நானும் என் ஆங்கிலனும்

2“வாட் ஈஸ் உவர் நேம்” என்று யாராவது கேட்டுவிட்டால் அவர் ஆங்கிலப் புலமை பெற்றவர் என்று நினைத்துக்கொண்டிருந்த பள்ளிப்பருவம் அது.படித்தது ஆங்கில மீடியம் என்றாலும் ஆங்கிலத்திற்கு நான் அடிமை ஆகவில்லை , ஆங்கிலம்தான் என்னிடம் அடிமை ஆகியிருந்தது என்று சொல்லலாம்.எப்படியாவது இவனுக்கு கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொடுத்துவிடலாம் என்று நினைத்த ஆங்கிலனுக்கு கடைசியில் பெருத்த ஏமாற்றம்தான்.என்ன செய்வது , நம்ம டிசீன் அப்படி.ஆக , ஆங்கிலத்தில் சிறுவயதில் இருந்தே என்னுடைய புலமை வியக்கத்தக்கதுதான்.

பள்ளிக்காலத்தில் ஒரு முறை ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த போது அதே “வாட் ஈஸ் உவர் நேம்” -ஐ ஒருவரிடம் கேட்டுவிட்டேன்.சுய விளம்பரம் தேவைப் பட்டதால் அப்படிச் செய்யும்படி ஆகிவிட்டது.”தொரை இன்னாமா இங்கிலீஷ் பேசுது பாரு” என்று நினைத்திருக்கக்கூடும் அந்த மனிதர்.நான் கேட்ட கேள்விக்கு என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு “சுந்தரேசன்” என்றார். “இந்தப் பெயரைச் சொல்வதற்கு எதுக்கய்யா என்னை மேலும் கீழுமாக நோட்டமிட்டாய்” என்று அப்போதைக்கு மனதில் எழுந்த என் கேள்விக்கு போகப் போக நானாகவே விடை கண்டுபிடித்துவிட்டேன்.நல்ல வேளை மனிதர் நோட்டமிட்டதோடு என்னை விட்டுவிட்டார் என்று பின்னாளில் மகிழ்ச்சி அடைந்தேன்.

பிள்ளையை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கும் பெற்றோரை வருத்தமடையச் செய்யக்கூடாது என்பதால் அவர்களுக்கு முன்னால் அவ்வப்போது ஏதாவது ஆங்கிலத்தில் பிதற்றுவதுண்டு.”அடேங்கப்பா , எம்பட மவன் என்னென்னமோ இங்கிலீசுல பேசுறாம்பாரு” என்ற மனநிலையை பெற்றோர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு காரணம் அவர்கள் அன்றைக்கு கஷ்டப்பட்டு , இஷ்டப்பட்டு என்னை  ஆங்கிலமீடியத்தில் படிக்க வைத்ததுதான். அதன் காரணமாகவே ஏதாவது செய்து அவர்களின் நன்மதிப்பை அவ்வப்போது பெற்றுவிடுவதுண்டு.

கல்லூரியிலும் இதே நிலைதான். ஆங்கிலத்தில் பேசினால் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கிவிடும் நண்பர்கள் கூட்டம் எத்துனை பேருக்கு கிடைக்கும் சொல்லுங்கள்.அந்த வகையில் நான் பாக்கியசாலி என்றே சொல்வேன்.நாமும் இங்கிலீசில் பேசக்கூடாது , பேசுறவனையும் நம்முடன்  சேர்த்துக்கொள்ளக்கூடாது என்பது பள்ளிக்காலங்களிலும் , கல்லூரிக்காலங்களிலும் ஒரு புரட்சிகரமான கொள்கையாகவே இருந்தது என்றால் நாங்கள் எவ்வளவு பெரிய புரட்சியாளர்கள் என்று நீங்களே யூகித்துக்கொள்ளலாம்.

சரி , எப்படியோ இஞ்சினியரிங் படிப்பை முடித்து பெரிய “இஞ்சினியர்” ஆகி பெங்களூரும் வந்தாகிவிட்டது. என் திறமையை நம்பி மச்சான் ஒருவர் வேலை வாங்கிவிடலாம் வாங்க மாப்ளே என்று உசுப்பேத்தி விட்டு கொடுமுடியில் இருந்து அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து பெங்களூரில் இறக்கிவிட்டுவிட்டார். “எப்படி என் மீது அவ்வளவு  நம்பிக்கை இருந்தது உங்களுக்கு” என்று இன்று  வரை நான் அவரை கேட்கவில்லை.

இங்கு வந்து இறங்கியதும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்.நமக்கு தமிழே தகராறு செய்யும் , இதில் எங்கே தெரியாத கன்னடம்  பேசுவது அப்பொழுது.ஆக இருந்த ஒரே தகவல் பரிமாற்ற மொழி ஆங்கிலம்தான்.எப்படியோ தத்தித் தடுமாறி “ஸ்போகன் இங்கிலிபீஸ்” வகுப்பெல்லாம் போகாமல் ஒரு வழியாக பேசும் அளவிற்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டு வேலையும் வாங்கியாகிவிட்டது.

