கடன் உயிரையே பறிக்கும்

Kadanநம் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு விட்டால் அதன் பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.மாதக் கடைசியில் வாங்கும் சம்பளத்திற்கு தகுந்தாற்போல் நமது தேவைகளை அமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஆசை மீறினால் துன்பம்தான்.ஒருவர் பைக் வைத்திருக்கிறார் என்று அவரைப் பார்த்து நாம் ஆசைப்படுவது தவறில்லை.ஆனால் , அந்த பைக்கை வாங்கும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்கிறதா என்று முதலில் யோசிக்கவேண்டும்.மாதா மாதம் அதற்கு வாங்கும் கடன் தவணை செலுத்தும் அளவிற்கு நமக்கு சம்பளம் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும்.முடிந்தால் வாங்கலாம் , இல்லையேல் சில காலம் கழித்து வருமானத்தை பெருக்கிக்கொண்டு வாங்கலாம்.தவறில்லை.ஒருவர் வைத்திருக்கின்றார் என்பதற்காக அதை நாமும் வாங்கியே தீர வேண்டும் என்று நினைத்தால் கடைசியில் துன்பம்தான்.தன்னால் தன் மகனை படிக்க வைக்கும் அளவிற்கு வசதி இல்லை என்றால் , பள்ளிப்படிப்போடு நிறுத்திவிட்டு ஒரு நல்ல வேலைக்கு அனுப்பிவிடுவது கூட நல்லது என்பேன் நான்.தனது சக்திக்கும் மேல் அதிக வட்டிக்கு கடன் வாங்கிப் படிக்க வைக்க வேண்டும் என்றில்லை.அப்படிச் செய்யும் பட்சத்தில் பெற்றோர்களே மகனுக்கோ , மகளுக்கோ கடன் சுமையை சுமத்தி விடுகின்றனர்.கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கடனை திருப்பிச் செலுத்துவதிலேயே முக்கால்வாசி வாழ்க்கை முடிந்துவிடுகிறது பலருக்கு. கடன் வாங்கிப் படிக்க வைக்கலாம்.ஆனால் , அதைத் திருப்பிச் செலுத்தும் அளவிற்கு தகுதி இருக்க வேண்டும்.இருந்தால் கடன் வாங்கலாம்.

இந்த நண்பர் பெயர் நவீன்.நான் படித்த அதே கல்லூரியில் பொறியியல் படித்தவர்.நாங்கள் இருவரும் வேறு வேறு பிரிவுகள் என்றாலும் நட்பானோம்.எனக்கும் அவருக்குமான நட்பு அவ்வளவு நெருக்கமான நட்பு இல்லை என்றாலும் அவ்வப்பொழுது சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்ளும் அளவிற்கு இருந்தது என் கல்லூரி நாட்களில்.நண்பர் நன்றாக படிக்கக்கூடியவர்தான்.வீட்டில் அக்கா ஒருவர் இருக்கிறார்.இருவரையும் நண்பரின் அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார்.கஷ்டப்பட்டு என்று குறிப்பிட்டது பல இடங்களில் கடன் வாங்கிப் படிக்க வைத்திருக்கிறார் என்று பொருள்.அதிக வட்டிக்கு கடன்.மகன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை எப்படியோ சமாளித்துவிட்டார் நண்பரின் அப்பா.மகன் படித்து முடித்து ஓரிரு வருடங்கள் சிரமப்பட்டிருக்கிறார்.பிறகு ஒரு பெரிய பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டார்.நண்பர் படிப்பை முடித்து வேலையில் சேரும் வரை கடனிலேயே குடும்பம் ஓடியிருக்கிறது.நண்பருக்கு வேலை கிடைக்கும்வரை அக்காவிற்கும் சொல்லும்படியான வேலை கிடைக்கவில்லை.ஒட்டுமொத்த குடும்பமுமே நண்பரை நம்பியே இருந்திருக்கின்றது.எப்படியோ நண்பருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு எனக்கும் அந்த நண்பருக்கும் இடையே தொடர்பே இல்லை. அவர் வேலைக்குச் சேர்ந்த அதே நிறுவனத்தில்தான் என் மனைவியும் திருமணத்திற்கு முன்பு வேலை செய்துகொண்டிருந்தார்.அப்பொழுதுதான் எங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. என் நண்பரும் என் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் நிச்சயம் ஆன பிறகு மனைவி என்னைப் பற்றி நண்பரிடம் சொன்ன பொழுது நண்பர் நான்தான் என்று தெரிந்து கொண்டார்.

