கடலூரும் கண்ணீரும்

20151213_160707

நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்ல விஷயத்திற்காக கடலூர் சென்று முழு மனத்திருப்தியுடன் திரும்பிவிட்டோம்.அவரவர் சொந்த பணிக்கிடையிலும் இதை சாத்தியப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் யாருக்குமே முதலில் இருந்து வரவில்லை.நல்ல நோக்கத்திற்காகச் செல்வதால் செல்லும் நாளை எதிர்நோக்கித்தான் இருந்தோம்.இப்பொழுது அவரவர் வீடு திரும்பிவிட்டோம் என்றாலும் குறைந்தது இரண்டு மூன்று நாட்களுக்கு உடம்பு வலி , முதுகு வலி போன்ற பிரச்சனைகள் நிச்சயம் போக வாய்ப்பில்லை.அந்த அளவிற்கான சாலை வசதியைப் பெற்றுள்ளது கடலூர் மாவட்டம்.

“எப்பொழுதும் சாலை இப்படித்தானா , இல்லை மழை தான் காரணமா” என்ற எங்கள் கேள்விக்கு மக்கள் “மழைதான் காரணம்” என்று வெகுளித்தனமாகச் சொன்னாலும் இந்த அளவிற்கும் சாலைகள் மோசமானதற்கு மழையை மட்டுமே குறை சொல்லலாமா என்று தோனவில்லை.ஒதுக்கிய முழுப் பணத்தையும் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் போட்டு இன்னும் உறுதியான , தரமான சாலைகளை அமைத்திருந்தால் இந்த அளவிற்கு மோசமாகியிருக்காது என்பதே எங்கள் கணிப்பு.

கோவை , திருப்பூர் , பெங்களூர் , ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்த நண்பர்கள் அனைவரும் சென்னிமலையில் ஒன்றுசேர்ந்து அங்கிருந்து Dec 13 , ஞாயிற்றுக்கிழமை  கிளம்பி காலை ஏழு மணிக்கெல்லாம் கடலூர் சென்று விட்டோம்.கடலூருக்கு இதுதான் நான் முதன் முதலாகச் செல்வது என்பதும் , முதல் பயணமே உதவி செய்வதையும் தாண்டி இப்படி ஆறுதல் சொல்லச் செல்கிறோமே என்பது சற்று உறுத்தலாகத்தான் இருந்தது.இருந்தாலும் , நம்மால் முடிந்த அளவிற்கு அங்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப சிறு உதவியைச் செய்துவிட்டு வந்தோமே என்ற முழுத் திருப்பதியும் இப்பொழுது உண்டு.

அனுபவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது பலருக்கும் கண்ணீரை வரவழைத்துவிடும்.அந்த அளவிற்கு அங்கே மக்கள் உள்ளூரிலேயே அகதிகளாகத்தான் கடந்த பல நாட்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.நாங்கள் கடலூரில் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் உள்ளே சென்று 600 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்திற்குத்தான் முதலில் சென்றோம்.பண்ருட்டியிலேயே எங்களோடு காவல் துறை நண்பரும் காவலுக்கு வந்திருந்தார்.

கடலூரில் இருந்து நாங்கள் தேர்வு செய்திருந்த “குண்டியநல்லூர்” என்ற கிராமத்திற்குச் செல்லும் வழி எங்கும் சாலையோரத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு தங்களுக்கும் ஏதாவது கொடுத்துவிட்டுச் செல்லலாமே என்று கையேந்தி நின்ற காட்சிகளைப் பார்க்க திடமான இதயம் வேண்டும்.நாங்கள் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து ஓடிவந்த பெரியவர்களை விட சிறு குழந்தைகளின் முகத்தைப் பார்த்து சிறுதுளியேனும் கண்ணீர் வந்துவிடும்.

எங்கள் வாகனத்தைப் பார்த்தவுடன் “ஸார் , ஸார் கொஞ்சம் நில்லுங்க , பிஸ்கட் இருந்தா குடுத்துட்டுப் போங்க” என்று வயலோரத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு பிஞ்சு உள்ளங்கள் சத்தம் போட்டபடியே பின்னால் ஓடிவருவதைப் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டோம்.இங்கே சிக்கல் என்னவென்றால் பசியின் கொடுமையால் தெற்கு , வடக்கு என்று வாகனம் ஏதாவது வருகிறதா என்று எங்கும் பார்க்காமல் குழந்தைகள் ஓடிவந்து விபத்தும் நடந்திருக்கிறது என்பதால் அவர்களை சமாளிப்பதிலும் சவால் இருந்தது.எங்கள் வாகனத்தை மெதுவாக நிறுத்திவிட்டு ஓடிவந்த குழந்தைகளையும் அங்கேயே நிற்கச் சொல்லி அவர்களிடமே சென்று சில பிஸ்கட் பாக்கெட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றோம்.இந்த பிஞ்சு உள்ளங்கள் நாங்கள் திட்டமிட்டுருந்த கிராமத்தில் இருந்தவர்கள் அல்ல , அங்கே செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த குழந்தைகள்.

பிஸ்கட் பாக்கெட்டுகளை கையில் வாங்கியவுடன் அந்தக் குழந்தைகளின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.”அகதிகள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொள்ளவும் , அவர்களின் வாழ்க்கையை நேரிலேயே பார்க்கவும் இந்த மாமழைக்காக இத்துனை நாட்களாக காத்திருந்திருக்கிறோம்.அவ்வளவு கொடுமை.பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிய அந்தக் குழந்தைகள் கைகோர்த்துக்கொண்டு சென்று ஓரிடத்தில் அமர்ந்து ஒற்றுமையுடன் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் இருப்போம் என்பதற்கு அங்கே பெரியவர்களை விட சிறு குழந்தைகள்தான் சாட்சிகளாகத் தெரிந்தார்கள்.

