ஒரு பேனா உடைந்தது

16473140_10208398397374403_4636338521989253549_nஸ்வேதா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள்.இந்த வயதிலேயே சிறுகதை எழுதி புத்தகமாகக் கொண்டுவரும் அளவிற்கு அவளிடம் திறமை இருக்கிறது.”புலிக்குப் பிறந்தது பூனையாகுமா” என்பதை மிகச் சரியாக நிரூபித்திருக்கிறாள்.சில வாரங்களுக்கு முன்புதான் புத்தகம் வெளியானது , சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைத்திருக்கிறது.நேற்றைக்கு மண்ணை விட்டுச் சென்றாலும் , தன்னுடைய எழுத்தின் பிரதிபலிப்பாக தன் மகளை நன்றாக வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் அண்ணன் திரு.க.சீ.சிவகுமார் அவர்கள். பிற்காலத்தில் அவரைப் போலவே ஒரு சிறந்த எழுத்தாளராக வருவாள் ஸ்வேதா.

மகளைப் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பெருமையாகப் பேசினார் அண்ணன். மகள் எழுதிய புத்தகத்தை இன்னும் ஒரு 300-400 பிரதிகள் போட்டு பெங்களூரில் ஒரு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து புத்தகம் வெளியிடலாம் என்று ஆசையாகப் பேசினார்.அதற்காக எழுத்தாளர் வா.மணிகண்டனிடம் பேச வேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.

பெங்களூரில் நான் வசிக்கும் அதே குடியிருப்பில்தான் அண்ணனும் நேற்றைக்கு வரை வசித்தார்.நேற்று காலையில் அலுவலகம் செல்லும்போது கூட மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டுத்தான் சென்றேன். மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டார் என்ற செய்தி மாலை 6:30 மணிக்கு எனக்குக்கிடைத்தபோது நிலைகுலைந்துபோனேன்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கேஸ் சிலிண்டர் எங்களுக்குக் கொண்டுவருபவர் போன் செய்து “சிவகுமார் அண்ணன் வீட்டில் இருக்கிறாரா , அவருக்கும் சிலிண்டர் கொடுக்க வேண்டும்” என்று கேட்கிறார். மனித வாழ்க்கையை நினைத்தால் என்னென்னவோ தோணுகிறது.

நீயா , நானாவில் நிறைய முறை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறார் , எழுத்துலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் , திரைத் துறையில் நிறைய நெருங்கிய நட்பு வட்டாரம் வைத்திருப்பவர் என்று அவருக்கென்று சிறப்பு விஷயம் நிறைய உள்ளது. என்றைக்குமே தன்னை உயர்த்திப் பேசியதில்லை , நாம் அவரைப் புகழ்ந்தால்கூட ஒரு மெல்லிய சிரிப்போடு நகர்ந்துவிடுபவர்.

சீரியஸான விஷயத்தைக் கூட நக்கலாக எழுதி , சொல்ல வந்த கருத்தை அழகாகச் சொல்பவர். மிகவும் சிம்பிளாக இருந்த மனிதர். மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேசத்தெரியாதவர்.

எனக்கும் கொஞ்சம் எழுதத் தெரிகிறது என்றால் அதில் அவர் பங்கும் நிச்சயம் அதிகம். நல்ல புத்தகமாக இருந்தால் அவரே வீட்டிற்கு வந்து படிக்கச் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றதுண்டு. அவருக்குத் தெரியாத சிறிய விஷயமாக இருந்தாலும் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்துகொள்பவர்.

கறுப்புப் பண நடவடிக்கையில் இருந்து ஜல்லிக்கட்டு வரை சமீபத்தில் நிறையப் பேசியிருக்கின்றோம். ஒரு விஷயத்தை எதிர்க்கிறார் என்றால் அதற்கு தெளிவான ஒரு காரணத்தைச் சொல்லிவிடுவார்.

கீழே விழுந்து ரத்தம் கொட்டியதும் , அவருடைய சட்டைப் பையில் இருந்த பேனா ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு அப்படியே கீழே கிடந்தது. அவர் பிரிந்ததும் பேனாவும் அவரோடு ஒட்டிக்கொண்டது.

மனித வாழ்க்கையில் நொடிப்பொழுதில் என்னென்னவோ நடந்துவிடுகிறது. நம்மால் நம்பமுடியாத அளவிற்கு நடந்துவிடுகிறது. பிரேதப் பரிசோதனை நடந்த மருத்துவமனையில் ரயில் விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் கொண்டுவரப்பட்டது. மிகவும் கொடூரமான விபத்தாகத்தான் இருக்கும். முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அதைப் போலவே ஒரு குழந்தையையும் கொண்டு செல்கிறார்கள் என்றார்கள். வாழ்க்கையில் நானும் , நீங்களும் நினைப்பதைப் போல் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உயிர் இல்லை என்றால் எல்லோரும் ஒன்றுதான். அனைவருக்கும் ஆறடிதான்.

இரவு முழுவதும் மருத்துவமனையில்தான் அண்ணனின் பிரேதம் இருந்தது.இன்றைக்கு ஒரு மணிக்குத்தான் பிரேதப் பரிசோதனை முடிந்து பெங்களூரில் இருந்து கன்னிவாடிக்கு உடல் கொண்டுசெல்லப்படுகிறது. கடைசியாக அவரைப் பார்த்து இறுதி வணக்கத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வீடு வந்து குளித்துவிட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தால் அவருடைய லுங்கி இன்னும் கொடியில் காய்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்தான் இங்கில்லை.அதே லுங்கிக்கு அருகில் நின்றுகொண்டு அவர் எழுதிய, நான் சமீபத்தில் படித்த “நீலவானம் இல்லாத ஊரே இல்லை” புத்தகம் இன்னொரு முறை படிக்கிறீர்களா” என்று அவர் கேட்பதைப் போலத்தான் இருந்தது.

எங்கள் கொங்கு மண்ணின் மிகச் சிறந்த எழுத்தாளுமைகளில் ஒன்று மண்ணை விட்டுப் பிரிந்துவிட்டது .உங்களைப் போன்ற ஒரு நல்ல மனிதரோடு பழக எனக்கு வாய்ப்புக் கிடைத்ததே எனக்குப் பெருமைதான் அண்ணா. சென்று வாருங்கள். கண்ணீர் அஞ்சலி.

—- கதிர்.

Posted in நிகழ்வுகள் | 1 Comment