ஞாபக மறதி அதிகமாயிடுச்சுங்க

123இப்பொழுதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகிவிட்டது.”தர்மத்தின் தலைவன்” ரஜினியின் நிலையைப் போல் வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கின்றேன்.என்ன காரணம் என்று தெரியவில்லை. பணிச்சுமை காரணமா அல்லது நாம் உண்ணும் காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லிகள் காரணமா அல்லது தூக்கமின்மை காரணமா என்று ஒண்ணுமே புரியவில்லை.நான் கும்பகர்ணனின் ரசிகன் என்பதால் தூக்கமின்மை என்றும் சொல்வதற்கில்லை.ஆனால் , பள்ளிப்பருவத்திலும் , கல்லூரிப் பருவத்திலும் இருந்த அளவிற்கு இப்பொழுது மூளை வேலை செய்வதாகத் தெரியவில்லை.

நேற்று காலை அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டு பைக்கை எடுக்கும் முன் கொஞ்சம் துடைத்துவிட்டு எடுக்கலாமே என்ற ஆசையில் அந்த வேலையைச் செய்தேன்.இப்படியாக எனக்கே ஒரு குஷியும் ஆசையும் வரும்போது பைக்கைத் துடைத்தால்தான் உண்டு.இல்லையென்றால் வருண பகவான் புண்ணியத்தால் பைக்கிற்கு வாட்டர் வாஷ் கிடைப்பதோடு சரி.

எனக்கு முன்பே மனைவி அலுவலகம் சென்றுவிடுவார் என்பதால் அவரும் சில வேலைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார்.அதையும் செய்துவிட்டுத்தான் வந்திருந்தேன்.அவை என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன்பே நானே சொல்லிவிடுகின்றேன்.

“ஏனுங்க , நீங்க வீட்ட பூட்டுறதுக்கு முன்னாடி அடுப்புல இருக்குற சாம்பார நீங்க சாப்ட்டதுக்கு அப்புறமா எடுத்து ப்ரிட்ஜுல வெச்சுருங்க , ஜன்னல எல்லா சாத்திட்டு போயிருங்க , பேன் லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு போயிருங்க” என்று முக்கிய பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருந்தார்.அவர் கொடுத்த வேலைகள் அனைத்தும் தினமும் கொடுப்பதுதான் என்றாலும் அதை தினமும் ஒப்புவிப்பதைப் போல் சொல்லிவிட்டுத்தான் செல்வார்.

காரணம் இந்த வேலைகளை எதுவும் நான் ஒருநாளும் உருப்படியாகச் செய்ததில்லை என்பதே.ஆதலால் தினமும் கஷ்டப்பட்டு அவை அனைத்தையும் ஞாபகம் வைத்து இப்பொழுதெல்லாம் செய்துவிடுவதோடு இல்லாமல் மனைவியிடம் அவர் கொடுத்த வேலைகளைச் செய்து முடிப்பதால் அவரிடம் நல்ல பெயரும் கிடைத்துவிட்டது.

சரி , இப்பொழுது பைக் துடைப்பதற்கு வருவோம். மேலே குறிப்பிட்ட அனைத்து வீட்டு வேலைகளையும் செவ்வனே செய்துவிட்டு வீட்டைப்  பூட்டிவிட்டு , அலுவலக லேப்டாப்பையும் சாப்பாட்டு டப்பாவையும் எடுத்து அலுவலகப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு கீழே பைக் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்துதான் இப்பொழுது துடைத்துக்கொண்டிருக்கின்றேன்.

கையில் எடுத்து வந்த பையை வைத்துக்கொண்டே துடைக்க முடியாது இல்லையா ? அதனால் அந்தப் பையை கீழே வைத்துவிட்டு பைக்கைத் துடைத்தேன்.இரண்டு நிமிடங்களில் மாதவன் செல்வதற்கு பைக் பளிச்சென்று ரெடியாகிவிட்டது.யார் அந்த மாதவன் என்ற கேள்வி உங்களிடம் இருக்காது என்று நம்புகின்றேன்.சரி , விஷயத்திற்கு வருவோம்.

இப்பொழுது பைக்கைத் துடைத்து அலுவலகம் கிளம்ப ரெடி.பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டேன்.மாதவன் கெட்டப்பில் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பைக்கில் சென்றுகொண்டிருக்கின்றேன். நாகரீகம் கருதி “அது என்னப்பா இயற்கைக் காட்சி” என்றும் நீங்கள் என்னைக் கேட்க மாட்டீர்கள் என்றும் நான் நம்புகின்றேன்.

இரண்டு கிலோமீட்டர் சென்றதற்குப் பிறகுதான் மாதவனுக்கு நடுமண்டையில் லைட் எரிந்து லேப்டாப் மற்றும் சாப்பாட்டு டப்பா இருக்கும் பையை மறந்து பைக்கை நிறுத்தியிருந்த இடத்திலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.அப்பொழுது கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் இரண்டு சிக்னல்களைத் தாண்டியிருந்தேன்.பையை எடுக்க மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என்றால் குறைந்தது 15-20 நிமிடங்கள் ஆகும்.

