நான் சாப்பிட்ட மசால் தோசை – ருசியா ?

Masaalபுத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லாம் இலக்கியவாதிகள் இல்லை என்ற எச்சரிக்கையோடு இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன்.காரணம்,அது எனக்கும் பொருந்தும் என்பதால் இந்த எச்சரிக்கை.எனக்கும் இலக்கியத்திற்கும் கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோமீட்டர்  தூரம் என்பதையும் சொல்லியாக வேண்டும்.நீங்கள் என்னிடம் ஜெயமோகனைப் பற்றிக் கேட்டாலோ அல்லது ஜெயகாந்தனைப் பற்றிக் கேட்டாலோ  சுவற்றில் போய்  “நங்” என்று   முட்டிக்கொள்வீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் . முகநூல் வந்தபிறகுதான் வாசிப்பு என்பது சற்றே அதிகமானது.முகநூல் நண்பர்களாக இருக்கும் எழுத்தாளர்கள் புத்தகம் போட்டால் பெரும்பாலும் வாசித்துவிடுவதுண்டு.அதற்காக தேடிப் போய் எல்லாம் வாங்க வேண்டும் என்பதற்காக வாங்கிப் படிப்பதில்லை.பிடித்த எழுத்தாளர் என்றால் உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடுவதுண்டு. அன்றைக்கு நண்பர் ஒருவர் தன்னுடைய நண்பரின் கவிதைத் தொகுப்பை வாசிக்கும்படி என்னிடம் கொடுத்தார்.கவிதைக்கும் எனக்கும்கூட ஆயிரம் கிலோமீட்டர் தூரம்தான்.புரிந்தாலும் புரியாவிட்டாலும் புரிந்ததைப் போல் நடிக்க வேண்டும் .அதுதான் பிரச்சனையே.என் நண்பர் கொடுத்தார்  என்பதற்காக மனதை திடப்படுத்திக்கொண்டு பத்துப் பக்கங்கள் படித்தேன்.பத்தாவது பக்கத்திலேயே எனக்கு குறட்டை சத்தம் வந்துவிட்டது  என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.அதற்காக கவிஞர்களை நான் குறை கூறவில்லை .நல்ல கவிஞர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்தான்.கவிதைகள் புரிந்துகொள்ளும் அளவிற்கு கொஞ்சம் இருக்க வேண்டும் என்ற ஆதங்கம் , அவ்வளவுதான்.நானும் கவிதை எழுதுவேன்  என்று  நம்மை தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கொண்டு செல்லக்கூடாது கவிஞர்களின் படைப்புகள் .

புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் வில்லனாக இருந்த ஒருவன் ஹீரோவாக மாறிவிடுவதில்லை.எல்லாப் புத்தகங்களும் நம்மை நல்வழிப்படுத்தும் என்று நம்பியும் இங்கே யாரும் புத்தகங்கள் வாசிப்பதில்லை.எழுத்தாளருக்கு பல சம்பவங்களால் ஏற்படும் தாக்கத்தை அவர் தன்னுடைய எழுத்தில் பிரதிபலிக்கிறார்.அவருடைய உணர்வை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறார் புத்தகம் எனும் வடிவில்.வாசகர்கள் அந்த உணர்வுகளை ரசிக்கும்பொழுது அந்த எழுத்தாளர் பிடித்துப்போய் விடுகிறார்.அவருடைய எழுத்தின்மீதும் நம்பிக்கை ஏற்படுகிறது.அதையும் தாண்டி புத்தகங்களில் இருந்து வாழ்க்கைக்குத் தேவையான நெறிகளை எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலை.அப்படி எழுத்தாளரின் எழுத்தின் மீது நம்பிக்கை வந்துவிட்டால் அவர் எழுதும் புத்தகங்களை வாசிக்க ஆர்வம் வந்துவிடுகிறது.”அட இவர் புத்தகமா , நம்பி வாங்கலாமப்பா ” என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். முகநூல் அப்படி நிறைய எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறது.அப்படி நம்பி புத்தகம் வாங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர்தான் எழுத்தாளர்  வா.மணிகண்டன்.அவருடைய முந்தைய சிறுகதைத் தொகுப்பான “லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்” படித்ததால் ஏற்பட்ட நம்பிக்கைதான் அவருடைய புதிய புத்தகமான “மசால்தோசை 38 ரூபாய்” படிக்கவும் காரணமாக இருந்தது.

இனி , “மசால்தோசை 38 ரூபாய்”  புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்குச்  செல்வோம்.

பொதுவாக மணிகண்டனுடைய எழுத்துக்களில் சமூகம் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும்.எழுத்து விசயத்தில் எளிமையான முறையையே பின்பற்றுகிறார்.நாம் சாதாரணமாக புரிந்துகொள்ளும் அளவிற்கு அவருடைய படைப்புகள் இருக்கின்றன.இன்றைக்கு வடக்கில் இருந்து தமிழ் மீது அதீத பாசக்கரங்கள் நீட்டப்படும் நிலையில் , எளிமையான முறையில் மக்களுக்குத் தேவையான தகவல்களை இப்படிக் கொண்டு சென்றாலே இன்னும் கொஞ்ச காலங்களுக்கு தமிழ் வாழும்.தமிழ் மீது திடீர் பாசங்கள் எல்லாம் தேவையற்றதுதான்.தன்னுடைய முதல் கட்டுரையிலேயே சமூக பிரச்சனையை முன்வைக்கிறார்.ஒரு விபத்து நடந்தால் பொது மக்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்பதை ஒரு நகரத்தில் நடக்கும் விபத்திலும் , கிராமத்தில் நடக்கும் விபத்திலும் சம்பவங்களின் அடிப்படையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.எங்கே நாம் சென்று உதவினால் நமக்கு தொந்தரவு வந்துவிடுமோ என்ற மனப்பான்மைதான் நகரத்தில் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது.கிராமத்தில் ஓரளவு பரவாய் இல்லை.அதே போல் இயற்கை வளங்களை காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அதை எப்படியெல்லாம் நாம் சீரழிக்கின்றோம் என்பதையும் , அதற்கு ஒரு வயதானவர் அடுத்த தலைமுறைக்காக நல்லுள்ளத்துடன் செய்யும் பணியையும் நமக்குக் காட்டுகிறார் ஒரு கட்டுரையில்.

