பாச மலர்கள்

brother 1அண்ணன்-தங்கை , அக்கா – தம்பி உறவு என்பது அனைவருக்கும் கிடைத்துவிடாது.பல வீடுகளில் ஒரே பிள்ளையாக இருக்கும் ஆணுக்கும் , இரண்டாவது பிள்ளை இருந்தும் அதுவும் ஆண் பிள்ளையாக பிறந்துவிட்ட வீட்டிலும் அடுத்த தலைமுறைக்கான பெண் உறவு அத்துடன் துண்டிக்கப்பட்டுவிடுகின்றது.முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டால் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு அம்மாக்கள் என்று கூட சொல்வார்கள்.அந்த மகத்துவம் பெண் உறவுக்கே உரியது.அக்கா , தம்பி இருக்கும் ஒரு வீட்டில் பல நேரங்களில் அம்மா , அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட அக்காவும் , தம்பியும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுண்டு.தம்பியுடன் பழகும் அக்காவும் கூட அம்மாவைப் போன்ற பாசம் கொண்டவள்தான்.அண்ணன் , தம்பி கைகோர்த்துக்கொண்டு நடந்து செல்லும் போது இருக்கும் அழகை விட , அக்கா- தம்பி , அண்ணன் – தங்கை இருவரும் ஒன்றாகச் செல்லும் போது இன்னும்கூட அழகாக இருக்கும்.அப்படிப்பட்ட காட்சியை தினமும் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் அண்ணன் – தங்கையிடம் காண்பதுண்டு.அண்ணனுக்கு பத்து வயது இருக்கும்.தங்கைக்கு சுமார் ஐந்து வயது இருக்கலாம்.அண்ணனை தங்கை இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் நான் பார்த்ததில்லை.அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது சத்தமில்லாமல் ரசிக்கத்தோன்றும்.அன்றொரு நாள் தங்கைக்கு உடல் நிலை சரியில்லை என்ற காரணத்தால் இந்தப் பையனும் பள்ளிக்குச் செல்லவில்லை.காரணம் கேட்டேன்.நான் வீட்டில் இருந்து விட்டால் தங்கைக்கு ஒரே நாளில் உடல்நிலை சரியாகிவிடும்.ஆதலால் நானும் தங்கையை கவனித்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்குச் செல்லவில்லை என்றான்.பள்ளிக்குச் செல்லாத அவனுடைய செயலை சரி என்று சொல்லவில்லை என்றாலும் பத்து வயதில் அண்ணனின் இந்தப் பாசம் உயர்ந்ததாகவே எனக்குத் தெரிந்தது.

இன்றைக்கு ஒரே பிள்ளை போதும் என்ற சிந்தனை நிறையப் பேரிடம் வந்துவிட்டதைக் காணலாம்.அதிலும் முதல் குழந்தை ஆணாகப் பிறந்துவிட்டால் பெரும்பாலும் இரண்டாவது குழந்தையை அந்தக் குடும்பத்தில் பார்க்க முடியாது. காரணம் கேட்டால் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் ஒரு குழந்தையைப் படிக்க வைத்து வளர்த்துவிட்டாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.இந்தக் கருத்தில் நிச்சயம் எனக்கு உடன்பாடில்லை. பாசத்தைப் பகிர்ந்து கொடுப்பதற்குக் கூட நாம் பணத்தை முன்னிலைப் படுத்த வேண்டி இருக்கிறது இன்றைக்கு.நமது வாழ்க்கை முறையும் , தேடல்களும் , தேவைகளும் நம்மை குழந்தை பெற்றுக்கொள்வதிலும் கூட யோசிக்க வைக்கிறதுதானே.அன்றைக்கு எந்த ஒரு வசதி வாய்ப்பு இல்லாத காலத்திலும் நமது அப்பாக்களும் , அம்மாக்களும் இரண்டு குழந்தைகளை வளர்க்கவில்லையா என்ன.அன்றைக்கு அவர்களுக்கு இன்றைக்கு நமக்கு இருக்கும் அளவிற்கு தேவைகள் இல்லை , தேடல்கள் இல்லை.இன்றைக்கு நாகரீக உலகில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் பள்ளிக் கட்டணம் செலுத்தி குழந்தைகளை படிக்க வைப்பதைத்தானே விரும்புகின்றோம்.அவனுடைய மகன் அங்கே படிக்கின்றான் , அதனால் என் மகனும் அங்கே படித்தால்தான் மதிப்பு என்று தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாழ்க்கை முறையைத்தான் நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்கின்றோம்.ஒப்பிடலாம் , தவறில்லை.ஆனால் , அந்த ஒப்பிட்டுப் பார்ப்பது கூட ஆரோக்யமான முறையில் இருக்க வேண்டும்.அவரைப் போல் நாமும் முன்னேறிக் காட்ட வேண்டும் என்று ஒப்பிடுங்கள் , அதைப் பாராட்டலாம்.குழந்தையைப் படிக்க வைக்கக்கூட மற்றவர்களைப் பார்த்துத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்ற வகை ஒப்பீடு முட்டாள்தனமான செயலாகும்.

