வெளிநாட்டுக் கனவுகளும் குடும்ப உறவுகளும்

Velinaadu Flightவெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை ஐ.டி. துறையில் இருக்கும் பெரும்பாலான நண்பர்களுக்கு இருக்கும் ஆசைகளில் ஒன்று.நான் மட்டும் அதில் விதிவிலக்கல்ல.திருமணத்திற்கு முன்பு என் ஆசை நிறைவேறாவிட்டாலும் திருமணத்திற்குப் பின்பு அந்த ஆசை நிறைவேறியது. மனைவி வந்த யோகம்தான் என்று சொல்பவர்களுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் அய்யா அவர்கள் ஹீரோவாக நடித்த இரண்டு திரைப்படங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும் என்பது செய்தி.அதை விட மிகப் பெரிய தண்டனை வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை.

நான் முதன் முதலில் லண்டன் சென்ற சமயம் முதல் மகன் பிறந்திருந்தான்.மனைவி , மக்களையெல்லாம் விட்டுவிட்டு நான் மட்டும் தனியாகவே சென்றிருந்தேன் அப்பொழுது.பல வருடச் சிறையில் இருந்து வெளியில் வந்த கைதிக்கு எப்படி இருக்குமோ மனநிலை அப்படித்தானே உங்களுக்கும் இருந்தது என்று நீங்களாகவே கேள்வியைக் கேட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.முதல் பயணம் ஓரளவு திருப்தியைக் கொடுத்தது என்றாலும் மீண்டும் லண்டனுக்கு இரண்டாவது முறையாக செல்ல வேண்டும் என்று நானே கேட்காமல் வந்த வாய்ப்பில் எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும் அலுவலகத்தில் அதை நிராகரிக்க முடியவில்லை.மீண்டும் லண்டன் பயணம்.முதல் முறை சென்றதைப் போல் தனியாகவே.வெளிநாட்டு மோகத்தால் இருந்த எனக்கு என்னுடைய முதல் பயணம் உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தது.காரணம் தனிமை.என்றும் நினைவில் வந்துகொண்டே இருந்தான் என் குட்டிச் செல்லம்.அப்பொழுதுதான் அவன் அப்பா , அம்மா என்று செல்லமாக அழைக்கத் துவங்கிய நாட்கள் அவை.

அந்த நாட்களில் அவனுடைய குறும்புத்தனங்களை ரசிக்க முடியவில்லையே என்பது வெளிநாடு சென்ற பின்புதான் புரிந்தது.அதுவொரு ஏக்கம்.பணத்தைத் தேடிச் சென்றால் இந்த மாதிரியான  ஏக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை என்ற சராசரி மனிதனாகவே என்னை நான் மாற்றிக்கொண்டேன்.வேறு வழியில்லை.ஒரு வழியாக முதல் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சில வாரங்களில் மீண்டும் இரண்டாவது பயணத்திற்கான அழைப்பு வந்தது.நாம்தான்(இந்த நாம் என்னைக் குறிக்கிறது) எங்கு சென்றாலும் நாம் செய்யும் வேலை மற்றவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும்படி செய்துவிட்டு வரமாட்டோமே.மிகவும் எளிதான வேலையாக இருந்தாலும் அதை நாம் மானே , தேனே பொன்மானே போட்டு வெள்ளைக்காரனுக்கு அந்த வேலையை மிகவும் சிரமமான வேலை என்று உணரும்படி செய்துவிடுவதோடு நிற்காமல் நம்மை விட்டால் அந்த வேலையை வேறு யாராலும் செய்ய முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே ஐ.டி. துறை மக்களுக்கு அளிக்கப்பட்டாத பயிற்சிகளில் ஒன்று.

