உறவுகள் இருந்தும் இவர்கள் அனாதைகள்

1வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு விவசாய வேலை செய்ய வருபவர்கள் நிறையப் பேர்.அவர்கள் சொந்த ஊர்களில் விவசாய பூமியும் அங்கே விவசாய வேலையும் அவ்வளவாக இல்லாததால் ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இவர்கள் மாதக்கணக்கில் வந்து தங்கி இருந்து வேலை செய்து பணம் ஈட்டிவிட்டுச் செல்வதுண்டு.அந்தப் பணத்தை வைத்துத்தான் ஊரில் அவர்கள் குடும்பத்தைக் கவனித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்கள் அதிகம் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தனியாக வருவதுண்டு.வாரம் ஒரு முறையோ , இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ தாங்கள் சம்பாதித்த பணத்துடன் ஊருக்குச் சென்று குடும்பத்தைப் பார்த்துவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு வருவது இவர்கள் வழக்கம். அப்படி வருபவர்களில் சிலர் உறங்க இடமின்றி வயலில் வேலை முடித்துவிட்டு எங்கள் வீட்டில் தங்குவதுண்டு.கடந்த சில மாதங்களாக எங்கள் கிராமத்து வீட்டில் இந்த மக்களில் சிலர் தங்கியுள்ளனர்.வசதி இல்லாவிட்டாலும் இந்த மக்கள் மிகவும் எதார்த்தமானவர்கள்.நம் மேல் அளவு கடந்த அன்பு செலுத்துபவர்கள்.இந்த முறை ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தபொழுது இவர்கள் காட்டிய அன்பில் நாங்கள் வியந்தோம்.இவர்கள் மேல் அப்பாவிற்கு அளவுகடந்த நம்பிக்கை.வீட்டைத் திறந்து வைத்துவிட்டுச் செல்லக்கூடிய நம்பிக்கை அது.அப்பாவின் நம்பிக்கை பொய்யல்ல.அம்மக்கள் அப்படிப்பட்டவர்கள்.சூது வாது தெரியாத மக்கள்.

இவர்களில் ஒருவர்தான் மாணிக்கம் என்பவர்.ஊர் கரூர் மாவட்டம் சேங்கல் அருகில் இருக்கும் பஞ்சப்பட்டி எனும் கிராமம்.இவருக்கு வயது சுமார் முப்பத்தியைந்து இருக்கும்.பதிமூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் , இவர் ஒரே சமயத்தில் அக்கா தங்கை இருவரையுமே திருமணம் செய்திருக்கிறார்.சூழ்நிலை காரணம் என்கிறார்.இருந்தாலும் அப்பொழுது அவர் செய்தது தவறே என்பதை இப்பொழுது நினைத்து வருத்தப்படுகிறார்.காலம் கடந்துவிட்டது.அவருடைய வருத்தத்திற்கு இப்பொழுது பலனில்லை.இருவரையும் திருமணம் செய்தவர் ஒன்றாகவே குடித்தனமும் நடத்தி இருக்கிறார்.மனைவிகளில் ஒருவருக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.இந்த ஆண் குழந்தைக்கு இப்பொழுது வயது 11.இந்தக் குழந்தைதான் என் கண்களில் நீரை வரவழைத்தவன்.குழந்தை பிறந்ததில் இருந்து மனவளர்ச்சி இல்லை.இன்றும் அப்படியே தன் வாழ் நாளைக் கழிக்கின்றான் .இவனுக்குப் பிறகு பிறந்த மற்றொரு குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டது.அது தனி சோகக்கதை.இங்கே வேண்டாம்.இது ஒருபுறம் இருக்க , மாணிக்கத்தின் மற்றொரு மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.அந்தக் குழந்தை ஆரோக்யமாக இருக்கிறது.எந்தப் பிரச்சனையும் இல்லை.

