அரசாங்க பள்ளிகளும் சில நல்லாசிரியர்களும்

Selvakannanஅரசுப் பள்ளிகளைப் பற்றிய நம் கண்ணோட்டம் பெரிதாக இருந்ததில்லை.தனியார் பள்ளிகளின் காலம் இது என்றுதான் சொல்ல வேண்டும் .ஆனால் , அரசுப் பள்ளிகள் மீதும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது ஆங்காங்கே இருக்கும் சில அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள்.”அடப் போப்பா , இன்றைக்கு நேரத்திற்கு வந்துவிட்டு நேரத்திற்கு செல்வதைத்தானே பல ஆசிரியர்கள் செய்கிறார்கள் , நீ என்னமோ அவர்களுக்கு வக்காலத்து வாங்குறியே” என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்.இன்றைக்கும் தங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தங்கள் குழந்தையைப் போல் எண்ணி அவர்களின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தும் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த அரசுப் பள்ளி இருப்பது கரூர் மாவட்டம் பரமத்தியில்.இப்பொழுதுதான் 75 ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது இந்தப் பள்ளி.75 வருடத்தையும் தாண்டி இன்னும் தொடர்கிறது என்றால் நாம் யோசிக்கத்தான் வேண்டும்.ஏதாவது சிறப்பம்சம் இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது , செயல்படுவது என்பதை விட வெற்றிகரமாக செயல்படுவது சாத்தியமில்லை.இங்கே வெறும் புத்தகப் பாடங்களை மட்டும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அதோடு சேர்த்து ஆங்கிலப் பயிற்சி , ஓவியப் பயிற்சி , கணினிப் பயிற்சி , ஹிந்திப் பயிற்சி என்று புத்தகங்களையும் தாண்டி மாணவர்களுக்குத் தேவையான பிற திறனையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று அந்த ஆசிரியர்களுக்கு என்ன இருக்கிறது சொல்லுங்கள் ? வந்தோமா , சம்பளம் வாங்கிச் சென்றோமா என்று சென்றுவிடலாம் அல்லவா ? இல்லை , அதுதான் இல்லை.தன்னலமின்றி ஆசிரியர் பணியைச் செய்கிறார்கள்.தேவைப் பட்டால் சனிக்கிழமைகளிலும் மாணவர்களுக்காக உழைக்கிறார்கள்.

இந்த எண்ணம்தானே வேண்டும் ஆசிரியர்களுக்கு.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் குழந்தைகளை தங்கள் குழந்தைகள் என்று பாவித்தாலே போதும்.அரசுப் பள்ளிக்கூடங்களும் வரவேற்புப் பெரும்.கடந்த டிசம்பர் மாதத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் இந்த பள்ளியில் செயல்படுத்தக்கூடிய நிகழ்வுகளை பிற பள்ளிகளில் இருந்து வந்திருந்த தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார்கள் .மாநில அளவில் குறிப்பிடத்தக்க பள்ளிகளில் ஒன்றாக கரூர் பரமத்தி அரசுப் பள்ளி விளங்குகிறது என்பது மகிழ்ச்சிகரமான செய்தி. எனவே இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒளிப்பதிவு செய்து பிற பள்ளிகளுக்கு விரைவில் வழங்க இருக்கிறார்கள்.இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செல்வக்கண்ணன் Rakkappan Selvakkannan அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் நல்லாசிரியர் விருது வழங்கியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை .தகுதி உள்ளவருக்குத்தான் கொடுத்திருக்கிறார்கள்.

கரூர் பரமத்தி அரசுப் பள்ளியின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற நாம் வாழ்த்துவோம்.அவர்கள் பள்ளியின் பயிற்சி வகுப்புகளில் சிலவற்றை இந்த புகைப்படங்களில் பார்க்கலாம்.

ComputerDrawingHindi Classparamathy

நல்லாசிரியர் விருது பெற்ற திரு.செல்வக்கண்ணன் அவர்கள் கூறியதாவது :

 — எனது இரண்டு பெண் குழந்தைகளும் எனது பள்ளியில் தான் படித்தார்கள்.அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்து பனிரெண்டாம் வகுப்புவரை தனியார் பள்ளியில் படித்தவர் இப்பொழுது மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரின் பெண்குழந்தையும் எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.

 — தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதில்லை.அரசுப்பள்ளிகளில் படிக்கும் அனைவரும் மோசமாகப் போய் விடுவதுமில்லை.சொல்லப் போனால் குழந்தைகளின் திறமை அவர்களின் உள்ளே இயல்பாகவே இருப்பது.அதனைத் தூண்டி விடுவது மட்டுமே ஆசிரியர்களின் வேலை.இறைவன் நமக்கு இந்தப் பிறவியில் இந்தப்பணியினை கொடுத்துள்ளது நாம் செய்த புண்ணியம்.

 — கடையிலும் கடைக்கோடியில் உள்ள பின் தங்கிய நிலையிலுள்ள குழந்தைகள் நம்மை நாடி வருகின்றன.நமது குழந்தையினை பள்ளியில் சேர்த்து விட்டு நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதனை நம்மை நாடி வரும் குழந்தைகளுக்கும் அளிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.இணைய தளத்துடன் நெட்வொர்க்கிங் செய்யப்பட்ட கணினி ஆய்வகம்,வார இறுதி நாட்களில் கராத்தே,யோகா,கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்,ஹிந்தி வகுப்புகள்,2000 குழந்தைகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம்,சதுரங்கப் பயிற்சி,கேரம் மற்றும் விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கிறோம்.தனியார் பள்ளிகளின் அடைவுத்திறனை விட ஒருபடி அதிகமாக இருக்க வேண்டுமென முடிவெடுத்து பயணிக்கின்றோம்.

அரசாங்கப் பள்ளிகளைப் பற்றியும் , ஆசிரியர்களைப் பற்றியும் முகநூல் நண்பர்கள் சிலரின் கருத்துகள் கீழே உள்ளது :

எனது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியர் தான் .அவர்கள் மாணவர்களை
எப்படியாவது பாஸ் செய்ய வைக்க வேண்டும் என்று மிகவும் முயற்சி
எடுக்கின்றார் .அதற்காக வலை பதிவில் இருந்து பல வினா மற்றும் பதில்களை பதிவிறக்கம் செய்து எங்களுடைய சொந்த செலவில் அவற்றை பிரதி எடுத்து பல நகல்கள் எடுத்து மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றோம் ,இதில் என்னுடைய பங்களிப்பும் கொடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் .ஆனால் மாணவர்கள் புரிந்து நடக்க வேண்டும் .இது போக காலை 8 மணிக்கே சென்று சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றார். ஆனால் ஒரு சிலர் தங்கள் பதிவில் அரசு ஆசிரியர்கள் எல்லாம் சும்மா சம்பளம் வாங்குவது போல் சித்தரிப்பது மனதுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது

நல் ஒழுக்கத்தையும் உயர்ந்த கல்விச் செல்வத்தையும் கற்றுத்தரும் திறமையான ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதில் பெருமிதம் கொள்வோம். அந்த வகையில் அரசுப் பள்ளின் தலைமை ஆசிரியர் திரு.செல்வகண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் இந்த மாதிரி ஆயிரம் ஆயிரம் செல்வக்கண்ணன்கள் உருவாக அரசுப் பள்ளிகளையும் நல்ல ஆசிரியர்களையும் மாநில அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசுப் பணி செய்பவர்கள் / தேர்தல் மூலம் அரசியல் பதவி(Councilor,MLA,MP) ஏற்பவர்களும், பணியில் இணைந்தவுடன் அல்லது தொடர்ந்து வரும் அடுத்த கல்வியாண்டில் , தங்கள் குழந்தைகளை அவரவர் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு கல்வி நிலையங்களில் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.இது ஒன்று போதும் . அப்புறம் பாருங்கள்,அரசு கல்வி நிலையங்களின் அசுர வளர்ச்சியை.யாரும் போராடவேண்டியது இல்லை.தானாகவே நடக்கும்.

பாலைவனச் சோலைகள் போல இத்தகைய அரசுத்துறை அமைப்புகள் கொஞ்சம் நம்பிக்கையையும், மற்ற எல்லா அமைப்புகளும் இப்படியே இருக்கக்கூடாதா என்ற ஏக்கத்தையும் ஒருசேரத்தருகின்றன.