அதன் காரணமாகவே நானும் என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணத்தில் கற்ற அனைத்து வித்தையையும் வெள்ளைக்கார அய்யனிடம் காட்டி விடவே என் மீது அவருக்கும் அதிக அன்பு ஏற்பட்டு அடுத்ததாக அந்த வெள்ளைக்கார அய்யன் ஆரம்பித்த ப்ராஜக்டில் கதிர்வேலரே வேலை செய்ய வேண்டும் என்று தனது அன்புக் கட்டளையைப் பிறப்பித்துவிட்டார்.

ஈரோட்டில் இருந்து பழனிக்கு செல்ல வேண்டும் என்றால் ஈரோட்டில் பஸ் பிடித்து காங்கேயம்/தாராபுரம் வழியாக செல்வதே நேர்வழி.ஆனால் , அப்படிப்பட்ட நேர்வழிகளை எல்லாம் இங்கே ஐ.டி. துறையில் எங்களுக்கு படியளக்கும் வெள்ளைக்கார துரையிடம் சொல்லிவிட்டால் சோலி சுத்தம்.அப்புறம் ஐந்து ஆண்டுகளுக்கான ப்ராஜெக்ட் இரண்டு ஆண்டுகளில் முடிந்துவிடும்.”இங்கே பாருங்க துரை , இங்கிருந்து பழனிக்குப் போகவேண்டும் என்றால் ஈரோட்டில் பஸ் பிடித்து முதலில் கோயமுத்தூர் செல்ல வேண்டும்.பிறகு அங்கிருந்து பஸ் பிடித்து பல்லடம் வர வேண்டும்.பிறகு அங்கிருந்து பஸ் பிடித்து உடுமலைப்பேட்டை செல்ல வேண்டும்.அங்கிருந்து பழனிக்கு டேரக்ட் பஸ் இருக்கிறது , அதைப் பிடித்தால் சீக்கிரம் பழனி சென்று விடலாம்” என்று சொல்லும் தைரியம் எவனுக்கு இருக்கிறதோ அவனுக்கே வெள்ளைக்கார துரை தன்னுடைய ப்ராஜக்டையும் தருவார்.பிறகு , ஐந்து ஆண்டுகள் நம் அட்டகாசம்தான்.நாம் பேசுவது அவருக்குப் புரியாமல் , அவர் பேசுவது நமக்குப் புரியாமல் ஒரு வழியாக அந்த பிராஜெக்ட் முடிவதற்குள் நமக்கு அந்த ப்ராஜெக்டைக் கொடுத்த துரை தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு கம்பேனிக்கு சென்றுவிடுவார் என்பது சிதம்பர ரகசியங்களில் ஒன்று.

நேரடி வழியைச் சொல்பவர்களால் அதை எளிதாக சொல்லிவிட முடியும்.குழப்ப முடியாது.கோயமுத்தூர் சென்று பழனி செல்ல வேண்டும் என்று சொல்பவன் பல விளக்கங்களைக் கொடுப்பான்.அந்த விளக்கங்களால் வெள்ளைக்கார அய்யனை கவர்ந்து விட முடியும்.இதுதான் எங்கள் வெற்றியின் சூட்சுமம்.வெளியில் சொல்லிவிடாதீர்கள்.நமக்குள் இருக்கட்டும்.இப்படிப்பட்ட குழப்பங்களை செய்த காரணத்தாலேயே எனக்கு அந்த இரண்டாவது வெளிநாட்டு வாய்ப்பும் கிடைத்தது.ஆனால் , முதல் முறை எனக்கிருந்த அந்த வெளிநாட்டு மோகம் இரண்டாவது பயணத்தில் இல்லை.அதன் காரணமாகவே நானும் உடனடியாக ஒப்புதல் கொடுக்கவில்லை.

