மாணவர்களுடன் ஒரு நாள்

IMG_6153

கடந்த மாதம் ஈரோடு மாவட்டத்தில் உயர் நிலைப் பள்ளி ஒன்றில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பு முடித்தவுடன் மேற்படிப்பு என்ன படிக்கலாம் , எங்கு படிக்கலாம் , வேலை வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்பதைப் பற்றியும் , அதோடு சேர்த்து மாணவர்களுக்குத் தேவையான “வாழ்க்கை திறன்கள்”(Life Skills) பற்றிப் பேசவும் நண்பர்களோடு சேர்த்து என்னையும் அழைத்திருந்தார்கள்.

பரீட்சை நெருங்குவதால் அவர்களுக்கு இது ரொம்பவும் உதவும் என்ற எண்ணத்தில் அழைத்திருந்தார்கள்.மாணவர்களுக்கு இது போல் நம்மால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் நீண்ட நாட்களாக இருந்தது.இரண்டும் ஒத்துப்போனதால் டிசம்பர் 5 ஆம் தேதி சனிக்கிழமை இந்த நிகழ்வு நடந்தது.

நாங்கள் மொத்தம் நான்கு நண்பர்கள்.நிகழ்ச்சி முடிவானதும் யார் என்ன பேசுவது என்ற பேச்சு வர கடைசியில் எனக்கு “வாழ்க்கை திறன்கள்” பற்றி முழுவதும் பேசச் சொல்லி உத்தரவிட்டது நண்பர்கள் கூட்டம். பொதுவாக நம் வயதை ஒத்த ஆட்களுடன் பேசுவதில் பெரிய சிரமம் இருக்காது.நாம் சொல்ல வந்த விஷயத்திற்குள் அவர்களை எளிதில் இழுத்துச் சென்று விடலாம்.

ஆனால் மாணவர்கள் அப்படியில்லை.நாம் சொல்ல வரும் விஷயத்தை அவர்களுடனேயே பயணித்து அவர்களுள் ஒருவராகவே மாறி பிறகு எளிய முறையில் சொல்ல வேண்டும்.இல்லை என்றால் ஒட்டு மொத்த நிகழ்ச்சியும் ப்ளாப் ஆகிவிடும்.இங்குதான் சிக்கலே.அப்படிப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மாணவர்கள் முன்னால் பேசுவது எடுபடும்.இந்த பயம் மட்டும் எங்களுக்கு நிறையவே இருந்தது.

மற்ற மூன்று நண்பர்களும் “கேரியர் கைடன்ஸ்” தலைப்பை எடுத்துக்கொள்ள “லைப் ஸ்கில்ஸ்” என்னிடம் வர அனைவருமே சேர்ந்து பவர் பாயிண்ட் உருவாக்குவதில் இருந்து நிகழ்ச்சிக்குத் தேவையான வீடியோ , ஆடியோ சேகரிப்பது வரை இரண்டு வாரத்திற்குள் முடித்துவிட்டு டிசம்பர் 5 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றுவிட்டோம்.

மாலை ஐந்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.சுமார் 150 மாணவர்கள். எங்களைப் பற்றிய அறிமுகம் முடிந்தவுடன் உயர் கல்வியைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் நண்பர்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே மாணவர்களும் அவ்வப்போது பேச வேண்டும் , சந்தேகம் இருக்கும் இடத்தில் நிறுத்தி கேள்வி கேட்க வேண்டும் என்பதைச் சொல்லி விட்டோம்.காரணம் நாம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நாம் சொல்ல வந்த விஷயம் மாணவர்களுக்குச் செல்கிறதா , புரிகிறதா என்பது தெரியாமல் போய்விடும்.நகைச்சுவையோடு ஆரம்பித்த நிகழ்ச்சியின் முதல் இருபது நிமிடம் மாணவர்கள் தரப்பில் இருந்து யாரும் வாய் திறக்கவே இல்லை.எனக்கு என் பள்ளிக்கால நாட்கள் நினைவில் வந்தாலும் அங்கே சிரிக்க முடியாது என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நண்பர் மேற்படிப்பு சம்பந்தமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க இருபது நிமிடம் முடிந்ததும் மாணவர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு சேட்டை மாணவன் “சார் , உங்களுக்கு சம்பளம் எவ்வளவு சொல்லுங்க” என்றான்.அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆசிரியர்கள் அந்த மாணவனை பார்த்தவாறே இருந்தனர்.கோபத்தில் பார்த்திருக்கலாம்.ஆனால் , மாணவன் கேட்ட அந்த கேள்விக்குப் பிறகுதான் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.

