நாங்களும் அரசியலில் குதிக்கப்போகிறோம்

IMG_5486நக்கீரன் , விகடன் , குமுதம் என்று பலவற்றையும் படித்து அரசியல் ஆர்வம் எட்டாம் வகுப்பிலேயே பட்டையைக் கிளப்பிக்கொண்டு வந்துவிட்டது.எட்டாம் வகுப்பிலேயே எங்களுக்கு சமூக அக்கறை எப்படி இருந்தது என்று நீங்களே சிரிக்காமல் யூகித்துக்கொள்ளுங்கள்.பட்டையைக் கிளப்பிக் கொண்டு வந்த அரசியல் ஆர்வம் வயலில் இறங்கி வேலை செய்வதைப் போல களத்தில் இறங்கி வேலை செய்யும் அளவிற்குச் சென்றது.

பிரச்சாரத்திற்குச் செல்வது , அன்றைக்கு என் அபிமான கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது என்று தீவிரமாகச் சென்றுகொண்டிருந்த காலத்தில் அப்பாவால் அரசியலுக்கு அந்த வயதில் முற்றுப் புள்ளியும் வைத்தாக வேண்டிய கட்டாயம் வந்தது.

உறுப்பினர் சேர்க்கும் வேலை முடிந்து இரவு 8:30 மணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் எனக்காகக் காத்திருந்த என்னைப் பெற்ற தெய்வம் பாசத்துடன் வரவேற்றார்.

“வாப்பா வா வா , அதுக்குள்ள சீக்கிரமா வந்துட்டியே” என்று கோபத்தின் உச்சிக்குச் சென்றவர் வரவேற்றார்.

“அப்பா , இன்னைக்கு கட்சிக்கு  உறுப்பினர்  சேக்கறதுக்கு கொஞ்சம் எழுதுற வேல இருந்தது , அதா கொஞ்சோ லேட் ஆயிருச்சு” – இது அடியேன் பதில்.

“இங்க நாங்க ரண்டுவேருமு காடு மேடெல்லாந் திரிஞ்சு , கடன ஒடன வாங்கி கஷ்டப்பட்டு உனக்கு பீஸ் கட்டி படிக்க வெச்சா , அரசியலுக்கு போறீங்களா , ஒழுங்கா  படிக்கிற வேலையப் பாரு , இனிமேலு அரசியலு அது இதுன்னு போனீன்னு வெச்சுக்க அப்பறந் தெரியி” என்று மட்டும்தான் சொன்னார்.அதோடு முடிந்தது பள்ளிப்பருவத்து அரசியல் ஈடுபாடு.

அன்றோடு நேரடி அரசியல் வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் யாரேனும் பிரச்சாரத்திற்கு வந்தால் பார்க்கச் செல்வதோடு சரி.இருந்தாலும் அரசியல் சம்பந்தமான புத்தகங்களை தவறாமல் படிப்பதுண்டு.இப்படியாக இந்த நாட்டிற்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அற்புதமான அரசியல் மாமேதையை இந்த நாடு இன்று வரை இழந்துவிட்டது என்பதும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குக் கிடைத்திருக்க வேண்டிய தன்னலமற்ற M.L.A ஒருவர் கிடைக்காமால் போனதற்கும் எனக்கும்கூட வருத்தம்தான்.சரி , இனி சிரிக்காமல் மீதியையும் படித்துவிடுங்கள்.

அந்த வயதில் அரசியல் தேவையற்றதுதான் என்பது பின்னாளில் தெரிந்துவிட்டது. அப்பொழுது அப்பா சரியாக கண்டிக்காமல் விட்டிருந்தால் நிச்சயம் படிப்பும் கெட்டிருக்கும். இப்பொழுது நினைத்தாலும் அப்பாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கத் தோனுகிறது.

இருந்தாலும் அரசியல் மேல் உள்ள அந்த கிரேஸ் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை.கிரேஸ் இருந்து என்ன செய்வது. கல்யாணம் காச்சியெல்லாம் முடிந்து குழந்தை குட்டி என்று வந்த பிறகு நம்மை அரசியலுக்கு விடுவார்களா என்ன.அதற்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பில்லை.சரி இன்றைக்கு இல்லை என்றால் என்ன , என்றைக்காவது ஒரு நாள் வார்டு மெம்பராகவாவது ஆகிவிடலாம் என்று ஜோதிடம் சொல்கிறது.

