நானும் விவசாயி மகன்தான்

31998-99.அப்பொழுதுதான் கல்லூரி சேர்ந்த காலம்.அப்பா அப்பொழுது வயலில் மரவள்ளிக் கிழங்கு (குச்சிக் கிழங்கு) பயிரிட்டு அதை அறுவடை செய்யும் தறுவாயில் இருந்தார்.அறுவடை செய்வதற்கு ஒரு வாரம் முன்பு வரை ஒரு டன் 3000 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது.அப்பொழுது அறுவடை செய்ய முடியாது என்பதால் ஒரு வாரம் கழித்து செய்துகொள்ள முடிவு செய்திருந்தார் அப்பா.அதுவரை விடுமுறை நாட்களில் அப்பாவுக்கு ஓரளவு விவசாயத்தில் உதவிக்கொண்டிருந்ததால் விவசாயத்தில் ஒரு பத்து சதவீகிதத்தையாவது என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது.

ஒரு வாரம் கழித்து அறுவடை செய்யத் தயாராக இருந்த நிலையில்தான் அந்த இடி விழுந்தது.உற்பத்தி அதிகம் என்ற காரணத்தால் 3000 ரூபாயில் இருந்து வெறும் 500 ரூபாய்க்கு வந்து விட்டது ஒரு டன்னின் விலை.3000-க்கும் மேல் இன்னும் கூடுதல் விலை கிடைக்கும் என்றெல்லாம் அப்பா ஒரு வாரம் அறுவடை செய்யாமல் வைத்திருக்கவில்லை.கணக்குப்படி ஒரு வாரம் கழித்துத்தான் அறுவடை செய்ய வேண்டும் என்பதால் அப்படியே செய்தார்.

மற்ற பொருளைப் போல் மரவள்ளிக் கிழங்கை நாள் கணக்கில் வைத்திருக்க முடியாது என்பதால் அதே 500 ரூபாய்க்கே விற்க வேண்டிய நிலை.ஏகப்பட்ட நஷ்டம்.இப்படி விவசாயம் செய்து உற்பத்தி செய்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் அப்பாவுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம்.கடைசியாக முட்டி மோதி போராடித்தான் என்னைப் படிக்க வைத்தார்.

இந்த நிலை என் அப்பா ஒருவருக்கு மட்டுமில்லை.கிட்டத்தட்ட அனைத்து விவசாயியின் நிலையும் இதுதான்.அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைதான் தொடர்கிறது.நஷ்டமே ஏற்பட்டாலும் விவசாயத்தை கைவிடாமல் இன்றைக்கும் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

மாதக்கணக்கில் அலைந்து திரிந்து அறுவடை செய்தபின்பு உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்தான் விவசாயி இன்றைக்கு இருக்கிறான்.

இதை இங்கே குறிப்பிடக் காரணம் , மம்மட்டியே பிடிக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு விவசாயத்தைப் பற்றி தொலைநோக்குப் பார்வையோடு பேசுவதாக நினைத்துக்கொண்டு இந்த “டிஜிடல் இந்தியா” திட்டத்தை ஆகா , ஓகோவென்று வரிந்துகட்டிக்கொண்டு பேசுவதால்தான்.

“டிஜிடல் இந்தியா” வேண்டாம் என்று சொல்லவில்லை.மாற்றம் என்பது நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் , நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பிழைக்க வைக்க உருப்படியான திட்டங்களும் வேலைகளும் நடக்காமல் இருக்கும்போது விவசாயிக்கு இன்டர்நெட் வசதி எல்லாம் யார் கேட்டார் என்பதே ஆதங்கம்.

ஆட்சிக்கு வரும்போது விவசாயத்தைக் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்பொழுது “வாழ்வா சாவா” என்று இங்கே விவசாயி தண்ணீருக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு இன்டர்நெட் வசதி செய்து தருகிறேன் , டிஜிடல் ஆக்குகின்றேன் என்று சொல்வதைப் பார்க்கையில்தான் வேடிக்கையாக இருக்கிறது.

டிஜிடல் இந்தியாவைக் கொண்டுவாருங்கள்.அதற்கு முன்பு இங்கே தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைகள் நிறைய உள்ளன.அவற்றைத் தீர்த்து வைத்துவிட்டு இதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்கிறோம்.அவ்வளவுதான்.

விவசாயம் ஓரளவு தெரிந்தவன் என்ற முறையிலும் , ஐ.டி. துறையில் வேலை செய்வதால் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதைத் தெரிந்தவன் என்ற முறையிலும் இரண்டையும் ஒப்பீடு செய்து இன்றைக்கு தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனை எதுவென்று பார்த்தால் விவசாயம்தான் முதன்மையானது என்று அடித்துச் சொல்வேன்.

சரியான சந்தைப்படுத்துதல் இல்லாதது , முறையான விலை இல்லாதது, தண்ணீருக்காக தினமும் போராடுவது என்று விவசாயி தினமும் படும் வேதனைகளை கம்பியூட்டரை மட்டுமே தட்டிக்கொண்டிருப்பவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

மம்மட்டியே பிடிக்காமல் , வயலில் ஒரு நாள் கூட இறங்கி வேலை செய்யாமல் இருந்தவர்களுக்கெல்லாம் விவசாயத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை.ஆனால் , விவசாயத்தைக் கிண்டல் செய்வதற்கு முன்பு ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் – “கிராமத்தில் ஏர் ஓடினால்தான் நகரத்தில் உங்கள் கார் ஓடும்”.அவ்வளவுதான்.

——– கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s