முதல் பயணத்தில் குடும்பத்தை விட்டு வெகு தூரம் சென்று உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதால் இரண்டாவது பயணம் இனிக்கவில்லை.இருந்தாலும் நானே செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் என்னையே மீண்டும் லண்டனுக்குப் பயணிக்க வைத்தது எனக்கு விருப்பமே இல்லாமல் இருந்தும்.மீண்டும் அதே ப்ராஜக்ட்.அதே வெள்ளைக்கார அய்யன்.அதே இடம் , அதே வேலை.என் மனம் முழுவதும் இந்தியாவில் , நினைப்பெல்லாம் குடும்பத்தைப் பற்றியே.இருந்த போதிலும் வேலையில் எந்தவொரு குறையும் நான் வைக்கவில்லை.வாங்கும் சம்பளத்திற்கு கொஞ்சமாவது நம் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் , அதையே செய்தேன்.

இரண்டாவது முறை நான் லண்டன் சென்றது இரண்டு மாதத்திற்குத்தான் என்றாலும் என்னுடைய வேலை பிடித்துப்போக அடுத்த ஒன்றரை வருடத்திற்கு என்னுடைய கான்டிராக்டை நீட்டிக்கப் போவதாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் வெள்ளைக்கார அய்யன்.எப்படா இந்த இரண்டு மாதங்கள் முடியும் , நம் ஊருக்குச் செல்லலாம் என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த எனக்கு அதுவொரு இடிதான்.நல்லது நடக்க வேண்டுமென்றால் பொய் சொல்வதில் தவறில்லை என்பதால் ஒருவழியாக சில பொய்களைச் சொல்லி லண்டனில் இருந்து இரண்டாவது பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பினேன்.

அதற்காக வெளிநாடு செல்பவர்களைக் குறை சொல்லவோ , நான் செய்ததுதான் சரி என்றோ சொல்ல வரவில்லை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும்.வெளிநாட்டு ஆசையும் அப்படித்தான்.முடிந்தவரை பேச்சிலராக இருக்கும் காலங்களில் வெளிநாடு சென்று வந்து விடுவது நலம்.திருமணத்திற்குப் பின் செல்லவேண்டும் என்றால் தனியாக செல்வதில் நிச்சயம் எனக்கு உடன்பாடில்லை.பணத்திற்காக அன்பு , பாசம் சம்பந்தமான பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.இப்பொழுதும் கூட அப்படிப்பட்ட சில தருணங்களை இழக்கின்றேன் என்றாலும் வெளிநாடு சென்று இழக்கும் அளவிற்கு இல்லை என்பதால் சமாளித்துக்கொள்கின்றேன்.

பணத்தை நோக்கிய நம் தேடலில் உறவு ,அன்பு  சம்பந்தமான பல பொக்கிஷமான தருணங்களை நாம் இழக்கின்றோம்.அதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல.மீண்டும் சந்திப்போம்.

—– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3/

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to வெளிநாட்டுக் கனவுகளும் குடும்ப உறவுகளும்

  1. DD says:

    போகணும்னு கம்பனி சொன்னா , நாம மறுத்தா பிரச்சனையாயிடும்னு குடும்பஷ்தன் என்னைக்கு நேனைகிரத விடுரானோ தெரியல.. மறுத்தா டி போட்டாகூட பரவாயில்ல வேலைய விட்டு கூட தூக்கிடுராக இல்லே . ம்ம் குடும்பஸ்தன் பாவம்தான் குடும்பத்தை நெனைகிரவரைக்கும். நெனைகாதவங்க ஜாலியா அங்கயே பலியா கெடக்காக .. குடும்பம் போயிருமோன்னு பயந்து ஏதாவது காரனத்த சொல்லி கூடயே ஒட்டிகிட்டு வர்ற மனைவி மக்க பாவம்தான். ம்ம்ம் என்னத்த சொல்ல … நல்லா போயிகிடிருகிற குடும்பத்துல இப்படி குண்ட போடுராகளே …

    Liked by 1 person

    • அதுதாங்க DD ஐ.டி வாழ்க்கை.இங்கே எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை முதலில் நாம் புரிந்துகொண்டு கொஞ்சம் சேமிப்புடன் வாழ்வது சாலச்சிறந்ததுங்க.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s