நண்பேன்டா

345பஸ் பிரயாணங்கள் மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.பலருக்கு நான் நண்பனாகியிருக்கின்றேன்.எனக்கு பல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டது பயணத்தின் போது எங்களுக்குள் நடந்த உரையாடல் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டது . பலருக்கு நான் நண்பனாகி இருக்கின்றேன் என்று குறிப்பிட்டது உரையாடல் மூலம் அல்ல , உறக்கத்தின் மூலம் அவர்களாகவே என்னை அவர்கள் நண்பனாக நினைத்துக்கொள்வது.சரி , நல்ல விசயம்தானே என்கிறீர்களா ? என்னங்க நல்ல விஷயம் , இரவு நேரங்களில் பஸ் பயணத்தில் தூக்கம் வருவதே பெரிய விஷயம்.அதில் பக்கத்தில் இருப்பவர் தூங்க நம் தோள்பட்டையை உபயோகப்படுத்தி கடைசியில் தோள்பட்டையோரம் எச்சில் சிந்தும் அளவிற்கு தூங்கினால் என்ன நல்ல விஷயம் சொல்லுங்கள்.இவர்களை எழுப்பி விட்டு அடிக்கவா முடியும்.இப்படி நான் நிறையப் பேருக்கு நண்பனாகி இருக்கின்றேன்.அவர்கள் தூங்கி எழுந்தவுடன் தோள்பட்டை ஈரமான நாட்கள் நிறைய. இருந்தாலும் குடித்துவிட்டு இப்படி வந்து தூங்கிய இந்நாட்டு குடிமகன்கள் நிறையப் பேர் என்னிடம் பரிசும் வாங்கித்தான் இருக்கிறார்கள்.நான் ஒன்றும் மகாத்மா அல்லவே , எவனாக இருந்தாலும் பொறுத்துப் போக.

இதில் என்ன நகைச்சுவை என்றால் அவர்கள் நம் தோள்பட்டையில் தலை சாய்த்து தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது நாம் அவர்களை எழுப்பி விட்டால் வரும் பாருங்கள் அவர்களுக்கு கோபம் , அடேங்கப்பா.என்னமோ அவர்கள் வீட்டு திண்ணையில் நாம் படுத்து தூங்குவதைப் போல் சில நொடிகள் பார்த்துவிட்டு “ஸாரிங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் இரண்டு நிமிடம் கழித்து நம் தோள் பட்டைக்கு அவர்கள் தலையை காணிக்கையாக கொடுத்துவிடுவார்கள்.நாம் அவர்களை எழுப்ப , அவர்கள் நம்மிடம் “ஸாரி” கேட்க என்று இந்த ப்ராசஸ் தொடர்ந்து கொண்டே இருக்கும். இறங்கும் இடம் வந்துவிட்டால் நமக்கு சொர்க்கம்தான்.அப்பாடா இவந்தொல்ல இனிமேல் இல்ல என்று இறங்கிவிடுகின்றோம்.பொறுமைக்கும் ஒரு எல்லைதானே இருக்கிறது.”சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்பார்கள்.அதேபோல் தான் இங்கேயும்.உழைத்துக் கலைத்து ஊருக்குச் செல்லும் நாளில் இப்படிப்பட்டவர்களுக்கு தலையணையாக இருக்க நேரிடும் சமையங்களில் என்ன செய்ய வேண்டும் என்று நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் கூறினார்.அவருடைய அப்ரோச் நன்றாகத்தான் இருந்தது.இனிமேல் நானும் அதையே பின்பற்றலாம் என்றுள்ளேன்.

என் நண்பருக்கு ஒரு நாள் இரவு பஸ் பயணத்தில் பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் போதும் , பிறகு அங்கிருந்து ஈரோடு செல்லும் போதும் தலையணையாகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.பெங்களூரில் பேருந்தில் ஏறியவர் ஹோசூர் வரை நிம்மதியாக தூங்கியிருக்கிறார்.ஹோசூரில் பேருந்தில் ஏறிய ஒரு குடிமகன் நல்ல போதையில் நண்பர் பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். குடிமகன் சேலம் செல்ல வேண்டும். மூன்று பேர் அமரும் சீட்டில் இந்த குடிமகன் நடுவில் அமர்ந்திருக்கிறார்.என் நண்பர் இடது புறமும் , மற்றொருவர் குடிமகனின் வலது புறமும் அமர்ந்திருக்கின்றனர்.நல்ல போதை என்பதால் நாற்றம் வேறு.பயணத்தின் இடையே குடிமகனுக்கு தனது தோள்பட்டையை தலையணையாகக் கொடுத்திருக்கிறார் என் நண்பர்.என் நண்பர் மட்டுமல்ல.வலது புறம் அமர்ந்திருந்த அந்த நபரும் தலையணையாக வேண்டிய கட்டாயம்.இவர்கள் இருவரும் சுத்தமாகத் தூங்கவே இல்லை.குடிமகன் குறட்டைச் சத்தத்துடன் தூக்கத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.அடிக்கடி என் நண்பர் மேலும் , வலது புறம் இருந்த அந்த நபர் மீதும் விழுந்திருக்கிறார்.என் நண்பர் சாதாரணமாகவே மிகவும் சாது.சத்தம் போட்டுக்கூட பேசாதவர். ஆனால் , வலது புறம் அமர்ந்திருந்த நபர் என் நண்பரைப் போல் அல்ல.பொறுத்திருந்து பார்த்தவர் ஒரு கட்டத்தில் ஆக்சனில் இறங்கிவிட்டார்.