அதுகூடப் பரவாய் இல்லை.நான் திரும்பிச் செல்லும்வரை அந்தப் பை அங்கேயே இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.அதுதான் என் பயமே.நகரத்தில் எவனையும் நம்புவதற்கில்லை.நொடிகளில் பொருள் காணாமல் போய்விடும். இப்பொழுதெல்லாம் பெங்களூரில் திருட்டுச் சம்பவங்கள் முன்பை விட அதிகமாகிவிட்டது.அப்படியிருக்க நானே “இந்தாடா கண்ணு வந்து எடுத்துட்டுப் போ” என்று சொல்வதைப் போல் செய்துவிட்டு வந்தால் பொருள் இருக்குமா என்ன ? அது பதட்டத்தை இன்னும் அதிகமாக்கியது.

20 நிமிடம் ஆகியிருந்ததால் என் பை இருக்குமா என்ற சந்தேகமும் பதட்டமும் வந்துவிட்டது.பையில் இருக்கும் லேப்டாப் நம்முடையதாக இருந்தாலே பதறுவோம் , லேப்டாப் அலுவலகத்தில் கொடுத்தது. தொலைத்துவிட்டால் மாதச் சம்பளம் காலி.சோத்துக்கு டண்டனக்காதான்.அதோடு அதில் கம்பெனி சம்பந்தப்பட்ட தகவல்கள் இருப்பதால் பத்திரமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் என்னுடையதே.இதையெல்லாம் நினைத்துக்கொண்டும் , குல தெய்வ சாமியை வேண்டிக்கொண்டும் மாதவன் வேஷத்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு பைக்கில் பறந்தேன்.

வரும் வழியில் ஒரு ஆட்டோக்காரனுக்கும் பைக்காரனுக்கும்  சண்டை வேறு.எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு பறந்து வந்து எங்கள் குடியிருப்பை அடைந்தேன். குல தெய்வக் கடவுளான எங்கப்பன் முத்துச்சாமி என்னைக் காப்பாற்றியிருந்தான்.அதிசயத்திலும் அதிசயம் அது.30 நிமிடங்களுக்கும் மேல் என்னுடைய லேப்டாப் மற்றும் சாப்பாட்டு டப்பா இருந்த அந்தப் பையை யாரும் எடுக்கவில்லை.வைத்த இடத்திலேயே இருந்தது.நம்மைச் சுற்றியும் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்களடா கதிர்வேலா என்று நினைத்துக்கொண்டு என்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு மீண்டும் அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

இதற்கு முன்பு ஒருமுறை பேங்க்கிற்குச் சென்றுவிட்டு கிளம்பும்போது ஞாபக மறதியால் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு வந்த கதையெல்லாம் நடந்திருக்கிறது.இப்பொழுது இந்தச் சம்பவம் வேறு.

இதை இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இன்றைக்கு என்னைப் போல் நிறையப் பேருக்கு இந்த ஞாபக மறதி அதிகமாகிவிட்டது.இயந்திரத் தனமான வாழ்க்கையில் முக்கியமான பல விஷயங்களை நாம் மறந்துவிடுகின்றோம்.நம் கவனமும் பலவற்றில் சிதறிக் கிடக்கிறது.மனதும் ஒரு நிலையில் இல்லை.பலவற்றையும் போட்டு குழப்பிக்கொண்டிருக்கின்றோம்.

எதையெதையோ நினைத்துக்கொண்டு வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.குழப்பமில்லாமல் மனதை ஒரு நிலைப்படுத்த யோகா போன்ற பயிற்சிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது என்றே நினைக்கின்றேன். செய்தால் நல்லதே.

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் மன உளைச்சல் அதிகம் இருக்கும் ஐ.டி. துறை போன்ற துறைகளில் வேலை செய்யும் பலருக்கும் இந்த ஞாபக மறதி பொதுவானதாக மாறிவிட்டது.நாம் உண்ணும் காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சிக்கொல்லிகள் காரணமாக இருக்குமோ என்றும் நினைக்கத் தோனுகிறது.

என்னுடைய ஞாபக மறதியால் இதுவரை எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பது என் பெற்றோர்கள் செய்த புண்ணியமாக இருக்கலாம்.ஆனால் எப்பொழுதும் அப்படியே இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்க முடியாது.இப்பொழுது கொஞ்சம் எனக்கும் பயம் வந்துவிட்டது. மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

குழப்பத்தில் இருக்கும்போது , சரியான ஓய்வு இல்லாமல் இருக்கும்போதோ, வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றாலோ வாகனம் ஓட்டுவது ஆபத்துதான்.அந்த நேரத்தில் யோசித்து முடிவெடுப்பவர்கள் புத்திசாலிகள்.நம் வாழ்க்கை நம் கையில்.   மீண்டும் சந்திப்போம்.

————– கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s