நான் இன்னும் இளைஞனா ?

124“இந்த தேதியில் பிறந்த தாங்கள் எந்தவொரு சூழ்நிலையையும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்கள் தேவையில்லாத விவகாரங்களில் தலையீடுகளை குறைத்துக் கொள்வது நல்லது”.அட , இந்தக் கருத்தை சத்தியமா நான் சொல்லவில்லை.தினமலரில் இருந்து சுட்டது .நீங்களும் கூட பார்த்திருக்கலாம்.ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாட்களுக்கும் பிறந்த நாள் ஆண்டு பலன் கொடுக்கப்பட்டிருக்கும்.சரி, நமக்கு இந்த வேலையே போதுமா இல்ல வேறு ஏதாவது தொழில் பண்ணலாமா என்று வடிவேல் சார் கிளி ஜோசியம் பார்ப்பது போல் நாமும் இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும் என்று தினமலர் சென்று எட்டிப்பார்த்தேன்.அவர்கள் குறிப்பிட்ட முதல் பாயின்ட் சரியா என்று மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.ஆனால் இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள பாயின்ட்டை நினைத்தால் சற்று குழப்பமாக இருக்கிறது.நமக்கு வீட்டுல ஓட்ட வாய்னு பேரு , ஆப்பீசுல எப்படின்னு இன்னும் என் காதிற்கு வரவில்லை(நிச்சயம் அவர்களும் அப்படித்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்) .இருந்தாலும் இதுவரை எவர் குடியும் என்னால் கெட்டதில்லை என்றே நம்புகின்றேன்.தமிழ் நண்பர்கள் சேர்ந்துவிட்டால் அலுவலகத்தில் வெட்டி நாயம் பேசுவது நிறைய நேரங்களில்.இப்பொழுது கொஞ்சம் உஷாராகி விட்டேன்.தேவையில்லாத விவகாரங்களில் தலையீடுகளை குறைத்துக் கொள்வது என்று.

பிறந்த நாள் ஒவ்வொருவரின் வாழ்வில் ஒரு ஆண்டு நிறைவுசெய்வதைக் கொண்டாடுவது.இதை அவரவர் வசதிக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிக்கொள்ளலாம்.நான் L.K.G படித்த பொழுது பாக்கெட்டில் ஒரு சீப்பு எப்பொழுதும் இருக்குமாம்.எனக்குக் கூட நினைவில்லை.ஆனால் ஊரில் அண்ணன் ஒருவர் இன்னும்கூட அதைச் சொல்லிக்காட்டி கிண்டலடிப்பதுண்டு.அப்படி அழகை மெய்ன்டெய்ன் செய்து கொண்டு வந்தவனுக்கு வருடா வருடம் இந்தப் பிறந்த நாள் வேறு வந்து வயதைக் கூட்டிக்கொண்டே போகிறது .அந்த வகையில் வருத்தப்படத்தானே வேண்டும் , ஏன் அதைக் கொண்டாடுகிறோம் என்று நான் இப்பொழுது கேள்வி கேட்டால் என்னருமைத் தோழர்கள் என்னை அமுக்கிவிடுவார்கள்.காரணம் , நான் அவர்களை விட புத்திசாலித்தனமாக யோசிக்கின்றேனாம் .பொறாமை பொறாமை , நம்ம அறிவு அப்படி , நான் என்ன செய்ய முடியும் மக்களே.

பிறந்தது முதல் இன்று வரை எனக்குத் தெரிந்து பிறந்த நாளிற்காக புத்தாடை வாங்கியதாகத் தெரியவில்லை.அதில் எனக்கு விருப்பமும் இல்லை.பெற்றோர்களிடமும் வாங்கிக் கொடுத்தே தீரவேண்டும் என்று ஒற்றைக் காலிலெல்லாம் நின்றதில்லை. அனைவரிடமும்(இந்த அனைவரில் என்னைச் சார்ந்த அனைவரும் அடங்குவர்) ஆசி வாங்குவதோடு சரி.பிறந்த நாளன்று காலையில் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்துவிடுவேன்.அவ்வளவுதான்.மற்றபடி வீட்டில் கேக் வெட்டுவது எல்லாம் நடந்ததில்லை.கல்லூரி நாட்களிலும் அலுவலகத்திலும் ஓரிரு முறை நடந்தது.அதுவும்கூட அவர்கள் விரும்பியதால்.மற்ற நண்பர்களின் பிறந்த நாளன்று அவர்கள் கொடுத்த சுவீட்டை வயிறு நிறைய தின்று ஏப்பமிட்டதால் நம் பிறந்தநாளன்று அவர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் அசிங்கமாக இருக்கும் என்று அதை வருடாவருடம் செய்வதுண்டு .அதே சுவீட்டை வீட்டு உறுப்பினர்களுக்கும் கொடுத்துவிடுவதுண்டு.