பரீட்சை நாட்களில் நானும் அக்காவும் பட்டையைக் கிளப்புவோம்.நான் பட்டையைக் கிளப்புவோம் என்று சொன்னது காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவது.அலாரம் வைத்து எங்களை எழுப்பிவிடுவது அம்மாவின் வேலை என்றால் எழுந்தவுடன் சுறுசுறுப்பாக இருக்க இருவருக்கும் டீ போட்டுக் கொண்டு வருவது அக்காவின் வழக்கம்.இருவரும் டீயைக் குடித்துவிட்டு படிக்க ஆரம்பித்து விடுவோம்.அன்றைக்கெல்லாம் இருவருக்குள்ளும் பல நேரங்களில் சண்டை வந்துவிடும் என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் என்றைக்கும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை.சண்டை என்றால் சில நேரங்களில் எல்லை மீறும்.சண்டியரைப் போல் ஒரு முறை கருக்கருவாளை எடுத்து சண்டை போடும் அளவிற்கு சென்றது இன்னும் நினைவிருக்கிறது. அதுபோக சிறு வயதில் அக்காவால் ஏற்பட்ட தீப்புண் ஒன்று இன்றைக்கும் தழும்பாக இருக்கிறது.ஒருவர் மேல் அதிக அன்பு வைத்திருந்தால்தான் அவர்களுடன் சண்டை வரும் என்பார்கள்.அதே கதைதான் . இப்படி எத்துனை முறை சண்டை வந்திருந்தாலும் என் தம்பி , என் அக்கா என்ற அந்தப் பாசம் இன்றைக்கும் தொடர்கிறது.மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல் அக்கா அம்மாவாகத்தான் இன்றைக்கும் தெரிகிறாள்.அம்மாவிடம் ஆலோசனை கேட்காத பல விசயங்களை அக்காவிடம் கேட்டுப் பெற்றுள்ளேன்.அக்கா திருமணம் முடிந்து மச்சான் வீட்டிற்குச் சென்ற அந்த நாள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து அழுது கொண்டிருந்தவன் அடியேன்.

பல நேரங்களில் பல வீடுகளில் தாயை விட அதிகம் ஸ்கோர் செய்து விடுபவள் அக்கா/தங்கை.பெண் இருக்கும் வீட்டில் அவள் தாய் வீட்டில் இருந்து திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்றவுடன் அவளது உறவு முடிந்துவிடுவதில்லை .இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பிறகுதான் பெண்ணுடனான தாய் வீட்டின் உறவு அதிகமாகிறது.அண்ணன்/தம்பியைப் பொருத்தவரை தாய் மாமன் உறவு என்பது பிரிக்கமுடியாத உறவு.மாமனுக்கு பெருமை தரக்கூடிய உறவு.அதிலும் அக்காவிற்கும் பெண் குழந்தை பிறந்து விட்டால் , மாமனுக்கு மரியாதை என்றும் பலமாக இருக்கும். அக்கா குழந்தைக்கோ , தங்கையின் குழந்தைக்கோ மொட்டை போடும்போது தன் மடியில் அமர வைத்து மொட்டை அடிப்பதும் காது குத்துவதும் தாய் மாமனுக்கு மட்டும் கிடைக்கும் மரியாதைகளில் ஒன்று.குழந்தையைப் பெற்றவர்களுக்குக்கூட அந்த மரியாதை கிடைக்காது.இப்படி அக்கா – தம்பி , அண்ணன் – தங்கை உறவைப் பற்றி பெருமையாகச் சொன்னாலும் சிறு வயதில் பாசமாக இருந்தவர்கள் திருமணமான பிறகு உறவில் சிக்கல் விழுவதையும் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.பெரும்பாலும் இவர்கள் பிரியக் காரணமாக இவர்கள் இருப்பதில்லை.இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் செய்யும் சிறு பிள்ளைத்தனமான செயல்களே இவர்களின் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

அக்கா – தம்பி உறவை எந்த ஒரு சிக்கலுமின்றி முப்பத்தியைந்து வருடங்களாக அனுபவித்து வருகின்றேன். எனக்கு இன்னொரு அம்மாவாகத்தான் அக்கா இருந்து வருகிறாள்.அந்த வகையில் சந்தோசம்தான் என்றாலும் , எனக்குக் கிடைத்த அந்த சந்தோஷம் என் இரண்டு மகன்களுக்கும் கிடைக்காமல் போய் விட்டதே என்ற வருத்தம் ஏற்படுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.மீண்டும் சந்திப்போம்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s