அதனால் விட்டுப் போன அந்த அரசியல் ஆர்வம்  வெறித்தனமாக மீண்டும் வந்துவிட்டது.எப்படி இருந்தாலும் அதிக பட்சம் இன்னும்  8-10 பத்து வருடங்களுக்கு மேல் ஐ.டி. துறையில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் ஒரு 8 வருடங்களுக்குப் பிறகு மக்கள் சேவை செய்யலாம் என்று ரூம் போட்டு யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.யோசித்தால் மட்டும் போதுமா ஒரு அரசியல் வாதி கெட்டப் வேண்டாமா.

கோயமுத்தூர் சென்று ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்சிலும் , கணபதி சில்க்சிலும் ஆறு ஜோடி வெள்ளை வேட்டி சட்டை வாங்கி வந்து ஒரு ஜோடிக்கு ஐம்பது ரூவாய் கொடுத்து சலவை செய்து விஷேஷங்களுக்கு இப்பொழுதெல்லாம் வெள்ளை உடையில் செல்வதுதான் வழக்கம். அதிலும் மினிஸ்டர் காட்டன்தான் வேண்டும் என்று கெத்தாக கேட்டு வாங்கி வந்தேன்.. பின்னாளில் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் இப்பொழுதிருந்தே பந்தா காட்ட வேண்டுமல்லவா. அதான்.

என்ன ஒன்று , இந்த வெள்ளை உடையுடன் கிளம்பி வெளியில் வந்தால் வீட்டில் இருக்கும் மக்கள் “நெனப்புத்தான் பொழப்பக் கெடுக்குதாம்” என்பதைப் போல் ஏளனமாகப் பார்க்கிறார்கள்.ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்த்தால் அரசியல் பண்ண முடியாது என்று அரசியலில் இருக்கும் என் மாப்பிள்ளை ஒருவர் அறிவுரை சொல்லிவிட்டதால் இந்த மாதிரியான அவமானங்களை கண்டு கொள்வதில்லை.இதுதான் அரசியலில் ஜெயிப்பதற்கு முதல் தகுதி என்றும் சொல்கிறார் மாப்பிள்ளை.

“செவிடன் காதில் சங்கு ஊதினா எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் , அப்பொழுதுதான் அரசியலில் ஜெயிக்க முடியும்” என்றும் அறிவுரை.

மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் முதலில் பெண்களை டார்கெட் செய்ய வேண்டும்.அதிலும் முதியவர்கள் என்றால் பெஸ்ட்.ஊருக்குச் செல்லும்போதோ , ஏதாவது விசேஷங்களுக்குச் செல்லும்போது தேடித் தேடிச் சென்று வயதான பெண்களாகப் பார்த்துப் பேச வேண்டும்.

“அட நம்ம சுப்பரமணி பையனப் பாரு , ரம்ப தங்கமான பைய்யனப்போ” என்று நிச்சயம் எப்படியும் நமக்கு வெளியில் மார்க்கெட்டிங் செய்து விடுவார்கள்.அது நடந்துவிட்டாலே போதும் , மக்கள் மனதில் முக்கால்வாசி  இடம் பிடித்துவிடலாம். வயதான பெண்கள் என்றில்லை , மொத்தமாக தாய்க்குலங்களின் மனதைப் பிடித்துவிட்டால் போதும் , அரசியலில் வெற்றிதான்.

ஆக , இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அறிமுகமாகி அவர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால் எப்படியும் வார்டு மெம்பராக ஆகிவிடலாம். அதிலிருந்து மேலே வருவது நம் திறமைதான்.

ஆனால் ஒன்று.நம் செய்கைகளைக் கண்டு “இவன் என்னடா கோமாளி மாதிரி திரியுறானே” என்று மக்கள் நினைத்துவிட்டால் சோலி சுத்தம்.

இப்படி எத்துனையோ படிகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் எட்டு வருடத்திற்குப் பிறகான அரசியல் பிரவேஷத்திற்கு இப்பொழுதிருந்தே அடித்தளம் அமைக்கத் திட்டம் தீட்டி விட்டேன்.அதன் முதல் படிதான் இந்த வெள்ளை உடைப் பிரவேஷம்.

எனக்காக இல்லை என்றாலும் எம்மக்களுக்காகவாவது அரசியலில் குதித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் எந்த தீய சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

படிக்க வேண்டிய வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்று மட்டும் சொல்லிக்கொண்டு விடைபெறுகின்றேன். மீண்டும் சந்திப்போம்.

———— கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s