முட்டாள்களின் ராஜா

15நாகரீகமும் , வாழ்க்கை முறைகளும் மாற மாற  மனிதனுக்கு எந்தச் செயலிலும் அவசரம்தான் இன்றைக்கு.பொறுமையாக இருக்க வேண்டிய இடங்களில் கூட அவசரம்தான்.சில சமயங்களில் தன் உயிரைப் பணயம் வைத்துக்கூட அவசரத்தின் உச்சிக்கே சென்று விடுகின்றனர் சிலர்.உயிரை விட அப்படியென்ன அவசர வேலை இருக்கிறது என்று இவர்களிடம் நீங்கள் கேள்வியைக் கேட்டால் நீங்கள் நிச்சயம் ஏமாற்றத்தைச் சந்திக்கக்கூடும்.அவர்களைப் பொருத்தவரை பொது நலம் என்பது என்னவென்று அறியாதவர்கள் , சுயநலத்தை மட்டுமே கொண்டாடுபவர்கள் , அவ்வளவுதான்.அதற்காக குறைந்த பட்ச அறிவுத்தன்மையைக் கூடவா ஆண்டவன் இவர்களுக்குக் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.ஒரு ட்ராப்பிக் சிக்னலில் நின்றுகொண்டிருக்கையில் விளக்கு சிகப்பில் இருந்து பச்சைக்கு வந்தவுடன் நமக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் அறிவு ஜீவிகள்  தங்கள் வண்டியில் அடிக்கும்  ஹாரன் காதைக் கிழித்துவிடும் அளவிற்கு இருக்கிறது.சிகப்பில் இருந்து பச்சைக்கு விளக்கு மாறியவுடன் பறக்க நாம் ஒன்றும் சூப்பர்மேன் அல்லவே.அதைப் புரிந்து கொள்ளக்கூடிய சிறு அறிவைக் கூடவா அவர்கள் பெற்றிருக்கவில்லை என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.”என்னய்யா இப்படி ஹாரன்  அடிக்கிறாய்” என்று பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான் , நம்மை முட்டாள்களின் மொத்த உருவம் என்று ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள் , அங்கே நாம் தான் அசிங்கப் படவேண்டும்.எவன் எக்கேடு கேட்டாலும் இவர்கள் முந்திக்கொண்டு செல்ல வேண்டும் , சென்று அலுவலகத்தில் கிழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை இவர்களிடத்தில்.

சிக்னல்களில் மட்டும் என்றில்லை கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்கலாம்.ஒரு பேருந்து வந்து நிற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.அந்தப் பேருந்தில் இருக்கும் பயணிகள் கீழே இறங்கும் முன் பேருந்தினுள் செல்லக் காத்திருக்கும் இந்த அவசரக்காரர்கள் உள்ளே இருப்பவர்களைத் தள்ளிக் கொண்டு போவதை சினிமாவில் எல்லாம் நீங்கள் பார்க்கத் தேவை இல்லை.அன்றாடம் நம் ஊரில் நீங்கள் பார்க்கலாம்.”ஏங்க , கீழே இறங்குவதற்குள் என்னங்க உங்களுக்கு அவசரம் , இப்படி தள்ளிக்கொண்டு வந்து ஏறுகிறீர்களே” என்று உள்ளே இருப்பவர்கள் கேட்டுவிட்டால் அவ்வளவுதான் , என்னமோ அவர்கள் தவறு செய்ததைப் போல் அவர்களைப் பார்த்து முறைத்துக்கொண்டுதான் செல்வார்கள்.இது இப்படியென்றால் பேருந்திற்குள் யாராவது தங்கள் கைக்குட்டையைப் போட்டு இடம் பிடித்து வைத்திருந்தால் நம் இந்திய பிரஜை அந்தக் கைக்குட்டையை அப்படியே அலாக்காகத் தூக்கி எறிந்துவிட்டு தங்களுக்கே அந்த இடம் சொந்தம் என்பதைப் போல் அமர்ந்துகொள்வதோடு மட்டுமில்லாமல் விவாதத்திலும் இறங்குவார்.கைக்குட்டையைப்  போட்டு இடம் பிடிப்பது மட்டும் சரியா என்று நீங்கள் கேட்கலாம் , அப்படித்தானே இந்த சமுதாயம் நம்மை வளர்த்திருக்கிறது என்பதே என் பதில்.இங்கே மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமானால் இப்படிப்பட்ட சிறு சிறு சண்டைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.மாற்றம் ஏற்பட தீர்வு சொல்பவன் நான் இல்லை என்பதால் அதை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

