பொறுமையே பெருமை சேர்க்கும்

patience_001ஒருவரைப் பற்றி சரியாக எதுவும் தெரியாமல் அவரைப் பற்றி நம் மனதில் தாராளமாக தப்புக் கணக்கைப் போட்டு விடுகின்றோம்.இவர் நமக்கு ஒத்துவராதவராகத்தான் இருப்பார் என்பதை நாமே முடிவு செய்துகொள்கின்றோம்.அவர்களிடம் சில நிமிடங்கள் பேசி அவர்களைப் புரிந்துகொள்வதற்குக்கூட பலருக்கும் பக்குவம் இருப்பதில்லை.”நீங்கள் மட்டும் என்ன மகானா” என்றும் கூட சிலர் என்னைக் கேட்கலாம்.நான் குறிப்பிட்ட அந்தப் பக்குவம் நிச்சயம் எனக்கும் இல்லை என்பதால்தான் இந்தப் பதிவே.

சாலையில் வாகனத்தில் செல்லும் போது ஒருவர் இன்டிகேட்டர் போடவில்லை என்றால் அவரை சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்துவிடுகின்றோம்.”வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா கஸ்மாலம்” என்பது ஆங்காங்கு சான்றோர்களால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள்.அவரவர் திறமைக்குத் தகுந்தாற்போல் கெட்ட வார்த்தைகளை அள்ளிவிடலாம்.

பெரும்பாலும் அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாம் காது கொடுத்துக் கேட்க முயற்சிப்பதில்லை.அதுதான் பிரச்சனை.பொறுமையின்மை நம் இஷ்டத்துக்கு செய்யச் சொல்லிவிடுகிறது.நம்மைச் சுற்றிலும் நான்கு நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். “அவன் என்ன பெரிய இவனா” என்ற மனநிலை முன்பைவிடவும் இன்றைக்கு அதிகரித்துவிட்டது.

அந்த ஆட்டோக்காரர் முன்னால் சென்றுகொண்டிருக்கிறார்.அவருக்குப் பின்னால் நானும் எனக்குப் பக்கத்தில் ஒருவரும் பைக்கில் சென்றுகொண்டிருக்கின்றோம்.முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த ஆட்டோக்காரர் திடீரென்று பின்னால் வரும் எங்களைக் கண்ணாடியில் பார்க்காமல் இடப்பக்கம் திரும்புகின்றார்.எனக்குப் பக்கத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த அந்த நபர் ஆட்டோவின் மீது மோதிவிடும் அளவிற்கு பக்கத்தில் சென்றுவிட்டார்.தவறு அவருடையதல்ல.ஆட்டோக்காரர் இடது பக்கம் கையைக் காட்டிவிட்டு அட்டோவைத் திருப்பி இருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல் திடீரென்று பின்னால் வரும் வாகனங்களைப் பார்க்காமல் திருப்பிவிட்டார்.நானாக இருந்திருந்தால் அந்த ஆட்டோவை விரட்டிப் பிடித்து ஆட்டோக்காரரைக் கையைக் காட்டி சத்தம் போட்டு என் முழுத் திறமையையும் காட்டிவிட்டுச் சென்றிருப்பேன் .என் பக்கத்தில் வந்தவர் அப்படிச் செய்யவில்லை.

அந்த ஆட்டோவை நெருங்கியவர் ஆட்டோக்காரரைப் பார்த்து “ஏங்க பாத்து கையக் காட்டிட்டு திரும்புங்க , பின்னால வாரவங்களுக்கு தெரியாதில்லீங்க நீங்க திரும்புறீங்கன்னு” என்று சாப்ட்டாகச் சொன்னார்.

பெரும்பாலான ஆட்டோக்காரர்களும் வம்புக்கு வருபவர்கள் என்பதால் இந்த நபர் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.புத்திமதி சொன்ன அந்த பைக்காரரைப் பார்த்து “பின்னால யாரும் வரலீன்னாலும் கை காட்டணுமா” என்று நக்கலாகக் கேட்டார்.இதை என்னைப் போன்ற ஆட்களிடம் கேட்டிருந்தால் அத்துனை வீரத்தையும் காட்டி சண்டைக்குத் தயாராகி இருப்பேன்/இருப்போம்.