இப்படிச் சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட அக்கா , தங்கை இருவரும் பிரிந்து விட்டனர்.மன நலம் குன்றிய குழந்தையின் அம்மா தன் பெற்றோர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டார். காரணம் என்னவென்று மாணிக்கத்தைக் கேட்டால் மனைவியின் நடத்தை சரியில்லை என்கிறார். மாணிக்கம் தனியாக தனது மன வளர்ச்சி குன்றிய மகனை கவனித்து வருவதாகச் சொல்கிறார்.தற்பொழுது கூலி வேலை செய்ய எங்கள் ஊருக்கு வந்துவிட்டதால் மகனைப் பெற்றவளிடம் கெஞ்சிக் கூத்தாடி சில நாட்கள் பார்த்துக்கொள்ளும்படி விட்டுவிட்டு வந்திருக்கிறார். மற்றொரு மனைவி மகனுடன் தனியே வசிக்கிறார்.மாணிக்கம் மட்டும் தனியாளாக ஊரு விட்டு எங்கள் ஊர் வந்து கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாரமொரு முறை ஊருக்குச் சென்று மனகனைப் பார்த்துவிட்டு வருகிறர்.மகன் மேல் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் மாணிக்கம்.இங்கே கொடுமை என்னவென்றால், மன வளர்ச்சி குன்றிய அந்தப் பிள்ளையை கவனித்துக்கொள்ள பெற்றெடுத்தவளுக்கே மனமில்லை என்பதுதான்.மாணிக்கத்தைக் கேட்டால் அவளுக்கு ஊர் சுத்தவே நேரமில்லை , அதனால் தான் பெற்ற குழந்தையைக் கூட பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார் என்றார்.அந்த பதினோரு வயதுக் குழந்தைக்கு மலம் கழிக்க வேண்டுமானாலும் , சிறுநீர் கழிக்க வேண்டுமானாலும் அடுத்தவர் துணை தேவைப்படுகிறது.மாணிக்கம் இருந்த வரை மனம் நோகாமல் தன் மகனுக்கு சேவை செய்து வந்திருக்கிறார்.பிழைப்புக்காக எங்கள் ஊருக்கு சில நாட்கள் வந்ததால் மகனைப் பெற்றவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறார்.இப்பொழுது மனைவி தினமும் போன் செய்து மாணிக்கத்தை ஊருக்கு வந்து தனது மகனை அழைத்துச் செல்லும்படியும் , தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தன்னால் அவனைப் பார்த்துக்கொள்ள முடியாது என்றும் சொல்லிவிட்டதாகச் சொன்னார்.

அது வரை அவர் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த என்னால் இந்த இடம் வந்தபொழுது என் கண்ணைக் கட்டுப்படுத்த முடியவில்லை.மனதிற்குள் அழுது கொள்ளும்படி இருந்தது அந்த சோகக் கதை.தான் பெற்ற பிள்ளையையே கவனிக்க முடியாது என்று சொல்பவள் எப்படிப்பட்ட நடத்தை உடையவளாக இருப்பாள் என்று அளவுகடந்த எரிச்சல் ஏற்பட்டது.இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணிக்கம் தனது ஊருக்குச் சென்றிருக்கக்கூடும்.எப்படி மகனை கவனிக்கப்போகின்றேனோ என்ற வருத்தத்தில் இருக்கிறார் மனிதர்.வயிற்றுப் பிழைப்பிற்கு ஊரில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு உதவி கேட்டார் மாணிக்கம்.தன் மகனை ஏதாவது கருணை இல்லத்தில் சேர்த்துவிட முடியுமா என்றார்.தான் அவ்வப்பொழுது சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவதாகவும் என்னிடம் கூறினார்.தேவைப்பட்டால் , கூலி வேலை செய்தாவது கருணை இல்லத்திற்கு தன்னால் முடிந்த அளவு மாதா மாதம் கொஞ்சம் பணமும் தருவதற்கு தயாராக இருப்பதாகவும் என்னிடம் கூறினார்.ஆக , மாணிக்கம் என்னிடம் பண உதவி எதிர்பார்க்கவில்லை.தன் மகனை பாதுகாப்பான ஒரு கருணை இல்லத்தில் சேர்த்துவிட உதவி கேட்டார்.நான் அவரிடம் ஒரு வாரத்திற்குள் தகவல் சொல்வதாக வாக்குறுதி அளித்து விட்டு வந்துவிட்டேன் உங்களை மட்டுமே நம்பி.ஆம் , தற்பொழுது எனக்குத் தேவை இது போன்ற மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாக்கும் கருணை இல்லங்கள் குறித்த தகவல்தான்.நம்பகமான கருணை இல்லமாக இருக்க வேண்டும்(சமீபத்தில் நான் படித்த ஒரு கருணை இல்ல சம்பவம் என்னை இப்படி எழுத வைத்துவிட்டது , தவறாக நினைத்துவிட வேண்டாம்). மாணிக்கம் கருணை இல்லம் எந்த ஊராக இருந்தாலும் பரவாய் இல்லை என்கிறார். ஆனால் திருச்சி மற்றும் கரூரைச் சுற்றிய இடமாக இருந்தால் வசதியற்ற அவருக்கு அடிக்கடி தன் மகனை சென்று பார்த்துவிட்டு வர உதவும்.

இப்பொழுது நான் உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றேன்.உங்களுக்குத் தெரிந்த இது போன்ற கருணை இல்லம் பற்றிய தகவல் இருந்தால் பகிருங்கள்.நீங்கள் தரும் தகவலை நான் மாணிக்கத்திடம் கொடுத்துவிட்டு அவரை நேரில் சென்று பார்த்துவரும்படி சொல்லிவிடுகின்றேன்.அவருக்கு பண உதவி எதுவும் தற்பொழுது தேவை இல்லை.கருணை இல்லம் பற்றிய உதவியை மட்டும் எதிர்பார்க்கிறார்.நானும் உங்களிடம் அதையே எதிர்பார்க்கின்றேன்.நம்மால் முடிந்த இந்த உதவியைச் செய்வோம்.உதவிக் கரம் நீட்டும் அனைவருக்கும் நன்றிகள் பல.

————- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3  

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s