போய் வாருங்கள் ஐயா

1234

இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் இவருடைய போட்டோவைக் காட்டி இப்படியொரு மாபெரும் மனிதர் நம் நாட்டில் வாழ்ந்தார் என்று சொன்னால் நம்புவார்களா என்று தெரியவில்லை.அந்த அளவிற்கு அவருடைய தன்னலமற்ற வாழ்க்கை நம் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியக்குறியாகவே இருக்கிறது.எளிமை , பண்பு , நற்குணம் , மனிதநேயம் என்று இன்னும் நிறைய விஷயங்கள் இவரைப் பற்றிச் சொல்வதற்கு இருக்கிறது.ஒவ்வொன்றையும் பட்டியலிடக்கூட நமக்கு நேரமிருக்காது என்பதுதான் உண்மை.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று பெரும்பாலான அரசியல்வாதிகள் வெறும் பேச்சளவில் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கையில் வல்லரசாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இருந்து ஆலோசனைகள் வழங்கிய மகான்.கடைசிவரை கற்றுக்கொடுப்பதையும் , இளைஞர்களையும் நேசித்தவரின் கடைசி மூச்சும் கூட இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரிந்திரிக்கிறது.

விஞ்ஞானி , குடியரசுத் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி மனிதத்தைப் போற்றிய மாமனிதர் என்றால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இவரைத் தவிர வேறொருவரை உதாரணம் காட்ட முடியுமா என்பது தெரியவில்லை.

அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு கனவு நாயகன் மேல் அவ்வளவு பிரியம்.தான் அவரிடம் ஒரு நாள் பரிசு வாங்க வேண்டும் என்று தன் ஆசையை அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள்.”நீ நன்றாகப் படித்தால் நிச்சயம் ஒரு நாள் அவர் உனக்குப் பரிசு கொடுப்பார்” என்றிருக்கிறார் அவளுடைய தாய்.

“அம்மா , நான் நன்றாகப் படித்தால் அய்யாவிடம் இருந்து பரிசு வாங்கித் தருவதாகச் சொன்னீர்களே , இப்பொழுது ஏன் அவரை சாமி கிட்ட போக விட்டீங்க , உங்கள் மேல் எனக்கு கோபம்” என்று தன் அம்மாவிடம் கோபித்துக்கொள்கிறாள்.விபரம் அறியாப் பருவத்தில் இருக்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும். இப்படித்தான் பல குழந்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னும் பல குழந்தைகளின் கேள்வியும் இதைப் போன்ற கேள்விகள்தான்.அந்த அளவிற்கு பிஞ்சு உள்ளங்களில் ஆழமாகச் சென்றுவிட்டார் திரு.அப்துல் கலாம் ஐயா அவர்கள்.

அவரைப் பற்றி நன்கு தெரிந்த நாம் அவரை நேசிப்பதைவிட எதுவும் அறியாப் பருவத்தில் இருக்கும் இந்தப் பிஞ்சுகள் அவரை நேசிப்பதுதான் அவர் அன்பை அதிகம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதற்கு மிகச்சிறந்த சான்று.

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் வேறெதுவும் செய்யத் தேவையில்லை.அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற புத்தகங்களைப் படித்தும் , அவருடைய மேடைப் பேச்சைக் கேட்டும் வளர்ந்தாலே போதும் , அவர்களுக்கான முன்னேற்றத்தை நிச்சயம் தேடிக்கொள்ளலாம்.

நாம் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு நான்கு பேராவது நம் வாழ்க்கையைப் பற்றி நல்லவிதமாகப் பேசினாலே நம் பிறவிப் பயன் அடைந்துவிடும் என்றிருக்க ஒரு நாடே இந்த மனிதருக்காக இன்னும் அழுது கொண்டிருப்பது வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு சிலருக்கே கிடைக்கும் மரியாதை.

முகநூலில் எங்கு சென்றாலும் இவரே நாயகன். இவர் அல்லாத பதிவுகளைப் பார்த்தாலே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.எங்கும் நிறைந்திருக்கிறார்.

ஒரு குடும்பத்தை வழி நடத்திச் சென்ற பெரியவர் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்தால் எப்படிப்பட்ட துயரம் இருக்குமோ அதே அளவு துன்பம்தான் இன்றைக்கு அவரை இழந்து தவிக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கிறது.இந்த அளவிற்கு ஒரு நாடே மதித்த , அவர்களின் இதயத்தில் வைத்திருந்த ஒரு எளிமையான மாமனிதர் நூற்றாண்டிற்கு ஒரு மனிதர்தான் கிடைக்க வாய்ப்புண்டு.இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆயினும் இந்த தெய்வம் என்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

அவரால் நாட்டுக்குக் கிடைத்த நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.அதைவிட்டுவிட்டு அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி விமர்சிப்பது நாகரீகம் தெரிந்தவர்கள் செய்யும் காரியமல்ல.அவர் உயிரோடு இருக்கும்போது உங்களுடைய வீராவேசமான கேள்விகளை அவரிடமே கேட்டிருக்கலாமே சிங்கங்களே.ஒரு மாமனிதன் இறந்த பின்பு உங்கள் வீரத்தைக் காட்டி தயவுசெய்து அவரைக் கேவலப் படுத்த வேண்டாம்.

அவரிடம் இருந்து ஒரு பத்து சதவீகிதத்தை நாம் திருடிக்கொண்டாலே போதும் ,நாம் வாழ்ந்து முடிந்த பிறகு நம்மைச் சுற்றி இருப்பவர்களால் நிச்சயம் நாமும் பேசப்படுவோம்.

உங்களைப் போல் வாழ வேண்டும் என்று எங்களால் இன்னும் கனவு மட்டுமே காண முடிகிறது மாமனிதா.அந்தக் கனவில் சிறிதளவாவது சாத்தியமாகும் என்று நம்புகின்றோம்.என்றும் நீங்கள் எங்களுடன்.

அவருடைய பிறவிப் பயனை முழுவதும் அடைந்துவிட்டுத்தான் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.நாம் அவருக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைப்போம்.

இந்த பூமி உள்ளவரை நீங்கள் எங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் திரு.அப்துல் கலாம் ஐயா. நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களோடு நாங்களும் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்.

தங்களது ஆத்மா சாந்தியடையட்டும் எங்கள் தெய்வமே.

———– கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s