இத்துனை இன்னல்களையும் சந்தித்துவிட்டு அப்பாடா என்று இருந்தால் இப்பொழுது இந்த சின்னப் பிள்ளைகள் என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டு அட்டகாசம் செய்கிறார்கள்.பெங்களூரில் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தையே ஆங்கிலம் பேசும் என்று சொல்லும் அளவிற்கு LKG/UKG படிக்கும் குழந்தை எல்லாம் ஆங்கிலத்தில் பட்டையைக் கிளப்புவார்கள்.அட பெங்களூர் என்னங்க இப்போ நம்ம ஊருலயே நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள் குழந்தைகள்.அவர்களை எல்லாம் இப்பொழுதும் என் நட்பு வட்டத்தில் வைத்துக்கொள்வதில்லை.ஏன் தேவை இல்லாமல் சென்று வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே அதற்கு காரணம்.

நாம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் அதிலிருந்து மறு கேள்வியை கண்டுபிடித்து விடுகிறார்கள்.அதுவும் ஆங்கிலம் சரளமாக நாவில் விளையாடுகிறது.நல்ல விசயம்தான்.நமக்கு அந்த சரளம் இல்லை என்பதற்காக இந்த குழந்தைகள் என்ன செய்யும்.சுட்டிக் குழந்தைகள்.

அன்றைக்கு அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன்.பைக்கை எடுக்கும்போது ஒரு குட்டி வால் பையன் என்னிடம் வந்து “அங்கிள் நீங்க எங்க வொர்க் பண்றீங்க” என்பதை ஆங்கிலத்தில் கேட்டான்.”நான் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யுறன்டா கண்ணு” என்பதை ஆங்கிலத்தில் சொன்னேன்.

“அப்படின்னா , நீங்க ஐ.டி. கம்பெனியில என்ன வேலை செய்றீங்க” என்றான் அடுத்த கேள்வியாக.

“அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா வரை யார் அடித்தாலும் வலிக்குதுன்னு சொல்லாம அடிய வாங்கிட்டு கொடுக்குற வேலைய செய்யணும்டா கண்ணு ” என்பதைத்தான் அவனுக்கு பதிலாக சொல்ல வேண்டும்.ஆனால் , இதை நான் எப்படி அவனிடம் சொல்லி புரியவைப்பது.அப்படியே இந்த பதிலை நான் சொன்னாலும் “எதுக்கு அங்கிள் உங்களை ஆப்பீசுல அடிப்பாங்க ” என்று அடுத்த கேள்வியை கேட்டுவிடுவான்.அதனால் நான் மாலையில் வந்து சொல்வதாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடவேண்டிய நிலை.

இப்படி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் நாம் தப்பிக்கலாம் , இந்த குட்டிச் சுட்டீசுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது சாதனைதான். அதிலும் இவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லவேண்டும் என்பது நம்ம டவுசரை நாமே கழட்டிக்கொண்டு ஓடுவதைப் போன்றதுதான்.

எது எப்படியோ , இந்த பெங்களூர் குட்டீசுகள் என் ஆங்கிலப் புலமையை அவ்வப்போது சோதித்துப்பார்த்து எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த சிங்கத்தை சீண்டி எழுப்பிவிட்டுவிடுகிறார்கள் உவர் ஆனர்.

———— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

7 Responses to நானும் என் ஆங்கிலனும்

 1. valanaadan says:

  நல்ல பதிவுகளாக உள்ளது கதிர்.
  அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை எதார்த்தமாக பதிகிறீர்கள் வாழ்த்துகள்.

  Liked by 1 person

 2. mathu says:

  டவுசர் கலடாமல் ஓடிவிட்டீர்…
  பதிவு அருமை அப்புறம் வாட்சப்பில் சுற்றும்…

  Liked by 1 person

 3. அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  Liked by 1 person

 4. அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  2015-04-15 18:53 GMT+05:30 ” நிதர்சனம்” :

  > Kathirvel Subramaniam posted: “”வாட் ஈஸ் உவர் நேம்” என்று யாராவது
  > கேட்டுவிட்டால் அவர் ஆங்கிலப் புலமை பெற்றவர் என்று நினைத்துக்கொண்டிருந்த
  > பள்ளிப்பருவம் அது.படித்தது ஆங்கில மீடியம் என்றாலும் ஆங்கிலத்திற்கு நான்
  > அடிமை ஆகவில்லை , ஆங்கிலம்தான் என்னிடம் அடிமை ஆகியிருந்தது என்று
  > சொல்லலாம்.எப”

  Liked by 1 person

 5. B Vijayalakshmi says:

  Super Kathir Sir. ரொம்ப காமெடியா இருக்கு.. நல்லா எழுதுறீங்க

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s