இறைவனுக்கு நன்றி

pray1ஜனவரி 28 ஆம் தேதி.அன்று காலைதான் விடுமுறை முடிந்து ஈரோட்டில் இருந்து பெங்களூருக்குத் திரும்பியிருந்தோம். மூன்று நாட்கள் விடுப்பில் இருந்ததாலும் , அலுவலகத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய நிலுவையில் இருந்ததாலும் ஊரில் இருந்து வந்த வேகத்தில் அலுவலகத்திற்கு காலை 7:45 க்கே கிளம்ப வேண்டிய கட்டாயம்.பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இப்படி நேரமாகவே கிளம்பிச் சென்றால்தான் உண்டு.அப்பொழுதும் ஓரளவுதான் தப்பிக்க முடியும்.

இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகான பெங்களூரின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதற்குள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு கோவைப் பக்கம் வந்துவிட வேண்டும் என்ற என் திட்டத்தில் இருந்து இன்னும் நான் பின்வாங்காதவனாகத்தான் இருக்கின்றேன். இன்போசிஸ் போன்ற ஐ.டி. நிறுவனங்கள் போக்குவரத்து நெரிசலால் தங்கள் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வந்து போகமுடியாததை கருத்தில் கொண்டு மாதத்தில் இரண்டு வாரங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருப்பதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.வரவேற்கத்தக்க விஷயம்தான்.

இந்த 13 வருட பெங்களூர் வாழ்க்கையில் கடும் மழையில் பைக்கில் சென்ற போதெல்லாம் கூட ஒரு முறை கூட விபத்தில் சிக்கியதில்லை என்ற கணக்கு ஜனவரி 28 ஆம் தேதி வரைதான் கணக்காக இருந்தது.அன்றைக்கு அதுவும் நடந்துவிட்டது.அலுவலகத்திற்கு வீட்டில் இருந்து 25 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.சுமாரான போக்குவரத்து நெரிசல்தான்.சம்பவம் 20 ஆவது கிலோமீட்டரில் நடந்தது.

கடந்த ஐந்தாண்டுகளாகவே பைக்கில் வேகத்தைக் குறைத்துக்கொண்டுதான் செல்கின்றேன். காரணம் ஒரு வித பயம் என்றும் சொல்லலாம்.அதிக பட்சம் 50 ஐத் தாண்டுவதில்லை.ஆனால் விபத்து ஏற்பட வேண்டும் என்று எழுதியிருந்தால் எந்த ரூபத்திலும் வந்து சேர்ந்துவிடும்.

எனக்கு முன்னால் சற்று வேகமாக வலது பக்கம் ஹோண்டா சிட்டி காரில் சென்றுகொண்டிருந்த நபர் இடது பக்கம் திரும்ப முடிவெடுத்து திடீரென்று பிரேக் போட்ட நேரம்தான் ஆபத்து என்னைத் தேடி வந்தது.பின்னால் சென்றுகொண்டிருந்த நானும் நிலை தடுமாறி அதே காரில் பைக்குடன் மோதி கீழே தூக்கி வீசப்பட்டு விட வலது கால் மட்டும் எப்படியோ பைக்கில் சிக்கி கால் கீழே வைக்க முடியாத அளவிற்கு கடுமையான வலி.

காரில் சென்ற நபர் காரை நிறுத்தி இறங்கி வந்து ஒரு நிமிடம் என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தவர் அடுத்த நிமிடம் வேகமாக காரை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டார்.சமூகத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி சுட்டிக்காட்டினால் “எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்” என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த விபத்திற்கு காரணம் அவர்தான் என்று நான் சொல்லவில்லை.நானும் கூட கொஞ்சம் இடைவெளி விட்டுச் சென்றிருந்தால் தப்பித்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளத் தவறவில்லை என்பதால் விபத்திற்கு நாங்கள் இருவருமே பொறுப்பு என்றுதான் சொல்கின்றேன். அந்த மனிதரிடம் நான் எதிர்பார்த்தது குறைந்த பட்ச மனிதாபிமானம்தானே தவிர வேறெதுவும் இல்லை. சரி விட்டுவிடுவோம் , அவரைத் திட்டி இப்பொழுது என்ன நடந்துவிடப் போகிறது.எல்லோருமே ஆறறிவு கொண்ட மனிதர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட ஒரு வகையில் குற்றம்தான்.

உதவிக்கு வராத இப்படிப்பட்ட சிலர் இருந்தாலும் விபத்து நடந்தவுடன் வந்து உதவிய நல்லுள்ளங்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.என்னுடைய நல்ல நேரம் எனக்குப் பின்னால் வாகனத்தில் வந்தவர்கள் விபத்து நடந்தவுடன் வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்திவிட்டதால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது.பைக்கில் வந்த இரண்டு பெண்களும் , ஆண்களும் உடனே ஓடி வந்து தண்ணீர் கொடுக்க , போக்குவரத்து காவலர் உடனே வாகனம் பிடித்து மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துவிட்டார்.

இங்கே ஆபத்து என்றால் உதவிக்கு ஓடோடி வர நல்லவர்கள் நிறையப் பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

உடனடியாக வலியைப் பொறுத்துக்கொண்டே மருத்துவமனை சென்று எக்ஸ் ரே எடுத்துப்பார்த்தவுடன் வலது காலில் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது என்பது தெரிந்துவிட்டது. காலில் கட்டுப்போட்டிருப்பதால் குறைந்தது மூன்று வாரங்கள் நடக்கக்கூடாது என்ற மருத்துவரின் அறிவுரைப்படி இப்பொழுது வீட்டில் இருந்தே அலுவலக வேலையைப் பார்க்க வேண்டிய நிலை. விபத்து என்றாலும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து விட்ட ஒரு திருப்தியும் உள்ளது.

இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஹெல்மெட்தான்.பெங்களூரில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.கிட்டத்தட்ட அனைவருமே சட்டத்தை மதிக்கிறார்கள். விபத்து நடந்தவுடன் நான் கீழே விழுந்ததும் தலைப் பகுதிக்கு சிறு காயம்கூட ஆகாததற்கு ஹெல்மெட் மட்டுமே காரணம் என்று அடித்துச் சொல்வேன்.இப்பொழுது இங்கே பைக்கில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். அந்த சட்டத்தையும் மக்கள் மதித்து நடக்க ஆரம்பித்து விட்டதைப் பார்க்க முடிகிறது. சட்டத்தை மதிப்பதைவிட நம் உயிரின் மேல் பயம் இருந்தாலே போதுமென்று நினைக்கின்றேன்.

இது போன்ற விபத்துகள் நடக்கும் போதுதான் இந்த சமூகத்தில் இருக்கும் நல்ல முகங்களையும் , கெட்ட முகங்களையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்பதும் , அரசாங்கம் கொண்டு வரும் பல நல்ல சட்ட திட்டங்கள் இது போன்ற சமையங்களில் நம் உயிரையே காக்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது.இறைவனுக்கு நன்றி.

—— கதிர் .

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s