எந்த நிலையிலும் ஆசிரியர்களை குறை சொல்வதையோ, கேவலமாக பேசுவதையோ ஏற்க முடியாது.இன்றைக்கு நாம் இத்தகைய நல்ல நிலைக்கு காரணம் இது போன்ற நல்ல ஆசிரியர்களின் உழைப்பும் ஆசியும் தான் !
அவர்கள் நமக்கு இன்னொரு பெற்றோர் போலத்தான் .வாழ்க ஆசிரியர் பணி
.

குரு என்பவர் தெய்வம் என்று கொண்டாடும் மண் நமது.இதேபோல் இன்னும் நிறைய அரசு பள்ளிகள் செயல்பட்டால்.கல்வியை வணிக மயமாகப் பார்க்கும் தனியார்ப் பள்ளிகளின் ஆளுமை குறையும்.

ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் ஊரான் வீட்டு பிள்ளைகளை தம் பிள்ளைகளாக நினைத்து, கவனித்து வருகின்றனர். ஆனால் பலர் கூடி அந்த ஒளியை மறைக்க முடியாது. அதையும் மீறி வெளிச்சம் சிற்சில இடங்களில் தெரிகிறது. அது இருளை விரட்டி பிரகாசிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

உண்மையில் அரசு பள்ளிகளில் அடித்தட்டு குழந்தைகளே பயிலுகின்றனர். அவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களின் பணி மிகவும் கடினமானதுதான். எனவே அவர்களுக்கு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின்படி ஊக்கத்தொகை அளிக்கலாம். உயர் கல்வியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சில சதவீதம் தனி ஒதுக்கீடு அளிக்கலாம்.

இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் மோசம், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் வாங்கும் ஊதியத்திற்கேற்ற வேலை செய்வதில்லை, அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களது பிள்ளைகளையே தனியார் கல்விக்கூடங்களில் தான் படிக்க வைக்கின்றார்கள், அரசுப்பள்ளியில் படித்தால் தாம் விரும்பும் உயர்நிலைப் படிப்புப் படிக்க முடியாது என்னும் மாயைகளை உடைத்தெரிந்திருக்கிறது இந்தப் பள்ளி.நீங்கள் கூறிய இந்த கரூர் பரமத்தி பாடசாலை எனது பிறந்த ஊர் சுற்றாடலில் (நம் இருவரது பிறந்த ஊர் சுற்றாடல் எனச் சொல்லலாம் – நமது ஊர்களிலிருந்து சுமார் 10 கி.மீட்டர்களுக்குள்) உள்ளது. எனது நெருங்கிய உறவினர்கள் பலரும் இந்தப் பரமத்திச் சுற்றுப்புறத்தில் வசிக்கின்றனர். இங்கு 10ம் வகுப்பு வரை படித்த எனது சின்னம்மா அவர்களின் பேத்திகளில் (எனக்கு மகள் முறை) ஒருவர் தனது உயர்கல்வியை முடித்து கணினித் துறையில் இன்று சென்னையில் ஒரு நிருவனத்தில் பணியில் உள்ளார். இன்னொரு பேத்தி இவ்வாண்டு தனது இறுதியாண்டு பொறியியல் பட்டப்படிப்பு முடிக்கப் போகிறார் என்பதும் மிகப்பெரிய மனமகிழ்விற்குரிய சான்றுகள். ஏன் இதே ஊருக்கு மிக அருகில் உள்ள தென்னிலை அரசுப் பள்ளியில் பயின்ற முனைவர். வா. செ. குழைந்தைசாமி (Dr. V.C. Kuzhandaisamy) அவர்கள்தான் அண்ணா பல்கலைக்கழக நெறிமுறைகளை உருவாக்கியவரென்பதும், அதன் முதல் துணைவேந்தராக 10 ஆண்டுகள் இருந்தவர், உலகின் சிறந்த நீர்மேலாண்மை அறிவியலாளர்களில் ஒருவர் என்பதும் நம் கண்முன் உள்ள சாட்சி. தனியார் பள்ளிக்கல்விதான் உயர்ந்தது என்னும் கானல் நீர் கருத்துக்களுக்கு இவையெல்லாம் மாற்றுச் சான்றுகள்.