வேலையில் சேர்ந்த என் நண்பருக்கு முதல் நாளிலிருந்து பணப் பிரச்சனைதான்.மாதக் கடைசியில் சம்பளம் வருவதற்குள் அங்கும் இங்கும் கடன் பெற்றிருப்பார். அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.சம்பளம் வந்த உடனேயே யாரிடம் எல்லாம் கடன் வாங்கியிருந்தாரோ அவர்களுக்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்துவிடுவார்.பிறகு மீண்டும் கடன் வாங்கும் வேலைதான்.ஏற்கனவே அப்பா பெற்றிருந்த கடனையும் இவரே செலுத்த வேண்டும்.அதோடு சேர்த்து இவருடைய செலவு , ஊரில் இருக்கும் குடும்பத்தின் செலவு என்று அனைத்தும் நண்பரே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை.கடன் தொல்லை இப்படி இருக்க அப்பொழுது நண்பரின் அக்காவிற்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.நண்பர் கிட்டத்தட்ட அலுவலகத்தில் தனது டீமில் அனைவரிடமும் கடன் வாங்கிக்கொண்டிருந்தார் அப்பொழுது.ஒரு கட்டத்தில் இந்தியாவில் இருந்தால் தனது பண தேவைகளையும் , அக்கா திருமணத்தையும் நடத்த முடியாது என்று நினைத்து தனது மேனேஜரிடம் சென்று தனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தருமாறு கேட்டிருக்கிறார்.அந்த சமயம் மூன்று மாதம் வெளிநாடு சென்று வேலை செய்ய நண்பருக்கு வாய்ப்பும் கிடைத்திருக்கின்றது.

மூன்று மாதத்தில் வெளிநாட்டில் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து அக்காவின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணம் நண்பருக்கு.இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் வெளிநாட்டில் இருக்கும் அந்த சமயம்தான் அக்காவின் திருமணமும் கூட.அக்காவின் திருமணத்திற்கு இருக்காவிட்டாலும் பரவாய் இல்லை.திருமணத்தை எப்படியாவது இந்த மூன்று மாத வெளிநாட்டு பயணத்தில் கிடைக்கும் பணத்தை வைத்து நடித்திவிட முடிவுசெய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் நண்பர்.அக்காவின் திருமணமும் முடிந்தது.தன் அக்காவின் திருமணத்திற்குக்கூட தன்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்ற கவலை நிச்சயம் நண்பருக்கு இருந்திருக்கும்.அனைத்தையும் பொறுத்துக்கொண்டு பணத்திற்காக மட்டும் வெளிநாடு சென்றவர் அக்காவின் திருமணத்தை முடித்து வைத்தாரே தவிர உயிருடன் நாடு திரும்பவில்லை.ஆம் , அவர் சென்ற அந்த நாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.இங்கே பிணமாகத்தான் திரும்பி வந்திருக்கிறார்.என் மனைவியிடம் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று கேட்ட பொழுது , கடன் தொல்லைதான் காரணம் என்று தான் கேள்விப்பட்டதாகக் கூறினார்.தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒரு இளைஞருக்கு எண்ணம் வருகிறதென்றால் எவ்வளவு கடன் இருந்திருக்கும் என்று நாம் யூகித்துக்கொள்ளலாம். நண்பரின் இந்த மரணச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.எனக்கென்னவோ பெற்றோர்கள் நண்பருக்கு அதிகமான கடன் சுமையைக் கொடுத்துவிட்டார்களோ என்றே தோனுகிறது. எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லாதவர் நண்பர்.மிகவும் அமைதியானவரும் கூட.ஆனால் , மண்ணில் வாழ அவருக்கு இறைவன் எழுதவில்லை.இளமையிலேயே இறைவனிடம் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆசையில்லா மனிதர்கள் நம்மில் யாருமில்லை.ஆசை இருக்கலாம்.அதை செயல்படுத்தும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்கிறதா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.நண்பரின் இறப்பிற்கு காரணம் அவரது கோழைத்தனம் என்று நீங்கள் நினைத்தாலும் சரியான திட்டமிடல் இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தே கடன் பெற்று குடும்பம் நடத்தி வந்து கடைசியில் ஒட்டுமொத்த கடன் சுமையையும் நண்பர் மேல் ஏற்றிய அவருடைய பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் வருகிறது.மீண்டும் சந்திப்போம்.

————- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s