நான் பண்பானவன் அல்ல

1வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போதோ அல்லது சிக்னலில் நின்றுகொண்டிருக்கும்போதோ நம் வாகனத்திற்குப் பின்னால் வருபவர்கள்/நிற்பவர்கள் தேவையில்லாமல் ஹாரன் அடித்தால் நம்மை சீக்கிரம் செல்லச் சொல்கிறார்கள் என்று நினைத்து நமக்குக் கோபம் வரும்.”முன்னாடி போனாத்தானய்யா நான் போக முடியும்” என்று நினைத்துக்கொண்டு ஹாரன் அடித்த நபரை மனதிற்குள்ளேயே திட்டித் தீர்த்துவிடுவோம். சில சமயம் வாய்த் தகராறும் வருவதுண்டு.

அதுவும் பெங்களூரில் ஆட்டோக்காரன் மீதோ , கால் டாக்சிக்காரன் மீதோ , பைக் மீதோ மோதிவிட்டால் அவர்களிடம் சண்டைபோட கன்னடத்தில் சில பல கெட்ட வார்த்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.வெறுமனே நாம் கத்தினால் நமக்கு எந்தவொரு பெரிய மரியாதையும் நிச்சயம் கிடைக்காது என்பது என்னைப் போன்று இங்கே வசிக்கும் நம்மவர்களைக் கேட்டால் தெளிவாகச் சொல்வார்கள்.

நமக்குத் தமிழே அரைகுறை , இதில் எங்கு கன்னடத்தில் கெட்ட வார்த்தை கற்றுக்கொள்ள டியூசன் செல்வது.இருந்தாலும் ஆளைப் பார்த்தால் வெளியூர்க்காரன் என்று தெரிந்தால் அரை குறைக் கன்னடத்தில் நானும் பந்தாக்காட்டி மிரட்டிவிட்டுச் சென்று நானே என்னை வெற்றிபெற்றவனாக அறிவித்துக்கொள்வதுண்டு.வாயில்லாப் பூச்சியிடம்தானே நம் வேலையைக் காட்ட முடியும்.

சரி இப்பொழுது மேட்டருக்கு வருவோம்.என்றும் போல் நேற்றும் காலை அலுவலகம் சென்றுகொண்டிருக்கும்போது சிக்னல் ஒன்றில் நின்றுகொண்டிருக்கையில் எனக்குப் பின்னால் வந்தவர் இரண்டு மூன்று முறை ஹாரன் அடித்து என்னைப் பார்த்து கையைக் காட்டி ஏதோ சொன்னார்.அவர் கையசைத்தது கண்ணாடியில் தெரிய “ங்கொய்யால சிக்னல் போட்டிருக்கு ஹாரன் அடிச்சா எப்படிடா போறது” என்று அந்த நபரைத் திட்டிவிட வேண்டும் என்று நினைத்து பின்னால் திரும்பியவுடன் சிக்னல் பச்சைக்கு வந்துவிட்டது.பின்னால் நின்றுகொண்டிருந்த அந்த நபரும் என்னை நோக்கி வந்தார்.எனக்கு எரிச்சலும் கோபமும் எக்கச்சக்கமாகி விட்டது.

“சிக்கிட்டான்டா சிவனாண்டி இவன விடக்குடாது , நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டறணும்” என்று நினைத்துக்கொண்டு அந்த நபரைப் பார்த்து “என்ன” என்று கேட்டு தலையை அசைத்தேன். “பாஸ் , உங்க பேண்ட்டு பின்பாக்கெட்டுல சீப்பு கீழ விழப்போகுது கவனிக்கலையா” என்று சொன்னார் பாருங்க அப்படியே இரண்டு செருப்பையும் எடுத்து என்னை நானே அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.அதுதான் உண்மை. அதுவரை அவர் மேல் எரிச்சலாக இருந்த எனக்கு அவரின் பதிலைக் கேட்ட பிறகு என் மேலேயே எரிச்சல் அதிகமானது.

பாவம் மனிதர் , இரண்டு ரூபாய் சீப்பிற்காக ஹாரன் அடித்துச் சொல்ல வேண்டும் என்று என்ன இருக்கிறது.ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் சொன்னவரை சில விநாடிகளிலேயே என் பொறுமையற்ற புத்தி எப்படி தப்புக் கணக்குப் போட்டுவிட்டது என்று நினைத்து என்மேல் இன்னும் அந்த கோபம் அடங்கவில்லை.

இதுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையே.கொஞ்சம் கூட பொறுமையே கிடையாது.மற்றவர்களைப் பற்றி ஒரு முடிவெடுக்கும் முன் அவர் யார் , எப்படிப்பட்டவர் என்றெல்லாம் அதிகம் யோசிப்பதில்லை.நமக்குக் கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களை முற்றிலும் நமக்கு ஆகாதவர்கள் என்று நினைத்துக்கொண்டு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்துவிடுகின்றோம்.வாழ்க்கையில் நம்மோடு பயணிப்பவர்களில் இவரைப் போன்ற நிறைய நல்லுள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நமக்குத்தான் அவர்களை சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.”தாம் தூம்” என்று குதித்துவிடுகின்றோம்.

ஒரு சீப்பிற்காக என்னை அழைத்தவர் நிச்சயம் நல்ல பண்புள்ளவராகத்தான் இருக்க முடியும்.அவருடைய வயதும் கிட்டத்தட்ட என் வயதுதான் இருக்கும்.அங்கிருந்து கிளம்பும்போது அவரைத் தட்டிக்கொடுத்து என் நன்றியை மட்டும் சொல்லிவிட்டேன்.அவ்வளவுதன்.

இது நிச்சயம் எனக்கொரு சிறந்த பாடம் என்று மட்டும் அடித்துச் சொல்வேன்.நான் பண்பானவன் அல்ல என்று என் மனதிற்குள் நேற்று முதல் ஒரு குரல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இங்கே நான் மற்ற மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்கின்றேன்.

———— கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s