நாங்கள் தேர்வு செய்திருந்த அந்த கிராமத்திற்குச் சென்று அங்கிருக்கும் 600 குடும்பங்களுக்கும் வீடு வீடாகச் சென்று உணவு மற்றும் போர்வைகளைக் கொடுக்கும் பணியை 25 நண்பர்களும் வேகமாக ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடித்தோம்.

ஒரு வீட்டில் எங்களிடம் இருந்து உணவுப் பொட்டலத்தை தன் கையில் பெற்றுக்கொண்ட தாயிடம் இருந்து உணவுப் பொட்டலத்தை தன்னிடம் சீக்கிரம் தரச் சொல்லி தன் அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தவாறே நின்றுகொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.அடுத்த சில நொடிகளில் அந்தப் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்டு ஓடியவன் ஓரிடத்தில் அமர்ந்து அதைப் பிரித்து வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்த காட்சிகள் வருண பகவான் மீதும் , கோர தாண்டவமாடிய இந்த மாமழை மீதும் கோபத்தை உண்டாக்கத் தவறவில்லை. கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தாலும் இந்தக் காட்சிகள் எல்லாம் நெஞ்சை பதைபதைக்க வைத்துவிடும்.

அங்கே முடித்துவிட்டு கடலூர் துறைமுகத்தை ஒட்டியுள்ள ஒரு பகுதிக்குச் சென்று அங்கே அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள சுமார் 75 குடும்பங்களுக்கு போர்வை , சேலை , லுங்கி , துண்டு , குழந்தைகளுக்கு துணி போன்ற பொருள்களோடு சேர்ந்து வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கொஞ்சமும் அதோடு உணவும் கொடுத்துவிட்டு அங்கிருந்து குறிஞ்சிப்பாடி என்ற கிராமத்திற்கு வந்து அங்கும் சுமார் 130 குடும்பங்களுக்கும் இதே பொருள்களோடு சேர்ந்து 25 கிலோ அரிசியையும் கொடுத்துவிட்டுத் திரும்பினோம்.

சில இடங்களில் மக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் பெற்று சேமித்துக்கொள்வோம் என்ற சுயநலத்துடன் இருந்ததையும் காண முடிந்தது.இந்த சோக காலத்திலும் நமக்குக் கிடைத்தது மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்ற பொதுநலன் சிலரிடம் இல்லாமல் இருந்தது சிறு வருத்தத்தைத் தந்தது.

மற்றொரு முக்கியமான விஷயம் , சில இடங்களில் நிவாரணப் பொருள்களை வாங்கிப் பழகிவிட்ட மக்கள் இன்றைக்கும் யாராவது வருவார்களா , பொருள் வாங்கி சேமித்து வைத்துக்கொள்வோமா என்ற எண்ணத்துடன் ஓடி வருவதையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.அங்கே இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருவதால் ஓரிரு நாட்களில் நாம் செய்யும் உதவிகளையும் நிறுத்தினால்தான் அந்த மக்கள் கையேந்தும் நிலையில் இருந்து மீண்டு தன்னம்பிக்கையோடு அவரவர் செய்துகொண்டிருந்த பழைய வேலைக்குத் திரும்புவார்கள்.இல்லை என்றால் நாமே அவர்களை சோம்பேறிகள் ஆக்கிவிடும் வாய்ப்பும் உண்டு.யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதைச் சொல்லவில்லை.உள்ளதைத்தான் சொல்கின்றேன்.

இன்றைக்கு அலுவலகம் சென்று வேலை பார்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றாலும் எங்களால் முடிந்த அளவிற்கு 800+ குடும்பங்களுக்கு சிறு துளி உதவியைச் செய்து முடித்துவிட்டு வந்த முழுத் திருப்தியும் தற்பொழுது உள்ளது.

“தம்பி , இந்த நேரத்துல இந்து , முஸ்லிம் , கிறிஸ்த்துவர் என்று பார்க்காமல் எங்களைப் பார்க்க ஓடோடி வந்தீங்களே… நீங்க எல்லோரும் நல்லா இருக்கணும்” என்று வீட்டில் இருந்து வெளியில் வந்து கண்ணீருடன் பேசிய அந்த பிராமணப் பெரியவரின் ஆசீர்வாதம் மட்டுமே எங்களுக்குப் போதுமானது.

கடலூரில் இருந்து திரும்பும்போது மக்களிடம் “போயிட்டு வாரோம்” என்று சொல்ல மனம் வரவில்லை.வெறும் கை அசைவுகளோடு அவர்களிடம் இருந்து விடை பெற்றோம்.

——– கதிர் .

 

 

Advertisements
This entry was posted in என் பதிவுகள், நிகழ்வுகள். Bookmark the permalink.

4 Responses to கடலூரும் கண்ணீரும்

 1. parthiban natarajan says:

  உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
  நற்பணி தொடர வாழ்த்துகள்.

  Liked by 1 person

 2. ponkali says:

  I like the part we need to stop giving food packets. Instead, its time to work on build infrastructure which will be good for future.

  Liked by 1 person

 3. Sugadevarajaguru Gunasekaran says:

  வாழ்த்துகள் Kathirvel Subramaniam…

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s