ஆட்டோக்காரர் அப்படிக் கேட்டவுடன் “தம்பி , பின்னால வராங்களோ இல்லையோ , நீங்க கை காட்டி போற பழக்கத்த எப்பவுமே மறக்காம செஞ்சீங்கன்னா அது என்னைக்காவது ஒரு நாள் ஒருத்தர காப்பாத்தும்” என்று அதே சாப்ட்டாகச் சொல்ல “சார் சாரிங்க , இனிமே அப்படியே செய்றங்க” என்று தான் செய்த தவறையும் உணர்ந்து மன்னிப்பும் கேட்டுவிட்டே சென்றார்.

நாம் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் , அப்படிச் சொல்லும் அளவிற்கு நமக்கு பொறுமை இருக்க வேண்டும் .

கெட்டவர்கள் மட்டுமே நம்மைச் சுற்றி இல்லை , நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள்.அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.அதற்காக என்றைக்கும் தான் செய்த தவறை உணராதவர்களிடமும் அன்பாகப் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றில்லை.

“ஆடிய மாட்டை ஆடி கறக்கணும், பாடிய மாட்டை பாடி கறக்கணும்” என்பதையும் சில இடங்களில் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இன்றைய அவரச உலகில் தான் சீக்கிரம் செல்ல வேண்டும் , தன் வேலையே முக்கியம் , மற்றவன் எக்கேடு கெட்டால் என்ன என்ற மனநிலை பலருக்கும் வந்துவிட்டது.

“வரிசையாகச் செல்லவும்” என்று போர்டு வைத்திருக்கும் இடத்தில் சண்டையை நிச்சயம் பார்க்கலாம்.கோவிலில் இருந்து சினிமாக் கொட்டாய் வரை இதுதான் நிலை.வரிசையில் நிற்கப் பொறுமை இல்லை.முந்திக்கொண்டு செல்ல வேண்டும்.முதலில் செல்ல வேண்டும்.அதுதான் நமக்கு முக்கியமாகிறது.

கைக்குழந்தையோடு நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்ணைத் தள்ளிவிட்டுச் செல்வது நம் அறிவின் உச்சகட்டம்.கடந்த முறை திருப்பதிக்குச் சென்றிருந்த பொழுது அதைக் கண்கூடாகவே பார்க்க முடிந்தது.இத்துனைக்கும் வரிசை முறையை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள் தேவஸ்தான பொறுப்பாளர்கள்.நமக்குத்தான் பொறுமை கிடையாது.

இப்படி கோவில் என்றில்லை.பல இடங்களில் இதே அவசரம்தான். இந்த மாதிரி இடங்களில் எல்லாம் அறிவுரை வெற்றி பெறுமா என்று தெரியவில்லை. பொறுமை என்பது யார் சொல்லியும் வர வாய்ப்பில்லை.நமக்கே அது புரிந்தால்தான் உண்டு.

இந்த பொறுமையின்மைதான் இன்றைய பல பிரச்சனைகளுக்குக் காரணம்.ஒரு நிமிடம் யோசித்திருந்தால் மிகப்பெரிய ஆபத்தைத் தடுத்திருக்கலாம் என்று நிறைய சம்பவங்களைச் சொல்லலாம்.ஆனால் எத்துனை சம்பவங்களைப் பார்த்தாலும் கேட்டாலும் மக்களின் மனதில் சுயநலம் குறைந்து பொதுநலம் கொஞ்சம் எட்டிப்பார்ப்பதாகத் தெரியவில்லை.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மில் இருக்கும் சுயநலத்தை அழிக்க வேண்டும்.சுயநலம் குறைந்து பொதுநலம் என்ற எண்ணம் என்றைக்கு நம் அனைவருக்கும் வருகிறதோ அன்றைக்கு வேண்டுமானால் இங்கே குற்றங்கள் குறையும்.இல்லையென்றால் இன்றைய நிலையைவிட இன்னும் மோசமான நிலையைத்தான் எதிர்கால சந்ததியினர் சந்திக்க நேரிடும்.

வருங்கால சமூகத்திற்கு நம்மால் முடிந்த நல்லவற்றைச் சொல்லிவிட்டுச் செல்வோம்.

மாற்றம் வேண்டும் என்றால் அதை நம்மில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பொறுமை காப்போம்.பெருமை சேர்ப்போம்.மீண்டும் சந்திப்போம்.

—— கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s