நீங்க நடத்துங்க ஜீ

3

பத்து நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கும், கர்நாடகாவின் சில பகுதிகளுக்கும் சென்றிருந்தேன். பெங்களூரில் இருந்து கோவை வந்த பிறகு மாதம் ஒரு முறையாவது அலுவலகப் பணிக்காக பெங்களூர் சென்று வருகின்றேன். செல்லும்போது மடிவாளாவில் இருக்கும்   நண்பன் ஜெயக்குமார் வீட்டில் தங்குவது வழக்கம். நான் பேச்சிலராக இருந்த காலத்தில் வசித்த அதே அப்பார்ட்மெண்டில்தான் நண்பன் வசிக்கின்றான். இன்றைக்குச் சென்றாலும் ஓனர் சில நிமிடம் நின்று பேசிவிட்டுத்தான் செல்வார். நாங்கள் பேச்சிலராக அங்கே குடியிருந்த காலத்தில் எப்படி நல்ல பிள்ளைகளாக இருந்திருக்கிறோம் என்பதை இந்த உலகிற்குச் சொல்வதற்காக இதைக் குறிப்பிட்டேன். சிரித்துவிட்டு மெய்ன் மேட்டருக்குச் சென்று விடுங்கள்.

பிப்ரவரி மாதம் பெங்களூர் நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது நண்பன் வசிக்கும் அந்தத் தெருவு உட்பட மடிவாளா மாருதி நகர் ஏரியாவில் வடிகால் அமைப்பு , சாலை சீரமைப்பு என்று பல திட்டங்களை ஜோராக செய்து கொண்டிருந்தார்கள். நண்பன் வசிக்கும் தெருவில் பெரிதாகப் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனாலும் அங்கேயும் ஆங்காங்கே ஏதேதோ குழி தோண்டி என்னென்னமோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். நண்பனிடம் கேட்க “எலெக்சன் வருதில்ல , அதான் பயங்கரமா வேல நடக்குது” என்றான். அப்பொழுது தேர்தல் தேதி எல்லாம் அறிவிக்கவில்லை.

இதைப் போலத்தான் பெங்களூர் மாநகரின் பல பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நலத்திட்டங்கள் வேகமாக நடந்தது. குறிப்பாக சாலை வசதி. நன்றாக இருந்த சாலையாக இருந்தாலும் சரி , நாசமாகப் போயிருந்த சாலையாக இருந்தாலும் சரி அனைத்தையும் சரிசெய்து புதிப்பித்துக்கொண்டிருந்தார்கள். சித்தராமையா தேர்தல் கணக்கை அப்பொழுதே வேகமாக ஆரம்பித்துவிட்டார். கணக்குப் பார்க்காமல் செலவு செய்தார்கள். நிறைய நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம் என்கிற மனநிலையை ஓரளவு மக்களிடத்தில் ஏற்படுத்தி இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. கிராமங்களிலும் ஏதோ செய்திருப்பார் போல் தெரிகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். எதிர்க் கட்சிகளை ஒன்றுசேர்த்துப் பேசி முடிவெடுத்தார். இப்படி தன்னை ஒரு தலைவனாக , மக்கள் பாதுகாவலனாகக் காட்டி நன்றாகவே ஸ்கோர் செய்தார்.

இது மட்டுமே இருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. நாங்கள் மடிக்கெரி சென்றிருந்தபோது அங்கு வசிக்கும் மக்கள் சிலரிடம் “இங்கு யார் வெற்றி பெறுவார்கள்” என்று கேட்டிருந்தோம். நாங்கள் கேட்ட பத்துப் பேரில் குறைந்தது ஆறு பேராவது காங்கிரஸ் போகணும் சார்” என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக பாரதிய ஜனதாதான் வரணும் என்றும் அவர்களால் சொல்ல முடியவில்லை. நாங்கள் சென்ற பகுதியில் விவசாயம் அதிகம் இல்லை. விவசாயத்தை அதிகம் நம்பியிருக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கி இருப்பதாகத்தான் தெரிகிறது. எது எப்படியோ தேர்தல் வரப்போகிறது என்பதற்கான பெரிய அறிகுறிகள் எதுவும் அங்கில்லை. நம் ஊரைப் போன்ற அட்டகாசங்கள் அதிகம் இல்லாமல்தான் அங்கு தேர்தல் பிரச்சாரம் நடக்கிறது. நான் சொல்வது பெரும்பாலான இடங்களில். சில இடங்களில் வேறு மாதிரியாகக் கூட இருக்கலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சித்தராமையா பெரிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் நம் மன்னர்களைப் போல் செயலற்றவராகவும் இருந்ததில்லை. அவரிடம் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தன்னை பவர்புல்லான ஆளாக காட்டிக்கொள்வதுதான். அவருடைய பேட்டிகளில் அவருடைய பேச்சுத் தொனியைப் பார்த்தாலே தெரியும். காங்கிரஸ் மேலிடத்திற்கே கூட நெருக்கடி கொடுப்பவராக இருப்பதாகவே சொல்கிறார்கள். எப்படி ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி காங்கிரசுக்கு சவாலாக இருந்தாரோ அப்படி.

