வாஷ் பேசின் டமார்

45நேற்றைய தினம்…

காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்.பத்து மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங்.கடமை , கண்ணியம் , கட்டுப்பாட்டிற்கு புகழ் பெற்ற ஆப்பீசரான நான் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள வில்லை என்றால் கம்பேனிக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுவிடும். அதனால் காலை நேரமாக எழுந்து சுத்தவத்தமாக குளித்துவிட்டு எப்பொழுதும் கிளம்புவதை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய அன்டராயர் போனில் அலாரம் வைத்துவிட்டு முந்தைய நாள் உறங்கினேன்.

என்றைக்கும் சரியான நேரத்திற்கு அடித்து எழுப்பிவிடும் கிராதக அலாரன் நேற்றைக்கு சதி செய்துவிட்டான்.என்ன காரணம் என்று தெரியவில்லை , தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று அன்டராயர் வல்லுனர்கள் சொல்கிறார்கள் .நேரம் ஆகியும் மணி அடிக்காததால் அடியேன் 7:45 வரை உறங்கிக்கொண்டிருந்து திடீரென்று எழுந்து பார்த்தால் மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.நடைப் பயிற்சியும் ரத்து.அதோடு அடுத்த முக்கால் மணி நேரத்தில் அலுவலகம் கிளம்பியாக வேண்டும்.

எழுந்தவுடன் மனைவியிடம் “ஏம்மா எழுப்பி விட்டிருக்கலாமில்ல” என்று கேட்டால் “நீங்க எட்டு மணி வரை அலாரம் வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்” என்று சொல்லி அவர் தன் கடமையை செவ்வனே செய்துவிட்டு சமையலைக் கவனித்தார்.எனக்கிருப்பது 45 நிமிடங்கள்.இந்த 45 நிமிடத்திற்குள் குளிக்க வேண்டும் , சாமி கும்பிட வேண்டும் , சாப்பிட வேண்டும் , இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக முகநூலில் ஒரு பதிவு போட வேண்டும் என்று அனைத்தையும் முடித்தாக வேண்டும்.

அவசர அவசரமாகக் கிளம்ப ஆரம்பித்தேன்.குளிக்கத் தயாரான போதுதான் காத்திருந்தது அந்த விரையச் செலவு.குளிக்கும் முன்பு பாத் ரூமில் எப்பொழுதும் சோப்பு வைக்கும் இடத்தில் சோப்பைக் காணவில்லையே என்று அங்கும் இங்கும் நோட்டமிட்டால் எங்கும் இல்லை.முந்தைய நாள் மனைவியார் ஜன்னலுக்கு மேல் இருக்கும் ஒரு பலகையில் மகனுடைய சோப்பு டப்பாவை வைக்கும் போது என்னுடைய சோப்பு டப்பாவை தெரியாமல் உள்ளே தள்ளிவிட்டார். அதனால் பலகையின் உள்ளே சென்றுவிட்ட என்னுடைய சோப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஜன்னலைப் பிடித்து மேலே ஏறினால் மட்டுமே சோப்பு இருக்கும் இடம் தெரியும்.பிறகு கையை நீட்டி எடுத்துவிடலாம். நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது.எனக்கோ அவசரம்.ஜன்னலின் கம்பியைப் பிடித்து ஏறி மேலே எட்டிப் பார்ப்போம் என்று முடிவு செய்தாகிவிட்டது.ஜன்னலுக்குக் கீழ் வாஷ் பேசின். ஜன்னலின் கம்பியைப் பிடித்து மேலே ஏறி எட்டிப் பார்த்தால் சோப்பு டப்பா உள்ளே சென்று பலகையின் ஒரு மூலையில் கிடந்தது.ஒரு வழியாக அவசர அவசரமாக அதை எடுத்துக்கொண்டு ஜன்னலில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி வாஷ் பேசின் மீது பட்டு “படார்” என்று ஒரு பெரிய சத்தம்.