என்னுடைய பிறந்த நாட்கள் இப்படியே செல்லட்டும் , அதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது.அதற்காக , குழந்தைகளின் பிறந்த நாளையும் அப்படியே கொண்டாட வேண்டும் என்றில்லை. ஜெய்வந்த்தின் முதல் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்றாலும் கோவில் குலமெல்லாம் சென்றுவந்து வீட்டில் சில பல அலங்காரங்கள் எல்லாம் செய்து புத்தாடை உடுத்தி , உறவினர்கள் புடைசூழ கேக் வெட்டினார் ஜெய்வந்த்.பெரிதாக செலவு எதுவும் இல்லை.அடுத்த வருடம் அவனுடைய பிறந்த நாளில் அதுவும் கூட குறைந்துவிட்டது.கொஞ்சம் கேக் மட்டும் வாங்கி வந்து வெட்டியதோடு முடிந்துவிட்டது.அதில் வருத்தம் ஏதும் இல்லை.சந்தோசமே அதிகம்.ஆம் , பிறந்த நாளுக்காக ஆடம்பரமாக செலவிடுவது எல்லாம் தேவையற்றது என்று நினைத்து அந்தப் பணத்தை ஏதாவது கருணை இல்லம் , ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றிற்கு கொடுத்தால் என்ன என்று தோன்றியது.அப்படித் தோன்றியதை செயல்படுத்தியும் வருகிறேன் குழந்தைகளின் பிறந்த நாட்களில்.

ஊரில் “அன்பு இல்லம்” என்று ஒன்றை கோவில் நிர்வாகம் நடத்தி வருகிறது.அங்கே சுமார் ஐம்பது மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள்.நன்கு படிப்பவர்கள் , ஆனால் வசதி இல்லை.பெற்றோர்கள் இங்கே கொண்டு வந்து விட்டுப் போய்விட்டால் கோவில் நிர்வாகத்தின் மூலம் இலவச தங்குமிடமும் , உணவும் இவர்களுக்குக் கிடைக்கும்.இங்கேயே தங்கி ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம் பத்தாம் வகுப்பு வரை.இந்த அன்பு இல்லத்திற்கு நாம் கூட அன்னதானம் கொடுக்கலாம் நமக்கு விருப்பப்பட்ட நாளில்.ஜெய்வந்த் பிறந்த ஜனவரி 26 விடுமுறை தினம் என்பதாலும் அன்றைய தினம் மாணவர்களும் இருப்பார்கள் என்பதாலும் அவனுடைய பிறந்த நாளன்று சென்று எங்களால் முடிந்த ஒரு வேலை உணவு வழங்கிவிட்டு வருவதைத் தொடர்ந்து வருகிறோம்.அவனுடைய கடந்த பிறந்த நாளன்று என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அங்கே செல்லமுடியவில்லை , வேறொரு கருணை இல்லத்திற்கு சிறு பண உதவி செய்துவிட்டோம்.பிறந்த நாளையும் சிம்பிளாக முடித்துக் கொண்டோம். இன்னும் இரண்டு மாதத்தில் தன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடப்போகும் தன்வந்த்தின் பிறந்த நாளும் இப்படியே நடக்கும்.

அன்பு இல்லங்களிலும் , கருணை இல்லங்களிலும் இருக்கும் குழந்தைகளும் , முதியோர்களும் இன்முகத்துடன் கூறும் வாழ்த்துக்களை விட இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரியதாக எனக்குத் தெரியவில்லை.உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதத்தோடு சேர்த்து அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெரிதாக நினைக்கிறேன். இதை ஏன் இங்கே கூறுகிறேன் என்றால் , நான் ஏதோ பெரிய கொடைவள்ளல் என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அல்ல.அது எனக்குத் தேவையும் இல்லை.நீங்கள் பிறந்த நாளுக்குச் செலவு செய்யும் செலவை கொஞ்சம் குறைத்துக்கொண்டு சிறிதளவு தொகையை இல்லாதவர்களுக்கும் , ஆதரவற்றோர்களுக்கும் செலவு செய்யுங்கள்.அதில் நீங்கள் அடையும் ஆனந்தம் அளவற்றது.சரி , இப்படிப் பேசுகிறவன் இவன் பிறந்த நாளைக்கு என்ன செய்தான் என்று அங்கிருந்து ஒரு கேள்வி என்னை நோக்கி வருவதை உணர்கிறேன்.நான்தான் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லையே , இருப்பினும் என்னால் முடிந்த ஒரு நூறு ரூபாயை கோவிலுக்கு பூ விற்கும் அந்த வசதியற்ற பெண்மணிக்கு கொடுத்துவிட்டு வந்துவிட்டேன் கோவிலில் இருந்து வரும்பொழுது.ஆம் , “நேற்று  கதிர்வேலன் பிறந்த நாள்”.

35 வயதாகிவிட்டது.நான் இன்னும் இளைஞனா ?

——– அன்புடன் கதிர் @ https://www.facebook.com/kathir.bangalore.3

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.

2 Responses to நான் இன்னும் இளைஞனா ?

  1. maragatham says:

    vayadhu ethanai ayidinum petravarku kulandhai dhane.. valzhga kulandhai kathirum sutramum..

    Liked by 1 person

Leave a comment