இவர்கள் இருவரும் பேசி குடிமகனை ஓமலூரிலேயே இறக்கிவிட்டுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா.அந்த எல்லை வரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு ஓமலூர் வந்தவுடன் , “ஏங்க சேலம் வந்துருச்சுங்க இறங்கலியா” என்று குடிமகனை எழுப்பிக் கேட்டுள்ளனர்.பயங்கர தூக்கத்தில் இருந்தவர் இவர்கள் எழுப்பியவுடன் அவசரமாக எழுந்து ஓமலூரில் இறங்கி விட்டார். ஓமலூரில் பேருந்து நிலையம் இருப்பதால் அது சேலம்தான் என்று அவரும் நம்பி இறங்கிவிட்டார்.ங்கொய்யால , இவன தர்மபுரியிலயே சேலம்னு சொல்லி இறக்கி விட்டிருந்தாலும் இவன் இறங்கி இருப்பான்.நாம் ஏமாந்து விட்டோம் என்று இருவரும் சிரித்துக்கொண்டனர். அங்கிருந்து ஒரு இருபது நிமிடம் என் நண்பரும் , மற்றவரும் நிம்மதியாக தூங்கியுள்ளனர்.சரி இதுதான் இப்படி என்றால் , சேலத்தில் இருந்து ஈரோடு செல்ல பேருந்தில் ஏறிய என் நண்பருக்கு அங்கேயும் சத்திய சோதனை.சேலத்தில் ஏறிய ஒரு நபர் என் நண்பர் அருகில் வந்தமர்ந்திருக்கிறார்.பள்ளிபாளையத்திற்கு டிக்கட் எடுத்துவிட்டு இன்ஸ்டன்ட் காபியைப் போல் இன்ஸ்டன்ட் தூக்கத்தில் மயங்கிவிட்டார்.அடே சண்டாளா , ஹோசூரில் இருந்து இங்கே சேலம் வருவதற்குள்ளேயே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.இனி இங்கிருந்து ஈரோடு வரைக்கும் தூக்கம் இல்லையா என்று மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டே தூங்கவே இல்லை என் நண்பர்.பக்கத்தில் இருந்த நபர் இவர் மேல் தூங்கி விழுந்து கொண்டே இருந்தால் எப்படி தூக்கம் வரும் சொல்லுங்கள்.இவர் அவரை தட்டி எழுப்பி விடுவதும் , அவர் மீண்டும் இவர் மேல் விழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்க என் நண்பருக்கு சுத்தமாக தூக்கம் வரவே இல்லை.பள்ளிபாளையம் வந்துவிட்டது.என் நண்பருக்கும் தெரியும் பக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் நபர் அங்குதான் இறங்கவேண்டும் என்று.இருந்தாலும் விரக்தியில் இருந்த என் நண்பர் அவரை எழுப்பி விடவில்லை.ஈரோடு வந்தவுடன் எழுந்த அந்த நபர் ஷாக் ஆகிவிட்டார். ஷாக் ஆனாலும் பரவாய் இல்லை , என் நண்பரைப் பார்த்து “ஏங்க பள்ளிபாளையத்துல என்னை எழுப்பி விட்டுருக்கலாம் இல்ல” என்று கேட்டதுதான் என் நண்பருக்கு எரிச்சலாக இருந்திருக்கிறது.

என் நண்பர் செய்தது சரியா தவறா என்பது முக்கியமல்ல.பேருந்தில் பயணம் செய்யும்போது பக்கத்தில் இருப்பவர்கள் நம் மீது சாய்ந்து தூங்கும் போது , பொறுமை எல்லை தாண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதை என் நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன்.அடுத்த பயணத்தில் எவன் என்னிடம் மாட்டப் போகிறானோ தெரியவில்லை.நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s