்கள்” என்று அழைக்கபடுபவர்கள் எல்லாம் ஏதோ எழுதுகிறோம் என்று எழுதுவதில்லை.நிறையப் படிக்கிறார்கள் , செய்திகளைச் சேகரிக்கிறார்கள் , அன்றாட நிகழ்வுகளை அலசுகிறார்கள் , வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை தங்கள் படைப்புகளில் பதிவு செய்கிறார்கள் என்று நிறையச் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம்.ஆனால் , கருத்துச் சொல்வதற்கும் அதை எழுத்தில் கொண்டுவருவதற்கும் மண்டையில் நிறைய ஏற்றவேண்டியிருக்கிறது.சமீபத்தில் ஒரு எழுத்தாளர் தான் தினந்தோறும் வெறும் நான்கு மணி நேரம்தான் தூங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.நமக்கு வேண்டுமானால் அவர் உடம்பை வருத்திக் கொள்கிறாரே என்று தோணலாம்.ஆனால் , அவரைப் பொருத்தவரை எழுத்தை நேசிக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.இப்படி சிரத்துடன் எழுதும் பல எழுத்தாளர்கள் மற்றவர்கள் நினைப்பதைப் போல் லட்சக் கணக்கில் சம்பாதிப்பதெல்லாம் கிடையாது.அங்கீகாரம் கிடைக்கும் , அவர்களால் சில நல்ல படைப்புகள் நமக்குக் கிடைக்கும் , அவர்களை யார் என்று நமக்கும் தெரியவரும். அவ்வளவுதான் .இவை அனைத்தையும் தாண்டி சினிமாத் துறை சென்று சாதித்தவர்களும் இருக்கிறார்கள்.ஒவ்வொருத்தரும் அவரவர் பாணியில் செல்கிறார்கள்.

இன்று நிறையப் பேர் எழுதுகின்றனர்.வியக்கும்படி இருக்கிறது அவர்கள் எழுத்துக்கள். இவரா இப்படி என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு.நம்முடைய எழுத்துக்களை வெளியில் இருக்கும் நண்பர்களுக்கு முகநூல் மூலம் தெரியப்படுத்தி அதற்கு உண்டான அங்கீகாரமும் , பாராட்டுக்களையும் பெற்றாலும் கூட நம் குடும்பத்தில் இருப்பவர்களைப் பொருத்தவரை அதுவெல்லாம் நேர விரையம்தான்.இப்படியல்லாத குடும்ப உறுப்பினர்களைப் பெற்ற எழுத்தாளர்கள் பாக்கியசாலிகள்தான்.அவர்களால் தொடர்ந்து சிறந்த படைப்புகளை கொடுக்க முடியும்.இன்றைக்கு ஒரு மனநிலையில் இருக்கும் பொழுது ஒரு கட்டுரையை ஒரு வடிவத்தில் எழுதுவதும் , அதே கட்டுரையை நாளைக்கு வேறு ஒரு மனநிலையில் இருக்கும்பொழுது வேறு வடிவத்தில் எழுதுவதும் மாறிக்கொண்டே இருக்கும்.நாளைக்கு எழுதும் அதே கட்டுரைகூட மிகச்சிறந்ததாக வரக்கூடும்.ஆக , எழுதுவதற்கு தக்க சூழ்நிலையும் , எழுதும்பொழுது இருக்கும் மனநிலையும் எழுத்தில் நிச்சயம் பிரதிபலிக்கும்.

ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியாக பார்ப்பதில்லை.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கருத்திருக்கும்.அவரவர் பார்வையில் ஒரு பிரச்சனை எப்படிப் பார்க்கப்படுகிறதோ அப்படியே அவர்கள் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது.நீங்கள் சொல்ல வந்த விஷயம் என் பார்வையில் வேறு விதமாகத் தெரியலாம்.எனக்கு ஒவ்வாத கருத்தாகக் கூட இருக்கலாம்.அதையும் கூட நாகரீகமாக உங்களிடம் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்க வேண்டும்.இங்கே நான் “எனக்கு” என்று குறிப்பிட்டது பொதுவாகச் சொன்னது.அனைவருக்கும் பொருந்தும்.கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் இருக்கிறது என்றாலும் நாகரீகத்தைக் கடைபிடிக்கும் பொறுப்பும் கூட அனைவருக்கும் இருக்கிறது.”Don’t take anything into heart” என்பார்கள்.இங்கே யாரும் யாருக்கும் எதிரியில்லை.கத்தி எடுத்துக்கொண்டு சண்டைக்குப் போகும் நிலைக்கெல்லாம் போகத்தேவை இல்லை.எதுவுமே சரிப்பட்டு வரவில்லை என்றாலோ , ஒரு எழுத்தாளரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ நாம் தாராளமாக அவர்கள் வட்டத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம்.மாறாக , விரோத மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது “சிறந்த எழுத்தாளர்” என்று அழைக்கப்படும் எவருக்குமே அழகல்ல.எழுத்தாளர்களுக்குள் ஏற்படும் சண்டை என்பது நல்ல படைப்புகளை வெளிக்கொணர இடைஞ்சலாக இருக்கும் தடைக்கற்களே.

————– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s