இதில் இன்னுமொரு பழைய பகை வேறு இருக்கிறதாம். ஒரு காலத்தில் தேவே கவுடாவிடம் கை கட்டி நின்றவர்தான் சித்தராமையா. அவருடைய அபார வளர்ச்சி தேவே கவுடாவிற்கோ , குமாரசாமிக்கோ அறவே பிடிக்க வில்லை. தாங்கள் கர்நாடகத்தில் வளர முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக சித்தராமைய்யாவைத்தான் நினைக்கிறார்கள். இந்த முறையும் சித்தராமையா வந்துவிடக்கூடாது என்பதில் பாரதிய ஜனதாவைவிட கவுடா அண்ட் சன்ஸ் தீவிரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பா.ஜ.க கவுடாவோடு கை கோர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்தினாலும் வீழ்த்துவார்கள் என்ற பேச்சும் உண்டு. அதை எடியூரப்பா மறுத்தாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நாட்கள்தானே , பார்ப்போம்.

இப்படி ஏதாவது செய்து பா.ஜ.க கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் வரலாம். வந்துவிட்டால் ஏற்கனவே தமிழகத்திற்கு நிறைய நன்மைகள் செய்து கொண்டிருக்கும் மத்திய சர்க்காரோடு சேர்ந்து இன்னும் நிறையச் செய்வார்கள்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மோடி அய்யாவின் மீடியா விளம்பரங்களும் , பேச்சுக்களும் , அவர்கள் செய்த மார்க்கெட்டிங்கும் நன்றாக வேலை செய்தது.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நாயகனானார் மோடி.. எங்கள் பக்கத்து ஊரில் வசிக்கும் ஒருவரிடம் மோடி பிரதமர் ஆன சில நாட்களிலேயே பேசிக்கொண்டிருந்தபோது அவர் தான் பா.ஜ.க – வில் இருபது வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருப்பதாக பெருமைப்பட்டார். மோடி அவர்களை எல்லாம் அப்பொழுது ஏதோ வசியம் செய்திருந்தார். கட்சிப் பதவிகளுக்கு இளைஞர்கள் அப்பொழுது மிகவும் ஆர்வம் காட்டினர்.

இப்பொழுது சமீபத்தில் ஒரு பா.ஜ.க நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “என்ன பாஸ் , என்ன போஸ்டிங் கெடச்சிடுச்சா” என்று கேட்க “அட போங்க பாஸு , சும்மா இருங்க” என்று நொந்து கொண்டார். அவரிடம் இருந்த கட்சி ஆர்வம் குறைந்திருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் இன்றைக்கும் மோடி பக்தர்கள் நிறைய பேர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். எப்படியும் இங்கு அவர்கள் கால் பாதிக்க முடியாது என்று தெரிந்தும் அதே பக்தியோடு இருப்பது அவர்களுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. சிலர் மக்கள் முன்னால் போய் எப்படி நிற்பது என்று பயந்து பா.ஜ.க விடம் நெருங்குவதை தவிர்த்து வருகிறார்கள். இதை நீங்கள் பக்தர்களிடம் சொல்லிப்பாருங்கள் , இன்னும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.

வரலாற்றில் நினைவிருக்கும்படியான ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருந்தால் “நாங்கெல்லாம் அந்தச் சம்பவம் நடந்தபோது சின்னப் பசங்களா இருந்தோம் என்றோ பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தோம்” என்றோ சம்பவம் நடந்த காலகட்டத்தில் நாம் இப்படி இருந்தோம் அப்படி இருந்தோம் என்று பிற்காலத்தில் நம்மைச் சார்ந்தவர்களிடம் சொல்வோம். உதாரணமாக சுதந்திரம் கிடைத்தபோது நடந்த சம்பவங்களை உயிரோடு இருந்த/இருக்கும் பெரியவர்கள் நம்மிடம் சொல்லக்கேட்டிருப்போம். அப்படி பிற்காலத்தில் நாமெல்லாம் பலரிடமும் சொல்லிப் புலம்பும்படியான பல விஷயங்களை(நீட் தேர்வில் ஆரம்பித்து நிறைய இருக்கு) இன்றைக்கு தமிழ்நாட்டிற்குச் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலை ஊன்றவோ , கையை ஊன்றவோ வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றால் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் வந்து உளறிவிட்டுப் போய்க்கொண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.

கர்நாடகத்தைத் தவிர தற்போதைக்கு தெற்கில் அவர்களுக்கு வேலை அறவே இல்லை. கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு நடக்கப் போகும் நாடகங்களைப் பார்க்கக் கொஞ்சம் பொறுத்திருங்கள்.

—– கதிர்

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

Leave a comment