காரணம் , நாம் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல அந்த மாணவர்களுள் ஒருவராகச் சென்றுவிட்டோம் என்ற திருப்தி.சகஜமாக எங்களோடு அவர்கள் பேச விரும்புகிறார்கள் என்பதும் எங்களுக்கும் அவர்களுக்கும் இடைவெளி இல்லை என்பது புரிந்தது.அந்த மாணவனுக்கும் பதில் தந்தார் நண்பர்.அதற்குப் பிறகு நிகழ்ச்சி வேகம் எடுக்க மாணவர்கள் ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பிலும் தங்களுடைய கேள்விகளைக் கேட்க அவர்களுக்குப் புரியும் அளவிற்கு எளிய முறையில் விளக்கங்களையும் நாங்கள் கொடுத்தோம்.

மாணவர்கள் கூட்டத்தில் இப்பொழுதே கம்பியூட்டர் ப்ரோக்ராம் அடிக்கும் அளவிற்கும் இருந்தார்கள் என்றாலும் பலருக்கும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிப்பது , எந்த துறையை தேர்வு செய்வது என்பதில் போதிய அளவு புரிதல் இல்லை.நாங்கள் சென்றது கிராமப்புற பள்ளி என்பதால் நாங்களும் ஆச்சரியப்படவில்லை.ஒருவர் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொருவராக கேள்விகள் கேட்க நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு வழிகாட்டினோம்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி கேட்ட கேள்விதான் நம் கல்வி முறையைப் பற்றி பலரும் அன்றாடம் கேட்கும் கேள்வி.”சார் , இரவு பகல் என்று பார்க்காமல் மதிப்பெண்ணை மனதில் வைத்தே படித்துக்கொண்டு வருகின்றோம் , ஆனால் எங்களுக்கு அது மட்டுமே வாழ்க்கைக்கு உதவாது , செயல் முறைக் கல்வி என்பது இல்லவே இல்லை , இப்படி மதிப்பெண்களை நோக்கிப் படிக்கும் படிப்பு எங்களுக்கு எதிர்காலத்தில் எந்த வகையில் உதவப் போகிறது சொல்லுங்கள்” என்று அசத்தலாக ஒரு கேள்வியை கேட்டார்.மாணவி இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆசிரியர்கள் முகத்தைப் பார்த்தேன்.அவர்கள் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தனர்.

இப்பொழுது இந்தக் குழந்தைக்கு பதில் சொல்ல வேண்டும்.இந்தக் கேள்வியை நான் எடுத்துக்கொண்டேன்.இது நம் கல்வி முறையின் மீதே சுமத்த வேண்டிய குற்றம் என்றாலும் அந்த மாணவிக்கு முன்னால் அப்படிச் சொல்ல முடியாது.இருந்தாலும் நேர்மையாகவே பேசிவிட நினைத்தேன்.

“எதையும் முழுவதும் புரிந்துகொள்ளாமல் படித்தோ , மனப்பாடம் செய்தோ மதிப்பெண் வாங்குவது எதிர்காலத்துக்கு எந்த வகையிலும் உதவாது , செயல் முறைக் கல்வி என்பது நமது கல்வி முறையில் மாற்றம் வந்தாலே சாத்தியம் , வெறும் மதிப்பெண்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது ,   உங்களுக்கு உதவ ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள் , உங்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் , புரிந்துகொண்டு படிக்க வேண்டும் ” என்றேன்.