கட்டுரைகள் கிராமத்திலும் , நகரத்திலும் நடந்த சம்பவங்களை மாறி மாறி அலசிக்கொண்டு செல்கிறது.அவருடைய பள்ளிக்கால சேட்டைகளை படிக்கும்போது நாம் அவற்றை எல்லாம் மிஸ் செய்துவிட்டோமே என்றுகூட நினைக்கத் தோணும்.அதே போல் கிராமப்புற மனிதர்களின் பாசத்தையும் தன் அமத்தா மூலம் அழகாகச் சொல்லியிருக்கிறார்.அந்த “வப்புஸ்” கட்டுரையைப் படிக்கும் போது என் மனைவி அவளுடைய அமத்தாவைப் பற்றி என்னிடம் கூறிய அனைத்தும் நினைவில் வந்தோடின.கிட்டத்தட்ட அதே அமத்தா கேரக்டர்தான் என் மனைவியின் அமத்தா கேரக்டரும்.இப்படி ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும்போதும் நிச்சயம் அதே போன்ற அனுபவங்களை நாம் அசைபோடலாம்.எதார்த்தமான, தினமும் சந்திக்கும் சமாச்சாரங்கள்.காக்கிச்சாட்டையை துவைத்துப் போட்டவர் கம்யூனிஸ்ட்டையும் தொட்டுவிட்டார்.”கம்யூனிஸ்ட் எல்லை தாண்டிப் போனால் நக்சலைட்தானே” என்பது ஒரு சேம்பிள்.இன்றைக்கு ஐ.டி.துறையில் சர்வ சாதாரணமாகிவிட்ட விவாகரத்துகள் குறித்தும், பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் சில உண்மைச் சம்பவங்களோடு கொடுத்திருக்கிறார்.

சரி , எங்கப்பா அந்த மசால் தோசையைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருக்கும் வேளையில் அதை தன் மகனுக்கு வாங்குவதற்காக அனுமந்தாவிடம் 38 ரூபாய் சில்லறைக் காசுகள் வாங்கிச் சென்றுவிடுகின்றார் மணிகண்டன் .லிண்ட்சேவில் காமம் கொஞ்சம் எட்டிப்பார்த்திருந்தாலும் எல்லை தாண்டவில்லை.இதில் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பது மகிழ்ச்சியே.வாய் விட்டுச் சிரிக்க “மலேசியாவில் மசாஜ்” படித்து பல்லுக்கு வலியை ஏற்படுத்திக்கொள்ளலாம்.யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்துவிட்டார்.மனைவிக்கு லிண்ட்சேவை படிக்கச் சொல்லி இன்னும் அதையே அவர் படிக்கவில்லை.இப்பொழுது மசால் தோசையைப் பற்றியும் , அமத்தா கேரக்டர் பற்றியும் சொன்னவுடன் இரண்டு புத்தகங்களையும் ஒரு வார இறுதி நாட்களில் படித்துவிட முடிவுசெய்திருக்கிறார். புத்தகங்களைப் பொருத்தவரை பெண்களும் படித்து ரசிக்கும் அளவிற்கு விஷயம் கொடுத்துவிட்டால் , அதிலேயே பாதி வெற்றி கிடைத்துவிடும்(இன்றைக்கு பல புத்தகங்கள் அப்படியில்லை என்பதால் சொல்கிறேன்).மணிகண்டன் அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.வாழ்த்துகள் மணிகண்டன்.

குறைகள் :

– அதிவேகத்துடன் வாசிப்பு சென்று கொண்டிருக்கையில் கார்த்திக்கின் சோகமும் , குல்பர்கா பாயைப் பற்றிய சோகமும் சிறிது நேரம் வாசிப்பை நிறுத்தி நமக்கும் சோகத்தை ஏற்படுத்துகிறது.இந்தக் கட்டுரைகள் புத்தகத்தில் தேவையா என்ற கேள்வி வருகிறது என்றாலும் சோகத்தை ஏற்படுத்திய எழுத்து அதை மறைத்துவிடுகிறது.

– முன் அட்டைப் படம் “லிண்ட்சே” அளவிற்கு கேட்சியாக இல்லை .முன் அட்டைக்காக இரண்டு புத்தகங்களையும் ஒப்பிட்டால் , “லிண்ட்சே” முந்திவிடும் என்பது என் கருத்து.

மூன்று மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் படித்தாகிவிட்டது. படித்துவிட்டு மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.மீண்டும் சந்திப்போம்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to நான் சாப்பிட்ட மசால் தோசை – ருசியா ?

 1. Maragatham Kandhasamy says:

  vimarsananangalil mukkiya thevai nadu nilaimai. niraigalai munvaithu
  ookuvithalilum, kuraigalai pinsolli puriya vaithalilum miga sirandha
  vimarsagar agirar kathir..

  Liked by 1 person

 2. அருமையான மதிப்புரை. வாழ்த்துகள்.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s