அடுத்த ஒரு சில வினாடிகளில் வாஷ் பேசின் டமார். சுக்கு நூறாக உடைந்து சிதறிவிட்டது.”வச்சுட்டான்டா இன்னக்கி ஆப்பு” என்று நினைத்துக்கொண்டே வேறு எதுவும் செய்ய முடியாமல் குளித்து முடித்துவிட்டு பாத் ரூமில் இருந்து வெளியில் வந்து ஒரு விதமான பயத்தோடு சம்பவத்தை மனைவியாரிடம் விளக்கினேன்.

“உங்களுக்கெல்லாம் என்றைக்குத்தான் பொறுப்பு வரப்போவுதோ தெரியல , காலங்காத்தால ஒரு தண்டச் செலவா” என்று அவருடைய மொழியில் என்னை புகழ்ந்து தள்ளிவிட்டார். இதுபோன்ற புகழ்ச்சி எல்லாம் பழகிப் போய்விட்டதால் என்னிடம் பெரிய ரியாக்சன் எதுவும் இல்லை.எப்பொழுதும் போல் பேசாமல் நல்ல பிள்ளைபோல் முகத்தை வைத்துக்கொண்டது மட்டும் நடந்தது.

ஹவுஸ் ஓனர் சொந்தக்காரர்தான்.மாமா முறை. என்னதான் மாமா முறை என்றாலும் நான் உடைத்த பொருளுக்கு அவருக்கு அல்வா கொடுக்க முடியாது என்பதால் புது வாஷ் பேசின் மாற்றும் செலவை நான்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.எப்படியும் இரண்டாயிரத்தைத் தாண்டிவிடும் என்பது என் யூகம்.ஓரிரு நாட்களில் மாற்றிவிடுவார்கள்.தண்டத்தை நான் கட்டியாக வேண்டும்.

சரி இப்படியெல்லாம் போராடி ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு சரியாக 9:45 க்கு அலுவலகம் சென்றுவிட்டேன்.அடுத்த 15 நிமிடத்தில் மீட்டிங் ஆரம்பிக்க வேண்டும்.9:55 க்கு அந்த மீட்டிங்கை மாலை ஐந்து மணிக்கு மாற்றிவிட்டதாக மேனேஜரிடம் இருந்து ஒரு ஈமெயில் வருகிறது. ஆக பத்து மணிக்கு நடக்க வேண்டிய மீட்டிங்கும் நடக்கவில்லை.ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகம் வந்தும் ஒரு பைசா பிரயோஜனம் இல்லை.மாறாக அவசரத்தில் கிளம்பியதில் மேலே குறிப்பிட்ட தண்டச் செலவுதான் பரிசாக கிடைத்தது.

இதில் யாரைக் குற்றம் சொல்வது.தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சரியான நேரத்தில் என்னை எழுப்பி விடாத என்னுடைய அன்டராயர் போனையா , இல்லை அவசர அவசரமாக கிளம்பி இழப்பை ஏற்படுத்திய என்னையா , இல்லை பொதுவாக 11 மணிக்கு அலுவலகம் செல்லும் என்னை பத்து மணிக்கு மீட்டிங் வைத்து வரவைத்து கடைசி நேரத்தில் அதைக் கேன்சல் செய்த என் மேனேஜரையா.

யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்.தண்டச் செலவு வந்துவிட்டது.செலவு செய்துதான் ஆக வேண்டும்.ஆனால் , நான் சற்று நிதானமாக இருந்திருக்கலாமோ என்று மட்டும் என் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.எனக்கு இதுவொரு நல்ல பாடம் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்க்கை இப்படி தினமும் நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. எந்த வேலை செய்தாலும் அவசரம் இல்லாமல் கொஞ்சம் நிதானமாகச் செய்ய வேண்டும் என்பது இந்த இழப்பு கற்றுக்கொடுத்த பாடம்.

சில நேரங்களில் இப்படி பணத்தை விரையம் செய்து பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன செய்வது , வேறு வழியில்லை.

——– கதிர்  @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to வாஷ் பேசின் டமார்

  1. Aru says:

    சுப விரயம்னு சொல்வாங்க….அதுபோல..

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s