இது போன்ற தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தக்கூடிய கேள்விகள் தான் மாணவர்களிடம் இருந்து நிறைய வந்தது.இப்படி படிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் முடிந்ததும் “வாழ்க்கைத் திறன்கள்” பற்றிப் பேசும் நேரம் எனக்கு வந்தது. இந்த தலைப்பில் பேசும்போது ஒரு சிக்கல் இருக்கிறது.நாம் சொல்ல வந்த கருத்து மாணவர்களுக்கு “அறிவுரை” சொல்வதைப் போல் இருந்துவிட்டால் சோலி சுத்தம்.முடிந்தவரை அவர்களுக்குத் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக நம் பேச்சு இருக்க வேண்டும் என்பதற்காகவே என் அனுபவத்தில் கிடைத்த விஷயங்களையே அதிகம் பகிர்ந்துகொண்டேன்.

உதாரணத்திற்கு “வாழ்க்கைத் திறன்’ -ல் “கம்யூனிகேசன்” என்ற ஒரு விஷயம் வருகிறது.பெரும்பாலானவர்களுக்கு “கம்யூனிகேசன்” என்றால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது என்பதுதான் புரிதலாக இருக்கிறது.ஆனால் அது மட்டுமே “கம்யூனிகேசன்” கிடையாது. நாம் மற்றவரிடம் பேசும்போது நம் உடல் மொழி , முகத்தில் சாந்தம் , புன்னகை , மற்றவர் சொல்வதையும் பொறுமையாகக் கேட்டு பின்பு பதில் சொல்வது என்று இவை அனைத்துமே “கம்யூனிகேசன்” – ல் வருவதுதான்.இவை அனைத்துமே எந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும் ஒருவருக்கு மிகவும் தேவையானவை. வெறும் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால் மட்டும் வேலை கிடைத்துவிடாது என்பதை அனுபவத்தோடு சில வீடியோக்களையும் போட்டுக் காண்பித்து விளக்கினேன்.

இதே போல் “வாழ்க்கை திறன்” ல் வரும் மாணவர்களுக்கு முக்கியமான விஷயங்களான மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிமுறைகள் , சுய ஒழுக்கம்/கட்டுப்பாடு , தன்னம்பிக்கை இவற்றைப் பற்றி மேலே குறிப்பிட்ட அதே முறையில் அவர்களுக்குப் புரியும் படி சொல்ல வேண்டியிருந்தது.அவர்கள் வழியிலேயே சென்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டு வந்த மனநிறைவு கிடைத்தது.

மாலை ஐந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு எட்டு மணிக்கு முடிவடைந்த பிறகும் பல மாணவர்களும் தனியாக எங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து மேலும் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.அவர்களிடம் பேசியதில் இருந்து தெரிந்த ஒரு விஷயம் இப்பொழுது மாணவர்களிடம் “எஞ்சினியரிங்” படிப்பு மீது அவ்வளவு ஆர்வம் இல்லை என்பதுதான்.

இப்படி மாணவர்களிடம் பேசி நம் அனுபவத்தைப் பகிர்ந்து அவர்களுக்கு சிறிய அளவில் உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தியின் மதிப்பே தனிதான்.இனி வரும் மாதங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகள் இந்த நிகழ்ச்சியை தங்கள் பள்ளிக்கும் வந்து நடத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள்.நேரம் கிடைக்கும்போது நிச்சயம் சென்று வர வேண்டும்.நம்மால் முடிந்ததை மாணவச் செல்வங்களுக்குச் செய்வோம்.

இன்றைய மாணவர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு படிக்கிறார்கள்.ஆனால் , அவர்களின் எதிர்காலத்திற்குத் தேவையான பள்ளிக் கல்வி முறை நமது நாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

வெறும் மதிப்பெண்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ள நமது கல்வி முறையில் நிறைய மாற்றங்கள் வர வேண்டியிருக்கிறது.அது நடக்கும் வரை நிறைய திறமை மிக்க மாணவர்கள் “மதிப்பெண்” என்ற ஒரே காரணத்தால் அரிய வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.மீண்டும் சந்திப்போம்.

—— கதிர்.

Advertisements
This entry was posted in என் பதிவுகள், நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s