மூன்று மாத முன்பதிவாக இருந்த ரயில் முன்பதிவு இப்பொழுது இரண்டு மாதங்களாகக் குறைந்துவிட்டது.இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் ரயிலில் பயணம் செய்யலாம் என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது என்றே சொல்லலாம்.அதிலும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ரயில் முன்பதிவு செய்ய வேண்டுமானால் காலையில் எட்டு மணிக்கு ட்டான்  என்று கம்பியூட்டர் முன்பு உட்கார்ந்து கொண்டு , இதயம் படபடக்க ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு தட்டுத் தடுமாறி முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும்.அப்படித் தடுமாறி டிக்கட் கிடைத்துவிட்டால் , 30*40 சைட் வாங்கியதைப் போல் அப்படியொரு சந்தோஷம் நமக்குக் கிடைக்கும்.அப்படிப் போராடியும் டிக்கட் கிடைக்காதவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றுதான்  சொல்ல வேண்டும்.சரி , போராடி டிக்கட் பதிவு செய்துவிட்டோம்.இரண்டு மாதம் கழித்து பயண நாளன்று ரயில் நிலையம் செல்கின்றோம்.ரயிலும் வருகிறது.வந்து நிற்கிறது.நாம் என்ன செய்கின்றோம் , உள்ளே கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்மணி வெளியே வருவதற்குள் முந்திக்கொண்டு அந்தப் பெண்மணியை கீழே தள்ளிக்கொண்டு செல்வதைப் போல்தானே செல்கின்றோம்.இங்கே “நாம்” என்று குறிப்பிட்டது அனைவரையும் அல்ல , நம்மில் பலர் இப்படித்தான்.முன்பதிவு செய்த இடத்தைக் கூடவா  மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்துகொள்வார்கள் ? இந்த குறைந்த பட்ச அறிவு கூடவா இல்லை நமக்கு ? இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் படிக்காதவர்கள் கூட இது போன்ற விசயத்தில் பரவாய் இல்லை , மெத்தப் படித்த மேதாவிகள்தான் பெரும்பாலான நேரங்களில் இப்படிப்பட்ட புத்திசாலித்தனமான காரியங்களைச் செய்கிறார்கள். இவர்கள் செயல் நமக்கு எரிச்சலைத் தருகிறது.

சாராயக் கடைகளில் சொல்லவே வேண்டாம்.சிலர் கொலை வெறித் தாக்குதலில் இறங்கும் அளவிற்கு அவசரத்தில் இருப்பதைப் பார்க்கலாம்.குடிப்பதிலும் கூட தாங்களே முந்திக்கொண்டு சென்று குடிக்க வேண்டும் என்ற ஆவல் பாராட்டப்பட வேண்டிய விசயம்தானே.  ரேசன் கடைகளில் இருந்து பேசன் கடை வரை எங்கும் அவசரம்தான்.  இதை விட மருத்துவமனைகளில் பார்த்திருப்பீர்கள்.என்னதான் டோக்கன் முறையில் டாக்டரைச் சந்திக்க வேண்டும் என்றாலும் , ஒரு சில பெரிய இடத்துப் பிள்ளைகள்(என்று அவர்களே நினைத்துக்கொள்வது) வந்து டாக்டரை சந்திக்க அவசரம் காட்டுவதை பல முறை நேரில் பார்த்தவன் நான்.டோக்கன் போட்டுவிட்டு வெளியில்  காத்திருப்பவன் எல்லாம் முட்டாள் , இவர்கள் மட்டும் மேதைகள்.இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு சிந்தனை என்னவென்றால் , இந்த உலகத்தில் இவர்களுக்கு மட்டுமே வேலை அதிகம் , ஆதலால் சீக்கிரம் செல்ல வேண்டும் , மற்றவர்கள் வேலை வெட்டியில்லாமல் திரிபவர்கள் என்ற மனோபாவம்.”முட்டாள்களின் ராஜா” என்ற விருதைப் பெற இவர்கள் போராடுவதைப் போல் பல நேரங்களில் எனக்கு கனவு வருவதுண்டு.அவர்களுக்கு பொருத்தமான விருதைப் பெற அவர்கள் போராடுகிறார்கள் , அதில் என்ன தவறு என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டு பதில் சொல்லிக்கொள்வேன்.நம்மைப் பொறுத்த வரை நமக்கு நாமே ராஜாதானே.

வெள்ளைக்காரன் மட்டும் இன்னும் இந்தியாவில் இருந்திருந்தால் இப்படிப்பட்ட புத்திமான்களின் அறிவைக் கண்டு நடுங்கி அவசர அவசரமாக எந்தவொரு போராட்டமும் இன்றி இந்நேரம் நாட்டை விட்டு அவனாகவே சென்றிருப்பான்.அப்படிப்பட்ட அறிவாளிகளைப் பெற்றிருக்கிறது இந்த நாடு.வெள்ளையனின் காலத்தில் இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் நாம் சுதந்திரம் பெற அத்துனை போராட்டங்களை எல்லாம் நடத்தியிருக்கத் தேவையும் இல்லை , அத்துனை வருடங்கள் காத்திருந்திருக்கவும் தேவையில்லை என்றுதான் என்னால் பின்னோக்கிச் சென்று யோசிக்கமுடிகிறது.மீண்டும் சந்திப்போம்.

——– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to முட்டாள்களின் ராஜா

  1. //நல்லா வருவீங்கடா நீங்க எல்லாம்.// தேவை இல்லை என்று நினைக்கிறேன். அது கட்டுரையிந் தொனியோடு ஒட்டாமல் வருகிறது. ஆனால் இவர்கள் இப்படி நடந்துகொள்ள எந்த மாதிரியான புறக்காரணிகள் இருக்கின்றன என்றும், தீர்வுகள் குறித்தும் பேசி இருந்தால் கட்டுரை முழுக்க “வெளியே நீளும் விரல்” கொஞ்சம் உள்ளேயும் திரும்பி இருக்கும். மற்றபடி நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதுங்க மாப்ளே…

    Liked by 1 person

    • மாமா – நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு நன்றிகள்.மிக்க மகிழ்ச்சி.நீங்கள் குறிப்பிட்ட வரியை நீக்கிவிட்டேன்.நீங்கள் குறிப்பிட்ட மற்ற கருத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.அடுத்த கட்டுரைகளுக்கு அது நிச்சயம் உதவும்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s