 — இன்றைய தேதியில் குழந்தைகள் படிக்கும் பள்ளி என்பது பெற்றோர்களின் ஈகோவை மெய்ண்டெய்ன் செய்ய உதவும் ஒரு காரணியாகத்தான் இருக்கிறது. நாலு பேர் சந்தித்து கொள்ளும்போது என் பிள்ளை இந்த பள்ளியில் படிக்கிறான். , உங்கள் பிள்ளை ? என்று பெருமை அடித்து கொள்ள பிள்ளைகளின் பள்ளியின் பேக்ரௌண்ட் ரொம்பவே பயன்படுகிறது. பெரிய பெரிய பள்ளிகளில் படித்து ஒரு ஆணியும் உருப்படியாக பிடுங்காமல் திருமணம் ஆன பிறகும் கூட அப்பா அம்மாக்களின் தோளிலேயே சவாரி செய்யும் பல இளம் தலைமுறையினரை நான் பார்த்து இருக்கிறேன். அதே போல கிராமத்து மற்றும் நகர்ப்புறத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் கட்டணமின்றி படித்து நல்ல உயர்நிலையை எட்டி பிடித்த சாதனையாளர்களையும் நிறைய பார்த்து இருக்கிறேன். நான் சாதனையாளரா இல்லையா தெரியவில்லை. ஆனால் நானும் ஒண்ணாப்பு ரெண்டாப்புனு 12 வருட கல்வியையும் பணம் கட்டாத இலவச அரசு பள்ளியிலேயே தமிழ் வழியில் பயின்றவன். இன்று தொழிலில் பல மைல் கல்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகவே தொழிலில் வலம் வந்து கொண்டு இருக்கிறேன். நல்ல படிப்பு என்பது வெறும் பள்ளிக்கூடத்தின் பெயரால் மட்டுமே வந்து விடாது. மாணவனின் ஆர்வம், குழந்தையின் படிப்பின் மீதான பெற்றோரின் தனிப்பட்ட கவனம் இவை எல்லாம் போக தன் பிள்ளைகளை போல மாணவர்களை கருதி கண்டிப்பாக பாடத்தோடு எளிமை மற்றும் ஒழுக்கத்தையும் சேர்த்தே கற்பிக்கும் நம் நகரம் மற்றும் கிராமங்களில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இன்றைய தேதியில் நகரத்தில் பெரும் பேர் எடுத்த பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் சாதிப்பதை விட கிராமப்புற பள்ளிகளில் இருந்து வந்து சாதித்த அரசு பள்ளி மாணவர்களே அதிகம். உதாரணத்துக்கு சகாயம் IAS. பெரும் பேரெடுத்த பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்க்க விடிய விடிய வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கி லகரங்களை பில்டிங் ஃபன்ட் என்ற பெயரில் கொட்டி கொடுக்கும் பெற்றோர்களுக்கு அது ஒரு பெருமை.ஆனால் அந்த பெருமை போதுமா ? பிள்ளைகள் தொழிலும், சொந்த வாழ்க்கையிலும் ஜெயிக்க கற்க வேண்டிய பல விசயங்கள் இந்த பெரிய பள்ளிகளில் அரசு பள்ளிகளை போல கற்பிக்கப்படுவதே இல்லை. பல நகர் புற பள்ளிகளில் அரசு பள்ளிகளை போல குழந்தைகள் ஓடி விளையாட விளையாட்டு மைதானம் கூட கிடையாது. அப்புறம் எப்படி இந்த குழந்தைகளின் உடல் வலுப்பெறும். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புக்களை முழுமையாக அரசு சீராக்கும் பட்சத்தில், என்னை பொருத்த வரை மேலும் பல பல சாதனையாளர்கள் உருவாகுவார்கள் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

கருத்துக்கூறிய முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.தலைமை ஆசிரியர் திரு.செல்வக்கண்ணன் அவர்களுக்கும் , பரமத்தி அரசுப் பள்ளிக்கும் நம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.மீண்டும் சந்திப்போம்.

———- கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s