ஆட்டம் முடிந்தது

sasikala-chief

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புதான். இனிமேல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்கள் பணத்தை சுருட்ட நினைப்பவர்கள் கொஞ்சமாவது பயப்படலாம். இந்த தீர்ப்பு குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத ஒரு மூடர் கூடம் அரசியலில் இருப்பதையும் நமக்கு படம் பிடித்துக்காட்டியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் உயிரோடு இருந்தவரை அவரின் காலுக்கடியில் கிடந்து , அன்றைக்கு அவர் ஜெயிலுக்குச் சென்ற போது அவர் தவறேதும் செய்யவில்லை என்று கோவில் கோவிலாகச் சென்று பாலாபிஷேகம் செய்தவர்கள் பலரும் இன்றைக்கு இந்த தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து குத்தாட்டம் போடுகிறார்கள்.

இவர்களை எல்லாம்தான் புரட்சித் தலைவி உண்மையான விசுவாசிகள் என்று வைத்திருந்திருக்கிறார் என்று நினைக்கும்போது ஒரு முறை சிரித்துவிடலாம். ஜெயலலிதா ஏன் இத்துனை வருடங்களாக கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கவில்லை என்ற கேள்விக்கு இன்றைக்குத்தான் விடை கிடைத்திருக்கிறது. இந்த மூடர்களை எல்லாம் நம்பாமல்தான் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்திருக்கிறார்.

இவர்களை விடவும் இன்னொருவர் இருக்கிறார். குற்றம் செய்தது தன் அத்தை என்பது தெரிந்தும் தீர்ப்பை வரவேற்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.அப்படியானால் தன் அத்தைக்கு இதன்மூலம் என்ன தெரிவிக்க விரும்புகின்றார் என்று தெரியவில்லை. இவரிடம் தமிழ்நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை , ஆனால் என்னைப் பொருத்தவரை தீபாவால் எந்தவொரு மாற்றத்தையும் கட்சியில் கொண்டுவந்துவிட முடிய வாய்ப்பில்லை.பன்னீரோடு சேர்ந்து புதிய கட்சி தொடங்கினாலும் தீபாவால் பெரிய நன்மை ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு அரசியல் தலைவருக்கும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எதிர்ப்பு சின்னம்மாவாகிய சசிகலாவுக்கு இருந்தது என்று தாராளமாகச் சொல்லலாம். திரும்பிய பக்கம் எல்லாம் எதிர்ப்புக் குரல்தான். “சனி” , “ஏழரை” என்று இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரையும் தமிழகம் அர்ச்சனை செய்திருக்காது. “நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன்” என்று பதவி வெறியின் உச்சத்தில்தான் இருந்தார்.

மீடியாக்காரர்களிடம் பேசும்போது அவருடைய பேச்சில் மிரட்டல் தெளிவாகத் தெரிந்தது. அவருடைய நடிப்பு தானாக வெளிப்பட்டது.”எங்கள் வீட்டில் அக்கா இருக்கும்போது ஒன்று வேலைக்கு இருந்தது , அது இன்னமும் இங்குதான் வேலை செய்து கொண்டிருக்கிறது” என்று தன் வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணை “அது , இது” என்று பொது வெளியில் எந்த தயக்கமும் இன்றி பேசும் ஒருவர் , எந்த மாதிரியான மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுப்பார் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மட்டும் குடிசைக்குச் சென்று குழந்தையை கையில் எடுத்து “ஜெயலலிதா” என்று பெயர் வைத்துவிட்டால் இளைய புரட்சித்தலைவி ஆகிவிடமுடியுமா என்ன.

இதில் என்னவொரு கொடுமை என்றால் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டியார் கையயைக் கட்டிக்கொண்டு ஆமாம் சாமி போடுவதைப் போல் நின்றுகொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு கட்சியில் அனைவரையும் தன் கால் செருப்பாகத்தான் வைத்திருந்திருக்கிறார் சின்னம்மாவாகிய சசிகலா.

இவர்கள் இப்படியென்றால் பன்னீர் செல்வம் ஒன்றும் மனிதருள் மாணிக்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கடந்த இரண்டு மாதங்களில் அவருடைய ஆட்சி குறை சொல்லும் அளவிற்கு இல்லாமல் இருந்ததும் , ஜல்லிக்கட்டு மற்றும் வரதா புயல் நேரத்தின் போது அரசின் வேகம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததால்தான் மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். சாதாரண மக்களோடு பழகும் தலைவராக தன்னை காட்டிக்கொண்டு அதில் அவர் வெற்றியும் கண்டுவிட்டார் எனலாம்.

மற்றபடி பன்னீர் ஒன்றும் சத்தியவான் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போதைக்கு “நல்ல கெட்டவர்” வேண்டுமா இல்லை “கெட்ட கெட்டவர்” வேண்டுமா என்று கேள்வி கேட்டால் எங்களுக்கு “நல்ல கெட்டவரே” போதும் என்று பதில் சொல்லி பன்னீரையே நாம் வரச் சொல்கின்றோம்.அதுதான் நிதர்சனம். மீண்டும் வந்து சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.அதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டேதான் வருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி வந்துகூட நல்லது செய்யலாம்.ஆனால் சசிகலாவின் மீது மக்களுக்கு இருக்கும் அதீத வெறுப்பு பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகமே.

“யார் யாருக்கோ பால்கனியில் நின்றுகொண்டு டாட்டா காட்டியவர்தான் ஜெயலலிதா” என்று அன்றைக்கு புரட்சித் தலைவியை கடுமையாக விமர்சித்து , பின்னாளில் அதே புரட்சித்தலைவியின் விசுவாசியாக வலம்வந்த பொன்னையன் இன்றைக்கு தன் விசுவாசத்தை பன்னீரிடம் காட்டிக்கொண்டிருக்கிறார். எனக்கென்னமோ பன்னீர் ஒரு வேளை “பரிசுத்தமானவர்” என்று பெயர் வாங்கும் அளவிற்கு பின்னாளில் வர வாய்ப்பிருந்தால் , பொன்னையன் போன்ற சந்தர்ப்பவாதிகளை தன்னுடன் வைத்திருந்தால் அது நிச்சயம் நடக்காது என்று தோன்றுகிறது.. எந்த நேரத்திலும் கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிடும் அளவிற்கு சூது வாது தெரிந்தவர்கள் பொன்னையன் போன்றவர்கள்.

கடந்த ஒன்பது மாதங்களாக மாநிலத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது.எந்தவொரு நலத்திட்டமும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அத்துனை விவசாயிகளின் உயிர் போன பின்பும் அவர்களுக்கான நிவாரணத் தொகை இன்னும் சென்றடையவில்லை.

நம் நிலைப்பாடு இதுதான்.பன்னீரோ , பழனிச்சாமியோ யார் வேண்டுமானாலும் வரட்டும். அடுத்த நான்கு வருடங்களுக்கு ஆண்டுவிட்டுப் போகட்டும். ஓட்டுப் போட்ட மக்களுக்கு வெறும் “பிரேக்கிங்” நியூஸை மட்டும் தராமல் அரசின் நல்ல திட்டங்களை விரைந்து செயல்படுத்தி நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கட்டும். அது வளர்மதி அக்காவாக இருந்தாலும் , C.K சரஸக்காவாக இருந்தாலும் நல்லது நடக்கும் என்றால் எதையும் தாங்கும் மனது அதையும் தாங்கி முழுமனதாக ஏற்றுக்கொள்ளும். அவ்வளவுதான்.

— கதிர் .

Advertisements
This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

One Response to ஆட்டம் முடிந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s