குல்லாவும் என் குழந்தைகளும்

kulla13 வருடங்களுக்கு முன்பு அக்கா மகளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது குளிர் காலத்தில் தலைக்குப் போட்டுக்கொள்ள குல்லா ஒன்றை வாங்கினோம்.அவளும் இரண்டு , மூன்று வருடங்கள் அதைத்தான் போட்டிருந்தாள்.பிறகு பெரியவளாக ஆக அந்தக் குல்லா அவளுக்கு சிறியதாகி விட்டது.

அக்கா தன் மகள் சிறு வயதில் பயன்படுத்திய பொருட்களோடு சேர்த்து சிறு வயதில் போட்டிருந்த துணிகளையும் அப்படியே ஞாபகத்திற்காக சேகரித்து வைத்திருந்தார்.அதில் இந்தக் குல்லாவும் ஒரு கட்டத்தில் சேர்ந்துவிட்டது.குழந்தைகளின் சிறு வயதுப் பொருட்களையும் , துணிகளையும் சேகரித்து வைத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் அதை எடுத்துப் பார்ப்பதில் கிடைக்கும் சுவாரசியம் தனிதான். ஆனால் அதற்கு ஆர்வமும், பொறுமையும் இருக்க வேண்டும்.

2009-ல் எங்கள் மூத்த மகன் பிறந்தான்.அவனுக்கு மூன்று வயது வந்தவுடன் அக்கா இப்படி சேகரித்து வைத்திருந்த குல்லா ஒரு கட்டத்தில் அவனுக்கு வந்துவிட்டது.தன் பேத்தியின் குல்லாவையே தன் பேரனுக்கும் போட்டுவிட வேண்டும் என்று சென்ட்டிமென்ட்டாகப் பார்த்தார் அம்மா.அவனும் இரண்டு மூன்று வருடங்கள் அதே குல்லாவையே போட்டிருந்தான்.

2013-ல் எங்கள் இளைய மகன் பிறந்தான்.இப்பொழுது அவனுக்கு இரண்டு வயது முடிந்து மூன்று ஆரம்பித்திருக்கிறது.இப்பொழுது அதே குல்லா பெரியவனிடம் இருந்து சின்னவனுக்கு கைமாறியிருக்கிறது.மூன்றாவது ஆளாக இப்பொழுது சின்னவன் அதே குல்லாவைத்தான் போட்டிருக்கின்றான்.

இந்தக் குல்லாவை கையில் எடுக்கும்போதெல்லாம் பக்கத்தில் யாராவது நின்றுகொண்டிருந்தால் அதன் 13 வருட கால வரலாற்றை தவறாமல் சொல்லிவிடுகிறார் அம்மா.இத்துனை வருடங்களாக பத்திரமாக வைத்திருந்தோம் என்று எப்பொழுதும் சொல்வதில்லை.”இது எங்க பாப்பா கிட்ட இருந்து , பெரியவனுக்கு வந்து , இப்ப சின்னவனுக்கு வந்துருச்சு” என்று தன் பேரக்குழந்தைகளை முன்னிலைப் படுத்தியே பெருமையாகச் சொல்கிறார்.மூன்று பேரக் குழந்தைகளும்தான் அவருக்கும் , அப்பாவுக்கும் உலகமாகத் தெரிகிறது.

குல்லாவை ஒவ்வொரு முறை நான் பார்க்கும்போதும் குடும்பத்தின் பெரியவர்களின் உலகமும் , அவர்களின் ரத்த பந்தமும்தான் என் கண்களுக்குத் தெரிகிறது.இப்படி நாம் கடந்து செல்லும் சின்னச் சின்ன விஷயங்களும் நம் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான வகையில் அழகாக்கிக்கொண்டுதான் செல்கிறது. அதை ரசிக்கும் மனநிலை நம்மிடம் இருந்தால் அதுவும் அழகுதான்

——- கதிர்.

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s